தமிழகத்தில் நீட் தேர்வை ஆதரிப்போரை, தமிழின துரோகிகள் என்று முத்திரை குத்துவதாக சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தினமலர் நாளிதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில், “நீட் தேர்வில், தமிழகத்திற்கு மட்டும் விலக்கு கேட்டு போராடி வருகின்றனர். நான், நீட் தேர்வை ஆதரிக்கிறேன். நீட் தேர்வு பற்றி பேசுவதற்கு முன், அந்த தேர்வு இல்லாமல், மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் தேர்வான முறை பற்றிப் பார்க்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தான், மாணவர் சேர்க்கை நடந்தது.
அப்போது மருத்துவக் கல்லூரியில் சேர, 1 சதவீதம் அளவுக்கு தான், கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதே நேரம், நீட் தேர்வுக்கு பின், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதனால், கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைத்து வருகிறது.
அதை 10 சதவீதமாக்கினால், கிராம மாணவர்களுக்கு, குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். அதை, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். நீட் தேர்வே வேண்டாம் என்று சொல்வதில் அர்த்தமில்லை. ஆனால், தமிழகத்தில் இது ஒரு பெரும் விவாதமாக்கப்பட்டு விட்டதால், எல்லாவற்றையும் புள்ளி விபரங்களுடன் ஆராய்ந்து, ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
கல்வியாளர்களும், புள்ளியியல் நிபுணர்களும் அமர்ந்து, நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பின், தமிழகத்தில் எத்தனை கிராமப்புற மாணவர்கள், மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர்; நீட் தேர்வு வருவதற்கு முன், எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்பதை ஆராய வேண்டும். அதன் பின், தெளிவான தீர்வை கண்டறிய வேண்டும்.
நீட் தேர்வால், மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்கள், தகுதி மிக்கவர்களாக உள்ளனர் என்ற வாதம் முன்வைக்கப்பட்டாலும், அந்த மாணவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பின், நீட் தேர்வுக்காக தனியாக ‘கோச்சிங்’ செல்ல வேண்டியுள்ளது. அதற்கு நிறைய செலவாகிறது என்பதையும் ஏற்கத் தான் வேண்டும்.
தனியார் கோச்சிங் சென்டர்களில் சேரும் வாய்ப்பு, கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கவில்லை; அதற்கான வசதி அவர்களுக்கு இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதுவும் ஏற்கத்தக்கது தான். அதே நேரம், நீட் தேர்வுக்கு முந்தைய நிலையிலேயே, மருத்துவக் கல்விக்கான சேர்க்கை நடத்துவதாக வைத்துக் கொண்டால் என்னாகும்?
பிளஸ் 2 மதிப்பெண் தான், மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவனின் தகுதியைத் தீர்மானிக்கும் என்ற நிலையில், ராசிபுரம், நாமக்கல் பள்ளிகளில் நடந்தது தான் நடக்கும். காலை 4:00 மணிக்கு மாணவர்களை எழுப்பி விடுவர்; இரவு 12:00 மணி வரை தொடர்ச்சியாக பாடங்களை படிக்கச் சொல்வர்; மனப்பாடம் செய்யச் சொல்வர். மனப்பாடம் செய்ததை எல்லாம், திரும்ப திரும்ப எழுதச் சொல்வர். அதன் மேல் தேர்வும் வைப்பர். மாணவர்கள் மனப்பாடம் செய்து, அதை திருப்பி எழுதுவரே தவிர, எந்த பாடத்தையும் புரிந்து படிக்க மாட்டார்கள்.
இந்தக் குறைபாட்டை எப்படி நீக்குவது? அதற்காக தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது என்றதும், தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன், பாடத்திட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்தனர்.
அதன்பின், நீட் தேர்வில், தமிழக பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளும் அதிகம் இருந்தன. இதனாலும், தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகம் ஆனது. அதனால் தான், புள்ளி விபரங்களோடு எல்லா விஷயங்களையும் ஆய்வு செய்து, விவாதித்து, நல்ல முடிவுக்கு வர வேண்டும் என்கிறேன். ஒரு வேளை, தமிழக அரசு கேட்பது போல, தமிழகத்துக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்று, மருத்துவம் பயில விரும்புவோர் நிலை என்னாகும்?
அப்போதும் கூட, நம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதித் தானே ஆக வேண்டும்? இப்படி பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. எனவே, நீட் தேர்வை புள்ளி விபரங்கள் அடிப்படையில் தான் அணுக வேண்டுமே தவிர, உணர்வு ரீதியில் அணுகக் கூடாது. இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.
Courtesy: Dinamalar
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry