Saturday, January 28, 2023

லாவண்யா வழக்கை சிபிஐ விசாரிக்கலாம்! தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு! உச்ச நீதிமன்றம் அதிரடி!

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைத்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது திமுக அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி களைக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பதற்கு ஒருநாள் முன்பு நீதிபதி முன் அளித்த வாக்குமூலத்தில் விடுதிக் காப்பாளர் தன்னை துன்புறுத்தியதாகவும், மதமாற்ற வற்புறுத்தல் பற்றியும் குறிப்பிடிருந்தார். இதனடிப்படையில், விடுதிக் காப்பாளரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. ஜாமினில் வெளியே வந்த அவரை திமுக எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் சிறைச்சாலை வாயிலுக்கே சென்று சால்வை போற்றி வரவேற்றார்.

முன்னதாக, உயிரிழந்த பள்ளி மாணவியின் தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். பள்ளியில் மதம் மாற சொல்லி வற்புறுத்திய காரணத்தினால் தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், முறையான வகையில் புலானாய்வு விசாரணையை மேற்கொள்ள தமிழக அரசின் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்றும் தனது மனுவில் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஜி.ஆர்.சாமிநாதன், வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு ஜனவரி 31ஆம் தேதி சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் சில கருத்துக்களையும் அவர் தெரிவித்திருந்தார். உதாரணமாக, பள்ளி இருக்கும் ஊரின் பெயர் மைக்கேல்பட்டி என்று இருப்பதாக குறிப்பட்ட அவர்,  ஊரின் பெயரை வைத்துக் கொண்டு கூட பள்ளியில் மதமாற்றத்திற்கான முயற்சி நடைபெறலாம் என்பதை ஊகிக்க முடிகிறது என்று குறிப்பிட்டார்.

கிறத்தவர்களின் புனித நூலான பைபிளைச் சுட்டிக்காட்டி, அதில் மதப் பிரசாரம் செய்வது கிறித்துவர்களின் கடமை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, மதமாற்றத்திற்கான முயற்சி பள்ளியில் நடைபெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், இந்தியில் சுதிர் மிஸ்ரா இயக்கிய ‘சீரியஸ் மென்’,  தமிழில் பாலசந்தர் இயக்கிய ‘கல்யாண அகதிகள்’ உள்ளிட்ட  திரைப்படங்களில் வரும் உரையாடல்களையும், தஞ்சை பள்ளி மனைவி தற்கொலை வழக்கோடு இணைத்து பேசினார்.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடக் கோரிய தீர்ப்பை எதிர்த்தும், வழக்குத் தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் தெரிவித்த சில கருத்துக்களை திரும்ப பெறவேண்டும் எனவும் மாநில டிஜிபி மூலம் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து, மாணவியின் தந்தை முருகானந்தம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

Also Read : தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு! சிபிஐ விசரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு!

தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, “மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தடை இல்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், சி.பி.ஐ விசாரணைக்கு எதிரான தமிழக அரசின் இந்த வழக்கில் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மாணவின் தந்தை முருகானந்தத்திற்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கு மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles