அரசியல்வாதிக்கும், தொழிலதிபர்களுக்கும் அங்க என்ன வேலை? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

0
73

தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து, வட்டெறிதல் வீராங்கனை நித்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், கடந்த ஜனவரி 19ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டும், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை நியமிக்க கூடாது என உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தரப்பில், அதன் செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த உத்தரவில் என்ன தவறு உள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன தொடர்பு எனவும், விளையாட்டு வீரர்களுக்கான வசதிகளை அவர்கள் பறித்துச் செல்லவே விளையாட்டு சங்கங்களுக்குள் நுழைகின்றனர் என்றும் தெரிவித்தனர்.

அணிக்காகவும், மாநிலத்துக்காகவும், தேசத்துக்காகவும் விளையாடும் வீரர்கள் மிக மோசமான முறையில் நடத்தப்படுவதாகவும், போட்டிகளில் கலந்து கொள்ள செல்லும் வீரர்களுக்கு முறையான வசதிகள் செய்து கொடுக்கப்படுவதிவல்லை எனவும் நீதிபதிகள் கூறினர்.

பயிற்சியாளர்களின் நடத்தை குறித்து நீதிமன்றத்தில் கூற முடியவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களை, விளையாட்டு சங்கங்களுக்கு தலைவராக ஏன் நியமிக்க வேண்டும் எனவும், விளையாட்டு வீரர்கள் அல்லாதவர்கள் ஏன் இச்சங்கங்களில் நுழைய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry