ஆக.5,2019-காஷ்மீர்! ஆக.5,2020-ராமர் கோயில்! ஆக.5,2021-பொது சிவில் சட்டமா?

0
9

இந்திய அரசியல் வரலாற்றில் ஆகஸ்ட் 5 என்பது முக்கிய இடம் பிடித்துவிட்டது. எனவே அந்தத் தேதி மீதான எதிர்பார்ப்பும் பன் மடங்கு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் மிக முக்கிய கொள்கைகள் என்று மூன்றை குறிப்பிடலாம். அதை தேர்தல் வாக்குறுதிகளாகவும் அவர்கள் முன்வைத்தார்கள். அதில் அவர்கள் முதலாவதாக நிறைவேற்றியது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம். அதாவது சிறப்பு அந்தஸ்துக்கு வகை செய்த அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கப்பட்டது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதிதான்.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்க்காத பெரும்பாலான எதிர்க்கட்சிகள், நீக்கிய முறைதான் தவறு என விமர்சனம் செய்ததன. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், அங்கு வன்முறை சம்பவங்கள் பெரிதாக நடைபெறவில்லை. இது நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்த குறிப்பிடத் தகுந்த முதல் பெரிய வெற்றி.

அடுத்ததாக தற்போது ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா. இதை பாரதிய ஜனதா கட்சியினரோ, இந்துத்துவ அமைப்புகளோ வரவேற்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், பாரதிய ஜனதாவுக்கு நேர் எதிர் சித்தாந்தத்தை கொண்ட காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் ஆதரிக்கவே செய்தன. ஒருபடி மேலேபோய், தேச ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளம்தான் ராமர் கோயில் பூமி பூஜை விழா என குறிப்பிட்டார் பிரியங்கா காந்தி. இதுவும் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு, குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நரேந்திர மோடிக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.

இந்த இரண்டுமே சர்வதேச கவனத்தை ஈர்த்தவை. ஒரு தேசியக் கட்சி என்பது இதுபோன்ற அரசியலை செய்யாமல் இருக்கமுடியாது, இதுபோன்ற அரசியலை செய்வதுதான் திறமையான தேசியக் கட்சியாகவும் அறியமுடியும். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஐ பொறுத்தவரை அரசியல் களத்தில் அவர்கள் முற்றிலும் வித்தியாசமானதொரு கோணத்தில் கருத்தாக்கத்தை முன்வைக்கிறார்கள். அதன் மற்றொரு அம்சம்தான் அவர்களது மூன்றாவது முக்கிய கொள்கை.

மூன்றாவதாக பாரதிய ஜனதா அரசு முன்வைப்பது பொது சிவில் சட்டம், அதாவது யுனிஃபார்ம் சிவில் கோடு. அதை இப்படியும் சொல்லலாம், ஒரே நாடு, ஒரே சட்டம். இந்த சட்டம் என்ன சொல்கிறது என்றால், மதச்சார்பற்ற நாடான இந்தியாவில், பலதரப்பட்ட மக்களுக்கும் ஒரே சட்டக் கொள்கையை வகுப்பதுதான். அதாவது, திருமணம், விவாகரத்து, வாரிசு, சொத்துரிமை, தத்தெடுத்தல், ஜீவனாம்சம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த சட்டம் தெளிவுபடுத்தும்.

ஆகஸ்ட் வரிசைப்படி பார்த்தோமென்றால், 2021 ஆகஸ்ட் 5-ந் தேதி இந்த பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படலாம். இதுபோகிற போக்கில் செய்துவிடக்கூடிய காரியமல்ல. ஏனென்றால், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அவர்களது வாக்குகளை சார்ந்துள்ள கட்சிகள் கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கும். இந்த சட்டம் அமலாகும்போது, இந்தியா, இரண்டாக இருக்கும். ஒருபுறம், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம், மறுபுறம், மதச்சார்பின்மை பக்கம் இருக்கலாம்.

பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரை, அவர்களது அரசியல் உருவாக்கம் என்பது புதிதாக இருக்கிறது. மதம் மற்றும் தேசியத்தில் எந்தவித சமரசத்துக்கும் இடம்கொடுக்கவே முடியாது என்ற முரட்டுத்தனமான உறுதி, மோடி, அமித் ஷா கூட்டணியிடம் இருக்கிறது. அதேநேரம் அவர்களது சோஷலிசம் என்பது சற்று குழப்பமானதாகவே அறியப்படுகிறது.

ஆனால், இதைப்போன்ற கொள்கை உடைய கட்சிதான், இந்தியாவில், இனி பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக, அதாவது எதிர்க்கட்சியாக இருக்க முடியும். எனவே சில தலைவர்கள் சேர்ந்துதான் பாரதிய ஜனதாவை எதிர்க்க முடியும் என்ற நிலையை உருவாக்கி வைத்திருப்பவர் சர்வவல்லமை படைத்த மோடிதான்.

தேசியவாதம், சோஷலிசம், மதச்சார்பின்மை ஆகியவற்றை ஒருங்கே கொண்டதுதான் காங்கிரஸ் என கூறிய இந்திரா காந்தி, இந்துத்துவாவை கண்டித்ததில்லை. அதே போக்கைத்தான் நரசிம்மராவ், ராஜிவ் காந்தி ஆகியோரும் பின்றபற்றினார்கள். ஆனால், சோனியா தலைமையிலான காங்கிரஸில், தேசியவாதம் பலவீனமாகி, இடசாரி சித்தாந்தம் மேலோங்கியதாக பலரும் கருதுகின்றனர்.

இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைரான ராகுல் காந்தியையே, நான் பிராமணன், இந்து என வெளிப்படையாக கூற வைத்ததும், ராமர் கோயில் பூமி பூஜைக்கு ‘ஜெய் ஶ்ரீராம்’ என சொல்ல வைத்ததும்தான் மோடியின் ராஜதந்திரம். எனவே, காஷ்மீர் விவகாரம், ராமர் கோயில் போன்று, பொது சிவில் சட்டத்திலும் பிரதமர் மோடி வரலாறு படைப்பார் என்பதே பா.ஜ.க.வினரின் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது. 2021, ஆகஸ்ட் 5-ந் தேதிக்கு இப்போதிலிருந்தே அக்கட்சியினர் காத்திருக்கின்றனர்.