3.00 Mins Read : தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை அமைக்க செலவிடப்பட்ட பணம், சுங்கச் சாவடிகள் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே பொதுமக்களிடமிருந்து திரும்பப் பெறப்பட்டுவிட்டது. இருப்பினும், அந்த சுங்கச் சாவடிகளை அகற்றாமல், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ToT மற்றும் InvIT போன்றவை மூலம் சுங்கச் சாவடிகளுக்கான கட்டண வசூலுக்கான நீட்டிப்பு தந்து வருகிறது. சுங்கச் சாவடிகள் பணம் சுரக்கும் பசுக்களாக NHAI கருதுவதால், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு சுங்கச்சாவடியின் சுமைக்கு முடிவே இருக்காது.
நெடுஞ்சாலை அமைப்பதற்கான திட்டப்பணம் அதாவது செலவிடப்பட்ட பணம் வசூலிக்கப்பட்ட பிறகும், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க, டோல்-ஆபரேட்-டிரான்ஸ்ஃபர் (ToT- டோல் இயக்க பரிமாற்றம்) மற்றும் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் (InvIT- உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை) ஆகிய இரண்டு முறைகளை NHAI பின்பற்றுகிறது. பாஜகவைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் காலவதியான சுங்கச்சாவடிகளை நீட்டிக்க ஆட்சேபனை தெரிவித்தபோதிலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) தமிழ்நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளை பணமாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை 38ல்(NH-38) திருச்சி-துவரங்குறிச்சி-மதுரை வழித்தடம் ரூ.419 கோடி செலவில் அமைக்கப்பட்டது. 2010ல், சுங்கச்சாவடி கட்டண வசூல் துவங்கியதில், பூதக்குடி மற்றும் சிட்டம்பட்டி சுங்கச்சாவடிகளை சேர்த்து, கடந்தாண்டு நவம்பரில், 1,202 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. ரூ.446 கோடி செலவில் அமைக்கப்பட்ட சென்னை புறவழிச்சாலை, சென்னைவாசிகளுக்கு அருகிலேயே உள்ளது. மார்ச் மாத நிலவரப்படி, சென்னை புறவழிச்சாலையில் மாநகராட்சி எல்லைக்குள் வரும் வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே ரூ.1,341 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு மேம்பாடு என்ற பெயரில் பொதுமக்களை சுரண்டுவதாக பல்வேறு விமர்சனங்கள் இருந்தபோதும், சுங்கவரி வசூல் இப்போதைக்கு முடிவடையப் போவதில்லை. நீட்டிப்பு அடிப்படையில் பெரும்பாலான இடங்களில் பயணிக்க லாயக்கற்ற சாலைகளுக்குக்கூட சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 228 கி.மீ. நீளமுள்ள மூன்று நெடுஞ்சாலைகளை கட்டண-இயக்க பரிமாற்ற (ToT) முறையின் கீழ் கட்டணம் வசூலிப்பதற்கான டெண்டர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது. இதே முறையின் கீழ் கட்டணம் வசூலிக்க சென்னை புறவழிச்சாலை பரிசீலனையில் உள்ளது.
124.8 கி.மீ. தொலைவிலான திருச்சி-துவரங்குறிச்சி-மதுரைப் பிரிவு, பூதக்குடி மற்றும் சிட்டம்பட்டி சுங்கச்சாவடிகள் உள்பட, தேசிய நெடுஞ்சாலை 83ன், திருச்சி-தஞ்சாவூர் பிரிவில், வாழவந்தான் கொட்டாய் சுங்கச்சாவடிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை 38ன் மதுரை-தூத்துக்குடி பிரிவில் எலியார்பதி, புதூர்பாண்டியாபுரம் மற்றும் வாகல்குளம் சுங்கச்சாவடிகள் ஆகியவை கட்டண வசூலின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன.
திட்டச் செலவு வசூலிக்கப்பட்டுவிட்ட ஆறு சுங்கச்சாவடிகளில், ஐந்துக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. வாகைக்குளம் சுங்கச்சாவடி மட்டும் திட்டச்செலவான ரூ.349 கோடியில், ரூ.188 கோடியை வசூலித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 7 இன் மதுரை முதல் கன்னியாகுமரி வரையிலான 243 கி.மீ தூரமுள்ள சுங்கச்சாவடிகளையும், கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளையும் 2020 அக்டோபர் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு NHAI அமைப்பு நீட்டிப்பு வழங்கியுள்ளது.
Also Read : ஐடி ஊழியர்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சனைகள்! ஊழியர்களின் ஆரோக்கியத்தை உறிஞ்சும் ஐ.டி. நிறுவனங்கள்!
தமிழ்நாட்டில் 32 சுங்கச்சாவடிகளை மூட தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் NHAI அவற்றை மூட மறுத்ததுவிட்டது. மேலும், சலுகை காலம் முடிந்த பிறகு பயனர் கட்டணத்தை 40 சதவீதமாகக் குறைக்க வேண்டிய தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளையும் நீக்கியுள்ளது. மாநில அரசால் மூடப்பட வேண்டிய ஐந்து சுங்கச் சாவடிகளில், சென்னை புறவழிச்சாலையில் உள்ள வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகள் மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளது. ஆனால், அவை இன்னும் மூடப்படவில்லை. இதற்கிடையில், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்தாலும், மாநில அரசு, அதன் பங்கிற்கு, சென்னை வெளிவட்டச் சாலையின் 60.5 கி.மீ நீளத்தை ToT முறையில் கட்டண வசூல் செய்து ரூ.1,800 கோடி வருவாய் ஈட்டவுள்ளது.
ஒற்றப்படை எண்களில் குறிப்பிடப்படும் தேசிய நெடுஞ்சாலைகள்(உதாரணமாக : NH 2, NH 32, NH 40) கிழக்கு – மேற்கு, மேற்கு – கிழக்கு திசைகளையும், இரட்டைப்படை எண்களில் குறிப்பிடப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் (உதாரணமாக : NH 3, NH 7) வடக்கு – தெற்கு, தெற்கு – வடக்கு திசைகளில் உள்ள நெடுஞ்சாலைகளையும் குறிக்கும். சுங்கக் கட்டணத்தைப் பொறுத்தவரை, சென்னை – கோவைக்கும், சென்னை – மதுரைக்கும் காரில் சென்றுவர சுமார் 2 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது.
அதாவது NH 38ல் திருச்சி – துவரங்குறிச்சி – மதுரை வரையிலான 128.4 கி.மீ. துர நெடுஞ்சாலையில், பூதக்குடி – சிட்டம்பட்டி என இரண்டு ஊர்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்தச் சாவடிகளை அமைப்பதற்கான திட்டச் செலவு ரூ.419 கோடி ரூபாய். ஆனால் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள தொகை ரூ.1,202 கோடி ரூபாய். NH 83ல் திருச்சி – தஞ்சாவூர் இடையேயான நெடுஞ்சாலையில் வாழவந்தான் கோட்டை என்ற இடத்தில் சுங்கச்சாவடி உள்ளது. இதை அமைப்பதற்கான திட்டச்செலவு ரூ.331 கோடி ஆன நிலையில், இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள தொகையோ ரூ.464 கோடி.
இதேபோல், NH 38ல் மதுரை – தூத்துக்குடி – திருநெல்வேலி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில், இளையார்பதி மற்றும் புதூர்பாண்டியபுரம் என இரண்டு இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்தச் சாலைக்கான திட்டச் செலவு ரூ.920 கோடி. இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள தொகை ரூ.1073 கோடி. குறிப்பிட்ட கால இடைவெளியில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர். மட்டுமல்லாமல், இந்தக் கட்டண உயர்வு, கீழ் நடுத்தர, ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, குத்தகைக் காலம் முடிந்த சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
With Input DT Next
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry