3 Minutes Read : மாணவர்களிடத்தில் பேசிப் பேசியே வளர்ந்ததுதான் திராவிட முன்னேற்ற கழகம். தற்போது திமுக ஆட்சி அதிகாரத்தில் உள்ள நிலையில், கர்நாடக ஹிஜாப் விவகாரத்தை முன்வைத்து, பாஜக எதிர்ப்பு – ஆதரவு என்ற பெயரில் தமிழ்நாட்டில் மத துவேஷங்கள் விதைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று கர்நாடக அரசு கடந்த 5-ந் தேதி, கர்நாடகா கல்விச் சட்டம் 1983ன் பிரிவு 133(2)ஐ மையப்படுத்தி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. “அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், அரசு பரிந்துரைத்துள்ள சீருடை மட்டுமே அணி வேண்டும், தனியார் கல்வி நிர்வாகங்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் சீருடை குறித்து முடிவெடுக்கலாம். அனைத்து மாணவர்களும் சீருடை அணிந்து, பாகுபாடு இல்லாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்” என்பதே அந்த உத்தரவின் சாராம்சம்.
இந்த உத்தரவை கேள்விக்கு உள்ளாக்கும் விதமாக, உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்பூர் அரசு பியூ கல்லூரியில், 6 இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்கள் வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. `ஹிஜாப்’ அணிவது எங்கள் உரிமை எனக்கூறி அந்த 6 மாணவிகளும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை, இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 25 முதல் பிரிவு 28 வரை வழங்குகிறது. சட்டப் பிரிவு 25, சுதந்திரமாக மதத்தை அறிவிக்கவும், பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும் அனுமதிக்கிறது. ஆனால் இது முழு சுதந்திரம் அல்ல, அதில் நிபந்தனைகள் உள்ளன. பிரிவு 25 (A)-ன் படி, பொது ஒழுங்கு, ஒழுக்கம், சுகாதாரம் மற்றும் மாநிலத்தின் பிற நலன்களுக்காக இந்த உரிமையின் மீது அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.
இஸ்லாத்தின் ஒரு அங்கமாக இருந்தால் மட்டுமே ஹிஜாப் அணிவதை மத சுதந்திரமாக கருத முடியும். ஆனால் நீதிபரிபாலனங்கள் இதை இன்னமும் இறுதி செய்யவில்லை. உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வுதான் இதைப்பற்றி முடிவெடுக்கும் இடத்தில் உள்ளது. ஹிஜாப் அணிய உரிமைகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஒரு சில விஷமிகள்தான் பிரச்சனையை வேண்டுமென்றே பெரிதாக்குவதாக கூறியுள்ளது. கேரளாவிலும் இதுபோன்ற பிரச்சனை எழுந்தது. 2018 ஆம் ஆண்டு ஹிஜாப் அணிய அனுமதி கோரிய தனியார் பள்ளி மாணவர்கள் இருவரின் மனுவை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஹிஜாப் பிரச்சனைக்கு தற்போது வேறுவடிவம் கொடுக்கப்பட்டுவிட்டது. பாஜக எதிர்ப்பு – மோடி எதிர்ப்பு என்ற கோணத்தில் எதிர்க்கட்சிகள் இதை நகர்த்த, அவர்களுக்குப் போட்டியாக, பாஜக ஆதரவாளர்கள், மோடி அனுதாபிகள் இந்த விஷயத்தை கையிலெடுத்துள்ளனர். அதாவது மதச்சூட்டைக் கிளப்பி அரசியல் செய்ய பல கட்சிகளும் களமிறங்கிவிட்டன. கல்விக்கூடங்கள், மாணவர்களின் கல்விச்சூழல் பற்றிய கவலை அவர்களுக்கு இரண்டாம்பட்சமாகி விட்டது.
அல்லாஹ் அக்பர், ஜெய் ஸ்ரீராம், ஜெய் பீம் முழக்கங்கள் கல்லூரி வளாகத்துக்குள் எழுப்பப்படுகின்றன. இரு தரப்பு மத அடிப்படைவாதிகளின் லாபத்துக்கு மாணவர்கள் சமுதாயம் இரையாகத் தொடங்கிவிட்டது. இந்து அடிப்படைவாதிகள் மாணவர்கள் காவி துண்டு வழங்க, மதச்சார்பின்மை என்ற போர்வையில் மறைந்துள்ள அம்பேத்கரியவாதிகள், மாணவர்களுக்கு நீலத் துண்டு அணிவித்து அனுப்பினர். மத ரீதியாக மாணவர்களின் உணர்ச்சி தூண்டப்பட, தேசியக் கொடி ஏற்றும் கம்பத்தில், அவர்கள் காவிக்கொடியை ஏற்றுகின்றனர். மாணவர்களின் ஊடாகச் செய்யப்படும் இதுபோன்ற மதப் பிரச்சாரம் சமூக சீர்கேட்டுக்கான அச்சாணி.
பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியில், மதத்தின் பெயரால், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களும் உணர்வுப் பொறியை பற்றவைக்கின்றனர். இதே நேர்க்கோட்டில்தான் காங்கிரஸும் இருக்கிறது. பிரியங்கா காந்தி, கனிமொழி போன்ற தலைவர்கள் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவுக்குரல் கொடுத்துவிட்ட பிறகு, மாணவர்கள் காவி மற்றும் நீல நிற துண்டுகள் அணிவதை அவர்களால் எப்படி விமர்சனத்துக்கு உட்படுத்த முடியும். தமிழ்நாட்டில் இந்தப் பிரச்னை இன்னும் வராமல் இருக்கிறதே என கமல்ஹாசன் கவலைப்படுகிறார். “பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது,” என்கிறார்.
கேரளாவில் கிறிஸ்துவ கல்வி நிறுவனம் ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுத்தபோது, அது அரசியலாக்கப்படவில்லை. காஞ்சிபுரத்தில் கிறிஸ்தவ பள்ளியொன்றில் ருத்ராட்சம் அணிந்த மாணவர்களை வகுப்பறைக்குள் நுழைய விடாமல் தடுத்தபோது, அது அரசியலாக்கப்படவில்லை. சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியில் இந்து கடவுள்களை அவமதித்து வைக்கப்பட்ட ஓவியங்கள் அரசியலாக்கப்படவில்லை. சமீபமாக, திருக்காட்டுபள்ளி கிறிஸ்தவ பள்ளியில் +2 மாணவி தற்கொலை, இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
மேற்கண்ட பிரச்னைக்கு வாய்மூடி மவுனித்து இருந்தவர்கள்தான், இப்போது களப்போராளிகளாக உருவெடுத்து ஆனந்த நர்த்தனம் ஆடுகின்றனர். கர்நாடகாவிலும், மத்தியிலும் பாஜக ஆட்சி நடப்பதால், ஹிஜாப் விவகாரத்தை தேசியப் பிரச்னை ஆக்குவதற்கான மெனக்கெடல்கள் வேக வேகமாக நடந்து வருகிறது. எதிர்ப்பு அரசியல் என்ற பெயரில், மாற்று மதத்தின் மீது மாணவர்களிடம் துவேஷத்தை ஏற்படுத்துவதும், அதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து பெரும்பான்மை மதத்தினர் எதிர்வினையாற்றுவதும், எதிர்கால சமுதாயத்தை உளவியல் ரீதியாக சிதைத்துவிடும், சமத்துவத்தை, சகோதரத்துவத்தை சின்னாபின்னமாக்கிவிடும்.
கல்வி நிறுவனங்களுக்கு ஒரே மாதிரியான ஆடைக் கட்டுப்பாடு விதிப்பதில் என்ன பிரச்சனை?, பர்தா ஒரு வழக்கம் என்றால், ஏன் ஹிஜாப் கூடாது? பள்ளிக்கு, சட்டப்படி ஹிஜாப் அணிந்துவர அனுமதியில்லை என்றபோது, அதை மீறி அந்த 6 மாணவிகளுக்கும் ஹிஜாப் அணிவித்து அனுப்பியது யார் தவறு?, பள்ளி நிர்வாகம் – பெற்றோர் என முடிந்திருக்க வேண்டிய விஷயத்தை, பொதுவெளிக்கு கொண்டுவந்து, மத உணர்ச்சியை தூண்டிய ஊடகங்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படாதது ஏன்? அப்படியானால் மதத்தின் பெயரால் எழும் பதற்றத்தை அரசியல் கட்சிகள் விரும்புகின்றனவா?
மத நம்பிக்கை என்பது வேறு, மத வெறி வேறு. மதவெறி, எந்த மதத்துடன் தொடர்புடையதாக இருந்தாலும் உதாசீனப்படுத்தப்பட வேண்டும், ஒடுக்கப்பட வேண்டும். கல்விக்கூடங்களை மத வெறிக்கு எதிரான போராட்ட களமாக மாற்றுவது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். டிஆர்பி என்ற ஒன்றுக்காக, சில ஊடகங்கள் மத அடிப்படைவாதிகளின் பின்னால் ஓடுவதை நிறுத்த வேண்டும்.
– பத்திரிகையாளர் ‘கோ’
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry