காஞ்சிபுரம் அருகே பள்ளிக் குடிநீர்த் தொட்டியில் முட்டை ஓட்டில் வைத்து வீசப்பட்டதாக சந்தேகம்! போலீஸ் விசாரணை!

0
19
Police interrogate Thiruvandar Middle School for allegedly mixing feces in drinking water tank

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலவாக்கத்தை அடுத்த திருவந்தவார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 90 பேர் படித்து வருகின்றனர். மாணவர்களின் யன்பாட்டுக்கு பள்ளி வளாகத்தில் குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குடிநீர் தொட்டியைத்தான் பெரும்பாலான மாணவர்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்தத் தொட்டியில் இருந்து நீரைப் பிடித்து சத்துணவு ஊழியர்கள் சமையல் செய்வது வழக்கம். இதன்படி மதிய உணவு சமைப்பதற்காக அந்தத் தொட்டியில் இருந்து தண்ணீரை பிடித்து குழந்தைகளுக்காக மதிய உணவை தயார் செய்துள்ளனர்.

இந்நிலையில் பள்ளி மாணவர்கள் தொட்டியில் குடிப்பதற்காக தண்ணீர் பிடித்தபோது, குடிநீரில் துர்நாற்றம் வீசியுள்ளது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் பார்த்த பொழுது குடிநீர் நிறம் மாறி இருந்ததை கண்டனர். எனவே அந்தத் தண்ணீரில் சமைத்த உணவை மாணவர்களுக்கு வழங்காமல் நிறுத்தியுள்ளனர்.

Also Read : திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்து வினாத்தாள் முறைகேடு! பேராசியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி!

இதையடுத்து சாலவாக்கம் காவல் நிலையத்துக்கு பள்ளி ஆசிரியர்கள் தகவல் அளித்துள்ளனர். காஞ்சிபுரம் காவல்துணை கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர், உத்திரமேரூர் வட்டாட்சியர் ஞானவேல் உள்ளிட்டோர் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது குடிநீரில் மலம் கலந்திருப்பதற்கான தடயங்கள் இருந்துள்ளன.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, எஸ்.பி. சுதாகர் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தனர். குடிநீர் தொட்டியில் இருந்த பிடிக்கப்பட்ட தண்ணீர் துர்நாற்றம் வீசியதால், தண்ணீரை ஆய்வுக்கு அவர்கள் உத்தரவிட்டனர். பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்களிடம்  மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டார். மேலும், காவல்துறையின் அறிவுறுத்திலின் பேரில் தடயவியல் நிபுணர் குமரன் தலைமையிலான குழுவினரும் குடிநீர் தொட்டியில் ஆய்வு நடத்தியுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி செய்தியாளர்களிடம் பேசியபோது, நடுநிலைப் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, பள்ளியின் குடிநீர்த் தொட்டியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இதில், தொட்டியின் உள்ளே முட்டை இருப்பது தெரிந்தது. தொட்டி திறந்த நிலையில் இருப்பதால், ஒருவேளை காக்கை போன்ற பறவைகள் வீசியிருக்கலாம் எனக் கருதுகிறோம். மேலும், இந்தத் தொட்டியின் தண்ணீரை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

பள்ளி வளாகத்தில் வேறு குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொட்டியின் தண்ணீரை மாணவர்கள் பெரும்பாலும் கை கழுவுவதற்கு மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். அதனால், இந்தத் தொட்டியை இடிக்குமாறு தெரிவித்துள்ளேன். இதுதொடர்பாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுபற்றி திருவந்தார் கிராம மக்கள் சிலரிடம் கேட்டபோது, அடையாளத்தை மறைத்துப் பேசிய அவர்கள், “மாவட்ட ஆட்சியர் கூறியபடி, மலம் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் தொட்டி, கை கழுவ மட்டுமே பயன்படுத்தப்படவில்லை, மாணவர்களுக்கான உணவு சமைக்கவும் அந்தத் தொட்டியில் இருந்துதான் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். தண்ணீரில் துர்நாற்றம் வீசியதால்தான் இன்று சமையல் செய்த உணவை மாணவர்களுக்கு வழங்கவில்லை. தண்ணீரில் மலம் கலந்திருந்ததாகவே தெரிகிறது. முட்டை ஓட்டில் மலத்தை வைத்து மர்ம நபர்கள் வீசியுள்ளதாக கூறுகின்றனர். வேங்கைவயல் போன்று பிரச்சனை பெரிதாகிவிடும் என்பதால் தண்ணீர்த் தொட்டியில் முட்டை இருந்ததாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்” என்று தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை குற்றவாளிகளை போலீஸார் கைது செய்யவில்லை.

இதனிடையே, கடந்த மாதம் கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காளிபாளையம் கிராமத்தின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் எலும்புக்கூடுகள் இருந்துள்ளது. வெள்ளமடை கிராம பஞ்சாயத்து வாட்டர்மேன் பழனிசாமி மற்றும் தண்ணீர் தொட்டி துப்புரவு பணியாளர் லட்சுமணன் ஆகியோர் எலும்புகளை அகற்றியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டிகளில் மலம் கலப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேங்கைவயல் சம்பவம் போன்று மெத்தனமாக இல்லாமல், அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்ப்பார்ப்பாகவும் உள்ளது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி குடிநீர்த் தொட்டி இடிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry