தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு! சிபிஐ விசரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு!

0
138

தஞ்சை திருக்காட்டுப்பள்ளி +2 மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை ஐகோர்ட் சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் மகள், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல் நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி, அதே பள்ளியில் +2 படித்து வந்தார். கடந்த மாதத்தில் அந்த மாணவி விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும், தம்மை மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தியதால் விஷம் குடித்ததாக மாணவி கூறும் வெளியான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது.

அதேபோல், குடும்ப சூழ்நிலையால் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், பள்ளி விடுதி காப்பாளர் தன்னை அதிக வேலை வாங்குவதாகவும் இதனால் படிப்பில் கனம் செலுத்த முடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்ததால் சரியாக படிக்க முடியாது என நினைத்து தான் விஷம் குடித்ததாகவும் மாணவி கூறும் மற்றொரு வீடியோவும் வெளியானது.

இந்த விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், மதம் சார்பான பிரசாரங்கள் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் செய்யப்படவில்லை. மாணவியின் தற்கொலைக்கு கட்டாய மதமாற்ற துன்புறுத்தல் காரணம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தனது மகளின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மாணவி தற்கொலை வழக்கை கடந்த 31-ம் தேதி சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

Also Read :- தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு! பெற்றோரிடம் விசாரித்த பாஜக குழு!

இந்த நிலையில், தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிஜிபி பெயரில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜோசப் எஸ். அரிஸ்டாட்டில், மாணவி தற்கொலை வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சிபிஐயிடம் ஒப்படைப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று வாதிட்டார்.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்துள்ள மனுவில், “ஜனவரி 21, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளுக்கு, இடைக்கால தடை விதிக்க வேண்டும். தனி நீதிபதியின் சில அவதானிப்புகளை நீக்குவதற்கு, போலீஸ் விசாரணையை “தள்ளுபடி செய்ய” முயன்றது உட்பட, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற ஜனவரி 31-ம் தேதி பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாணவியின் தந்தை முருகானந்தம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கேவியட் மனுவில், தனது மகள் தற்கொலை விவகாரம் தொடர்பாக யாரேனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் தனது தரப்பையும் கேட்ட பிறகே எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான மன அழுத்தத்தில் இருப்பவர்கள், தற்கொலை எண்ணம் ஏற்படுவோர், SNEHA தற்கொலை தடுப்பு மையம் – 044 2464000, மாநில தற்கொலைத் தடுப்பு மையம் – 104ஐ தொடர்பு கொள்ளவும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry