“திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. அதற்காக, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தக் கூடாது; பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியைப் பேசக்கூடாது என்று கூறினால், அது தவறு. பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி குறித்து பேசுவது என்னுடைய தார்மிக உரிமை,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியிருப்பது திமுக முகாமில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் காமராஜர் அரங்கில் நடந்த காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “துணிந்து நின்றால்தான், நாம் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட முடியும். இனிவரும் காலங்களில் காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எது தேவையாக இருக்கிறது என்றால், உண்மை, ஒற்றுமை, உழைப்பு. ஒற்றுமை இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது. இன்று நாம் ஆளுங்கட்சியாக கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலில் இருக்கிறோம். ஆனால், அங்கு தமிழகத்துக்கு நிகராக வெற்றி பெற முடியவில்லையே என்று பத்திரிகையாளர்கள் என்னிடத்தில் கேட்டனர். அதற்கு நான், தமிழகம் என்பது கலை, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு என அனைத்திலும் பின்னிப் பிணைந்திருக்கிறது. எப்போதெல்லாம் இந்த தேசத்துக்கு ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகம் எழுந்து நிற்கும்.
இந்தத் தேர்தலில் தமிழகம் எழுந்து நின்றிருக்கிறது. அதுதான் நாற்பதற்கு, நாற்பது வெற்றி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது நமக்கு எப்போதுமே மதிப்பும், அன்பும், மரியாதையும் உண்டு. திமுகவை யாராவது தவறாக பேசினால், நான் குரல் கொடுப்பேன். காரணம், நாம் உண்மையான தோழமையுடன் இருக்கிறோம். அதுதான் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி நமக்கு சொல்லிக் கொடுத்தது. நாம் எங்கு இருக்கிறோமோ அங்கு உண்மையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவர்களுடைய கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். அதெல்லாம் வேறு.
ஆனால், காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் வேறு. மற்ற கட்சிகளின் கொள்கை, கோட்பாடு வேறு. அதற்காக, நம்முடைய கட்சியை வலிமைப்படுத்தக் கூடாது; பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியைப் பேசக்கூடாது என்று சொன்னால், அது தவறு. பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி குறித்து பேசுவது என்னுடைய தார்மிக உரிமை.
Also Read : எம்.பி-க்களின்(MP) ஊதியமும், சலுகைகளும்! வீட்டு வாடகைக்காக மட்டும் மாதம் ரூ.2 லட்சம்! அது மட்டுமா…!
நமக்கென்று ஒரு கொள்கை, ஒரு பாதை என எல்லாமே இருக்கிறது. கூட்டணி என்பது வேறு. தேர்தல் காலங்களில் கூட்டணி வைக்கிறோம். பாசிசத்தை எதிர்க்கும்போது தைரியமாக எதிர்க்கிறோம். தோழமைகளுடன் சேர்ந்து எதிர்க்கிறோம். நீட் தேர்வை திமுக எதிர்த்தால், காங்கிரஸ் கட்சியும் அந்த தேர்வை எதிர்க்கிறது. இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறோம். அது வேறு… இது வேறு. ஆனால், நம்முடைய கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும். அதேபோல், வாக்கு வங்கியை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry