வெப் சீரிஸ் ஆகிறது ’குற்றப்பரம்பரை’! பாலா, பாரதிராஜா இயக்கவில்லை! இவர்தான் டைரக்டரா?

0
539
குற்றப்பரம்பரை வேல்ஸ் மீடியா

எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை நாவல், வெப் சீரிஸாக தயாராகிறது. ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

வேல ராமமூர்த்தி எழுதிய ’குற்றப்பரம்பரை’ நாவலை திரைப்படமாக்க பல இயக்குநர்கள் போட்டிபோட்டு வந்தனர். இயக்குநர் பாலா, இந்தப் படத்தை இயக்க முன்வந்தார். அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இதற்கிடையே ரத்னகுமார் எழுதியை கதையை வைத்து பாரதிராஜா, ‘குற்றப்பரம்பரை‘ கதையை இயக்குவதாக அறிவித்தார். இயக்குனர் பாரதிராஜா தன் வாழ்க்கையில் லட்சியமாக நினைத்துக் கொண்டிருந்தது குற்றப்பரம்பரை படத்தை எடுப்பதைத்தான்.

இந்த படத்திற்கான தொடக்க விழாவையும் சொந்த ஊரில் பிரம்மாண்டமாக நடத்தினார். இதனால், 2016-ல் பாரதிராஜாவுக்கும் பாலாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. பாலா பொதுமேடையில் பாரதிராஜாவை பகிரங்கமாக எச்சரித்தார். பிறகு இருவருமே அதைக் கிடப்பில் போட்டார்கள். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அதை வெப்சீரிஸாக தயாரிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

வேல ராமமூர்த்தி

இந்நிலையில், இயக்குநர் சசிகுமார், ’குற்றப்பரம்பரை’யை வெப் சீரிஸாக இதை இயக்க இருக்கிறார். அவர் நடிக்கிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தியின் கதை, வசனத்தில்தான் வெப் சீரிஸ் உருவாகிறது.

மொத்தம் 20 எபிசோடுகளாக உருவாக இருக்கும் இந்த வெப் சீரிஸை, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்புக்கான லொகேஷனை படக்குழுவினர் பார்த்து வருகின்றனர். நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை என்று தெரிகிறது.

வேல. ராமமூர்த்தி, சசிகுமார்

ஏற்கனவே சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற படங்களை இயக்கியுள்ள சசிகுமார், 12 ஆண்டுகளாக எந்த படத்தையும் இயக்கவில்லை. ‘குற்றப்பரம்பரை’ மூலம் அவர் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுக்கிறார். பாரதிராஜா, பாலா போன்ற திரை ஆளுமைகள் ஆசைப்பட்டு நடக்காமல் போன குற்றப்பரம்பரை, சசிகுமார் மூலம் வெப் சீரிஸாக வெளியாக உள்ளது.

குற்றப்பரம்பரை என்றால் என்ன?

1911 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று 1920 ஆம் ஆண்டு பெருங்காமநல்லூரில் நடந்த போராட்டத்தின் போது, அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர். பல திருத்தங்களுக்கு பிறகு 1924-ல் இந்தியா முழுவதும் அமலாகியது. 1949 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தின் பிடியில் இருந்த சமூகத்தினர் சீர்மபரபினர் என்றும் அழைக்கப்பட்டனர். இந்தச் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பல சமூகத்தினரின் அடையாளங்கள் மாறிவிட்டபோதிலும், இன்றும் கூட அந்தப் பிரிவில் சில சமூகத்தினர் விமுக்த சாதியினர் (DeNotified Tribes of India) என்று அழைக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், பிரமலைக் கள்ளர், அம்பலக்காரர், வலையர், கேப்மாரி என 89 சாதிகள் குற்றப்பரம்பரைச் சட்டப்படி இப்பட்டியலில் இருந்தன. சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என்றே அறிவிக்கப்பட்டனர். குறவர், உப்புக் குறவர், ஆத்தூர் மேல்நாட்டுக் குறவர், சி.கே. குறவர் போன்ற சாதிகளும் குற்றப் பரம்பரைப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தன.

குற்றப்பரம்பரைப் பட்டியலில் கொண்டுவரப்பட்ட சாதி ஆண்கள் குறிப்பாக 16 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும். இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக்கூடாது. காவலர் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர், புதிதாக திருமணமானவர்களுக்கும் கூட விதிவிலக்கு கிடையாது.

அவர்களிடம் நாள்தோறும் கைரேகை பதிவு செய்யப்படும். இது கைரேகைச் சட்டம் என்றும் சொல்லப்பட்டது. மேற்கண்ட சாதிகளில் குறிப்பாகக் கள்ளர், மறவர், அம்பலக்காரர், வலையர் போன்ற சில சமூகத்தினர் கைரேகைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டனர். தமிழ்நாட்டில் செய்யூர் ஆதி திராவிடர் பேரவை, வன்னியகுல சத்திரிய சபா போன்ற அமைப்புகள் போராடி அந்த சாதிகளை குற்றப்பரம்பரை பட்டியலில் இருந்து விடுவித்தன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry