3 Minutes Read: – “Breaking Bad” என்ற சீரிஸின் கருவைக் கொண்டு, மகான் என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ஹீரோவுக்கு காந்தி மகான் என பெயர் வைத்துவிட்டு, காந்தியத்தை மொத்தமாக போட்டு காலில் மித்திருக்கிறார் இயக்குநர்.
தவறுகள் செய்ய அனுமதிக்காத சுதந்திரம் சுதந்திரமே அல்ல – காந்தி, இப்படியானதொரு கார்டை போட்டுவிட்டுத்தான் படத்தை தொடங்குகிறார். போதை, சூது போன்றவற்றுக்கு நேர் எதிரானவர் தேசத்தந்தை மகாத்மா காந்தி. ஆனால், படத்தில் சிகரெட், சாராயம் இல்லாத காட்சிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இயற்கை சாராயம், ஆரோக்கிய சாராயம் என படத்தின் தொடக்கமே அமர்க்களமாக கிக்காக இருக்கிறது. பள்ளி சிறுவர்கள் பணம் வைத்து சீட்டு ஆடுகிறார்கள், சாராயம் குடிக்கிறார்கள். காந்தியடிகளே தப்புப் பண்ணி கத்துக்கிட்டுத்தான் மகாத்மா ஆனார் என ஒரு கேரக்டர் வியாக்யானம் பேசுகிறது. சுதந்திரப் போராட்டத் தியாகி, மதுவிலக்கு போராளி என அறிமுகப்படுத்தப்படும் ஹீரோவின் அப்பா, ஆகஸ்ட் 16-ல் பிறந்த தன் மகனுக்கு ஆகஸ்ட் 15ல் பிறந்ததாக மாற்றி பர்த் சர்டிபிகேட் வாங்கினேன் என்கிறார். இது தியாகி செய்யும் வேலையா? என நமக்கு கேள்வி எழலாம், டைரக்கடருக்கு எழவில்லை.
இதெல்லாம் படத்தின் பெயர், நடிகர்கள் பெயர் ஓடும்போது நடப்பவை. ஹீரோ காந்தி மகான்(விக்ரம்) சிறுவயது முதலே மது ஒழிப்பு, அகிம்சை என காந்தியக் கொள்கைகள் புகுத்தப்பட்டு வளர்க்கப்பட்டவர். காமர்ஸ் ஆசிரியரான விக்ரம் 40 வயதாகியும், மனைவி நாச்சி(சிம்ரன்), மகன் தாதாபாய் நவ்ரோஜி(துருவ் விக்ரம்) உடன் வெட்டோத்தியாக வாழ்கிறார். ஜனகராஜ் காமெடியை நினைவுபடுத்தும் விதமாக மனைவியும், மனனும் ஊருக்குப்போக, நம்ம காந்தி மகான் லாட்டரி வாங்குகிறார், பாரில் போய் குடிக்கிறார். அங்கு தனது பால்ய காண நண்பன் சத்யவான் சூசையப்பன் (பாபி சிம்ஹா), அவரது மகன் ராகேஷ் கிறிஸ்டோபர் (சனத்) ஆகியோரை சந்திக்கிறார். மீண்டும் குடிக்கிறார், சீட்டாடுகிறார். காந்தி மகான் என்ற பெயரே தனக்கு பிரச்சனை என புலம்புகிறார்.
காந்தி மகான் குடித்ததை அறிந்த மனைவி, தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அதன்பிறகு நமது ஹீரோ காந்தி மகான் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. நண்பனோடு சேர்ந்து சாராய ஆலை தொடங்குகிறார், கேசினோ ஆரம்பிக்கிறார், கோடிகளில் புரளுகிறார். Safe ஆன தொழில் எந்த சாம்ராஜ்யத்தையும் உருவாக்காது என பாடம் வேறு எடுக்கிறர். விஜய் மல்லையா போன்று அவதாரமெடுக்கிறார்.
அரசு மதுபானக் கடைக்கு தங்கள் நிறுவன மதுவிற்க ஒப்பந்தம், ஐ.ஏ.எஸ். அதிகாரியை கொலை செய்வது என பெயருக்கு ஏற்றார்போல எந்த வேலையையும் காந்தி மகான் செய்யவில்லை. சத்யவான் சூசையப்பனும், காந்தி மகானும் தங்களது பால்ய நண்பனான ஞானோதயத்தை(முத்துகுமார்), தொழிலுக்கு உதவுவதற்காக அரசியலில் வளர்த்துவிடுகிறார்கள். துணை முதல்வராக உயரும் அந்த நண்பன், இருவருக்கும் எதிராக திரும்புகிறார். திடீரென போலீஸ் ரூபத்தில் எதிரியாக வந்து நிற்கிறார் காந்தி மகானின் மகன்.
பிரிந்து போன மனைவியை சந்திக்கிறார் காந்தி மகான். இவர்களது சாம்ராஜ்யத்தை ஒழிக்க துணை முதல்வர் உத்தரவுப்படி, என்கவுண்ட்டர் செய்யத் தொடங்குகிறார் காந்தி மகானின் மகன். காந்தி கேங்கைச் சேர்ந்த மைக்கேல் அடுத்து அந்தோணி ஆகியோரை குருவியைப் போல சுட்டுத் தள்ளுகிறார் போலீஸ் அதிகாரி தாதா. அடுத்து, சத்தியவானின் மகன் ராக்கியை காந்தி மகான் கண் எதிரிலேயே சுட்டுத்தள்ளப்படுகிறார். இதையடுத்து, அப்பனும், மகனும் கட்டிப்புரண்டு சண்டையிடுகின்றனர்.
நண்பனிடமிருந்து மகனை காப்பற்ற எத்தனிக்கிறார் காந்தி மகான். மகனை கூட்டிக்கொண்டு வேறு ஊருக்கு செல்லுமாறு மனைவியிடம் கூறுகிறார். உங்களை மாதிரி ஆட்கள்தான் காந்தியையும், காந்தியத்தையும் அழிச்சீங்க என மனைவியடம் பஞ்ச் வசனம் பேசுகிறார் நம்ம மகான். ஒரு கட்டத்தில் மகனுக்காக நண்பனை காந்தி மகான் கொலை செய்ய, மகன் சென்டிமென்ட் என தான் போட்ட சூழ்ச்சி திட்டம் கச்சிதமாக நடந்துவிட்டதாக தந்தையிடம் கொக்கறிக்கிறார் போலீஸ் அதிகாரியான மகன்.
அதேபோல் சூழ்ச்சி செய்து, தனது நண்பனான துணை முதல்வரை மகன் மூலமாக கொலை செய்ய வைத்து, அவனை ஜெயிலுக்கு அனுப்பியதை பெருமையாகக் கூறுகிறார் நம்ம காந்தி மகான். படத்தில் இறுதியில் குடியை அடியோடு வெறுத்த மகனும் குடிக்கிறான், அப்பாவான காந்தி மகனோ ஒடு சொட்டு கூட மிச்சம் வைக்காமல் குடிக்கிறார். படம் நெடுக, விக்ரம் – பாபி சிம்ஹா – சனத் ஆகியோர் சிகரெட் புகைக்கிறார்கள், குடிக்கிறார்கள். இவர்கள் இல்லாத காட்சிகள் சொற்பமே. முழு நேர குடிகாரனுக்கு பெயர் காந்தி மகான்.
சத்யவான் சூசையப்பன், ராகேஷ் கிரிஸ்டோபர், அந்தோணி, மைக்கேல், ஞானோதயம் என பெயர்களை தேர்வு செய்து, குறிப்பிட்ட மதத்தை இயக்குநர் இழிவு செய்துவிட்டாரோ? என்ற கேள்வி எழுகிறது. ‘மது அருந்துதல் என்பது தற்கொலைக்கு சமம்’ என்றார் காந்தி. ஆனால் அவரது பெயரை முழுநேர குடிகாரன் கேரக்டருக்கு சூட்டியதுடன், நேர்மையாக வாழ்பவர்கள் காந்தியத்தை அழித்தவர்கள் என வசனம் வேறு வைத்திருக்கிறார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் காந்தியை மதிப்பதில்லை, இழிவு செய்கிறார்கள் என காங்கிரஸ் கூறிவருகிறது. காந்தியை இழிவு செய்யவே பட்டேல் சிலையை மோடி அமைத்ததாக திருமாவளவனும் குற்றஞ்சாட்டியிருந்தார். இவர்கள் யாருமே இந்தப்படத்தைப் பற்றி வாய்திறக்கவில்லை.
காந்தி ஜெயந்தியன்று இந்தியா முழுதும் மதுக்கடைகள் மூடப்படும். மறுநாள் காந்தி படம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளுடன் மதுக்கடை வாசலில் நமது குடிமகன்கள் வரிசைகட்டி நிற்பார்கள். திமுக அடை காப்பதால், தமிழகத்தில் காங்கிரஸ் என்ற கட்சி இருப்பது தெரிகிறது. அவ்வாறு இருக்கும்போது, தமிழ்நாடு காங்கிரஸ்காரர்கள், காந்தியை, காந்தியத்தை இழிவுபடுத்தியது ஏன்? பள்ளி மாணவர்கள் குடிப்பதுபோல, சூதாடுவது போல காட்சிகளை வைக்கலாமா? என சத்தமில்லாமல், டைரக்டர் கார்த்தி சுப்புராஜின் காதில், வாயை வைத்து சொல்லக்கூட அஞ்சுவார்கள்.
தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பின்னரே மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. அந்த முடிவை அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி 1971-ல் எடுத்தபோது, கொட்டும் மழையிலும் அவரை வீட்டிற்கே சென்று சந்தித்து, மன்றாடினார் முதுபெரும் தலைவர் ராஜாஜி என்பது வரலாறு. ஆனால், தேர்தல் வரும்போதெல்லாம், மதுவிலக்கு என்ற பிரச்சாரத்தை திமுக முன்னெடுக்கும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry