கீழடி பற்றி எழுத என்ன தகுதி இருக்கிறது? தொலைக்காட்சி விவாதத்துக்குத் தயாரா? எம்.பி., சு.வெங்கடேசனுக்கு விவசாயிகள் சங்கம் சவால்!

0
212

முல்லைப் பெரியாறு விவகாரத்தைப் பற்றி எழுதவோ, குரல் கொடுக்கவோ மறுக்கும், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக ஐந்து மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். “மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் திரு சு.வெங்கடேசனுக்கு ஒரு மனந்திறந்த மடல்” என்ற தலைப்பிலான அறிக்கையில் அவர் சரமாரியாக கேள்விகளை முன்வைத்துள்ளார்.

எழுத்தாளரும், போராட்டக்காரரும், ஆக்டிவாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும், தோழருமான சு.வெ. அவர்களே வணக்கம்…! ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கும் நான் உங்களிடம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.பதில் இருந்தால் சொல்லுங்கள் இல்லையேல் இந்த அன்வர் ஒரு மார்க்சிய விரோதி என்று வழக்கம்போல் கூறிவிட்டு கடந்து செல்லுங்கள். நீங்கள் கடந்தாலும் நான் கடந்து போகப் போவதில்லை.

அன்வர் பாலசிங்கம்

நான் ஒரு முற்போக்குவாதியாக்கும், இடதுசாரியாக்கும், பெரிய்ய எழுத்தாளனாக்கும் என்று வழக்கம் போல் உங்களுக்கு நீங்களே அணிவித்துக் கொண்டிருக்கும் ராஜபாட்டைகளை, நீங்களே கழற்றி எறிவது வரை, ஓயப்போவதில்லை. ஏதோ ஒரு வகையில் முல்லைப் பெரியாறு தண்ணீரை குடித்து வளர்ந்த நீங்கள், என்றாவது ஒரு நாள் அந்த அணையின் பக்கமிருந்து ,உங்களுடைய நியாயமான குரலை எழுப்பியிருக்கிறீர்களா…?

நானும் உங்களுடைய முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட இன்னபிற சமூக வலைத்தளங்களில் கடந்த ஒரு வாரமாக தேடிக்கொண்டிருக்கிறேன். மறந்தும்கூட முல்லைப் பெரியாறு அணையை குறித்து உங்களுடைய பதிவு எதுவும் இல்லை. தப்பித்தவறி அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் ஒரு சில பதிவுகளும் மலையாள மார்க்சிஸ்டுகளின் நயவஞ்சகத்தை வழிமொழிவதாகவே அமைந்திருக்கிறது.

1979ம் ஆண்டுக்கு பிறகு மதுரை மாநகரத்தை ஊடறுத்துச் செல்லும் வைகை நதியில், வெள்ளம் வந்தால் மட்டுமே தண்ணீர் என்பதாவது உங்களுக்கு தெரியுமா…? வைகை, வைகை என்று நீங்கள் பேச்சுக்கு பேச்சு பதிவு செய்யும் வைகையில் ஓடுவது வைகைத் தண்ணீரல்ல, அது முல்லைப் பெரியாற்று தண்ணீர் என்பதாவது உங்களுக்கு தெரியுமா…?

தேவிகுளம் ராஜேந்திரன், பீர்மேடு பிஜுமோள்,உடும்பஞ்சோலை ஜெயசந்திரன்,ஜோயிஸ் ஜார்ஜ், ஒன் டூ த்ரீ எம்.எம்.மணி,வாழூர் சோமன் உள்ளிட்ட இடுக்கி மாவட்டத்து இடதுசாரிகள் யாரையாவது உங்களுக்கு தெரியுமா…? முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, இடுக்கி மாவட்டம் பீருமேடு தாலுகாவில் உள்ள மஞ்ச மலையில் புதிய அணை கட்ட போகிறார்கள், இந்த பொல்லாத கேரளத்து இடதுசாரிகள் என்பதாவது தெரியுமா…?

முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, கேரள மாநில இடதுசாரி அரசு மத்திய வனத்துறை அமைச்சகத்திற்கு முழுமை செய்து அனுப்பிவிட்டது என்பதாவது தெரியுமா…? முல்லைப் பெரியாறு அணையில் நீங்கள் வாழும் தமிழ் நிலத்து உரிமைகளை எல்லாம் மலையாளிகள் பறித்துக் கொண்டு விட்டார்கள் என்பதாவது தெரியுமா…?

2006 மற்றும் 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணை விடயத்தில் கொடுத்த, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை, இன்று வரை தமிழக அரசால் அங்கு நடைமுறைக்குக் கொண்டுவர முடியவில்லை என்பதாவது தெரியுமா…?

கேரளத்து இடதுசாரியான அச்சுதமேனன் காலத்திலிருந்து, அதற்குப் பின்னால் வந்த ஈ.கே.நாயனார், வி.எஸ். அச்சுதானந்தன் தொட்டு இன்றைய பினராயி விஜயன் வரை முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக செய்த துரோகங்களை நாங்கள் பட்டியலிட்டு கொடுத்தால், பதில் சொல்ல எதுவும் இருக்கிறதா உங்களிடம்…?

500, 1000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதைகளை புனைவுகளாக்கி, அதையே பளப்பள அட்டையோடு புதினங்களாக்குவதன் மூலம் ஒரு நாவலாசிரியராக வலம் வரலாமே தவிர, சமகால நிகழ்வுகளை பதிவு செய்யாத வரை நீங்கள் ஒரு எழுத்தாளனாக வரவே முடியாது.

1980களுக்குப் பின்னால் முல்லைப் பெரியாறு தண்ணீரை கண்ணிலேயே காணாமல், வாழ வழியற்று தங்கள் இளமையை எல்லாம் தொலைத்து விட்டு கிழக்காசிய நாடுகளிலும், அரபு நாடுகளிலும் பணி செய்யும் லட்சக்கணக்கான சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்து இளைஞர்களின் வாழ்வில் கொட்டிக்கிடக்கும் கொடூரத்தை விடவா எழுதுவதற்கு இன்னும் ஒரு கரு தேவை.

தன் பாட்டனும் பூட்டனும், பாட்டியும் பூட்டியும், ஓட்டியும் ஓட்டனும், தன் தகப்பனும் தாயும் நீந்தி விளையாண்ட தண்ணீரை, ஒரு பிள்ளை காணமுடியாதது எத்தனை பெருந்துயரம். இதையெல்லாம் எழுதாது உங்களுடைய பேனா. எழுதினால் நீங்கள் குற்றஞ்சாட்ட வேண்டியது மாமனிதர் மார்க்சை ஏற்றுக்கொண்ட ஒரு மலையாள மண்டுவை என்பதால் உங்களுடைய பேனா எழுதாது…!

கற்பனைகளில் புதைந்து கிடக்கும் ஜிகினாக்களை விட, நிஜங்களில் புதைந்து கிடக்கும் துயரங்கள் தான் எழுத்தாக வேண்டும். நீங்கள் ஒரு உண்மையான படைப்பாளி அந்தஸ்தை பெற வேண்டுமானால், பெரியாற்றங்கரையில் உறைந்து கிடக்கும் துயரங்களை எப்போது எழுத்தாக்கப் போகிறீர்கள்…?

எல்லாம் இருக்கட்டும்…! கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டுமென ஒரு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது மத்திய நீர்வள ஆணையம். இந்த தகவல் குறித்து ஏதேனும் பதிவு செய்திருக்கிறீர்களா என்று தேடிப்பார்த்து ஓய்ந்து விட்டேன், எங்கினும் இல்லை.

எதற்கெல்லாமோ குரல் கொடுக்கிறீர்கள். முல்லைப் பெரியாறு தண்ணீருக்காக காத்திருக்கும் 10 லட்சம் விவசாயிகளை உங்களுடைய கண்களுக்கு தெரியவில்லையென்றால், நீங்கள் யார் என்ற கேள்வி பிறக்கிறது. நாடாளுமன்ற மக்களவையிலும், மேலவையிலும் மலையாள நாட்டு உறுப்பினர்களெல்லாம் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடும் போது கூட, தாங்கள் அமைதி காப்பது ஏதோ உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கும் என நினைக்கிறேன்.

தென்காசி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் லிங்கம் அவர்கள், 5000 அடி உயரத்திலுள்ள, தடைசெய்யப்பட்ட பகுதி என கேரள மாநில அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் செண்பகவல்லி கால்வாய்க்கு நடந்தே சென்று கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் அணையை பார்வையிட்டு, தான் ஒரு உண்மையான மக்கள் தொண்டன் என்பதை நிரூபித்தார்.

ஆனால் கேரளத்தை இடதுசாரிகள் ஆளும் இந்தக் காலத்தில், ஒரு இடதுசாரியாக, நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட உங்களால் முல்லைப் பெரியாறு அணைக்குள் செல்ல முடியவில்லை என்றால், உங்களுக்கு எதற்கு இந்தப் பதவி. நீங்கள் வாழும் நிலத்தின் நீராதாரம் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது… அதற்கு காரணமாக இருப்பது நீங்கள் ஏற்றுக்கொண்ட தத்துவத்தை ஏற்றுக் கொண்ட இன்னொரு இடதுசாரி என்றால் நீங்கள் பேசமாட்டீர்கள். ஏற்றுக்கொண்ட தத்துவம் உங்களை தடுக்கிறது.

பெற்ற மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற நாட்டில் வாழ்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள் தோழர் வெங்கடேசன் அவர்களே…! சமகாலத்தில் உங்கள் கண்முன்னே நிகழ்த்தப்படும் ஒரு அதிகார வன்முறையைத் பற்றி எழுதாத உங்களுடைய கரங்கள், என்றோ எங்கள் முன்னோர்கள் வாழ்வாங்கு வாழ்ந்து விட்டுப் போன கீழடி நாகரிகத்தைப் பற்றி எழுதுவதற்கு என்ன தகுதி இருக்கிறது…!

வரலாறு என்பது சம காலத்திலிருந்து பிறக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சமகாலத்தை தொடாமல், சமகாலத்தில் நடக்கும் இழிவுகளை பற்றி எழுதாமல், வரலாற்றை உருவாக்க முடியாது. ஒரு தொலைக்காட்சியில், முல்லைப் பெரியாறு அணையும்,கேரளத்து மார்க்சிஸ்டுகளின் துரோகமும் என்கிற தலைப்பில் விவாதிக்க ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பில் நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் தயாரா தோழரே…?

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry