திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்து வினாத்தாள் முறைகேடு! பேராசியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி!

0
42
Thiruvalluvar University again caught in question paper scam

வேலூரைச் சேர்ந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் முறைகேடு தொடர்பான பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பல்வேறு கல்லூரிகளில், கடந்த 11ந் தேதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன.

முதுநிலை கணிதப் பாடத்திற்கான (மூன்றாம் செமஸ்டர்) மூன்று பாடங்களுக்கான கேள்விதாள்களானது, 2021 டிசம்பரில் நடத்தப்பட்ட அதே கேள்வித்தாளை, வருடத்தை மட்டும் மாற்றி அச்சடித்து விநியோகித்திருப்பதைக் கண்டு பேராசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். நவம்பர் 14-ம் தேதி DT Next நாளிதழ் இதை அம்பலப்படுத்தியது. இதை அடிப்படையாக வைத்து வேல்ஸ் மீடியாவும் செய்தி வெளியிட்டிருந்தது.

Also Read : வினாத்தாள்களை காப்பியடித்துப் பிடிபட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம்..! என்ன செய்யப்போகிறது உயர் கல்வித்துறை?

இந்த விவகாரம் குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் இந்த முறைகேடு முடிவுக்கு வந்தபாடில்லை. அடுத்தடுத்த தேர்வுகளிலும் பழைய கேள்வித்தாள்களையே புதிதாக அச்சடித்து பல்கலைக்கழகம் விநியோகிப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி DT Next நாளிதழ் மீண்டும் செய்தி வெளியிட்டுள்ளது.

மீண்டும் மீண்டும் எப்படி தவறு நடக்கிறது என்பது குறித்துப் பதிலளிக்க பல்கலைக்கழக அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பெயர் வெளியிட விரும்பாத வேலூர் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், ‘பாரபட்சமற்ற விசாரணை தொடங்கப்பட்டால், வினாத்தாள் தயாரிப்பவர்கள் உண்மையை வெளிப்படுத்தியாக வேண்டும்’ என்றார்.

Courtesy : DT Next

இந்தப் பிரச்சினை அம்பலமானவுடன், இளங்கலை கணிதம் மற்றும் வேதியியல் படிக்கும் மாணவர்கள், துணைப்பாடமாக இயற்பியல் தேர்வு எழுதியபோது நவம்பர் / டிசம்பர் 2022 மற்றும் ஏப்ரல் / மே 2023 வினாத்தாள்கள் ஒரே மாதிரியாக இருப்பதை வெளிப்படுத்தினர்.

Courtesy : DT Next

“டிசம்பர் 2022 தேர்வில் குறிப்பிட்டதொரு தாளில் தோல்வியுற்ற ஒரு மாணவர், ஐந்து மாதங்களுக்குப் பிறகு அதே தாளை எழுதினார்” என்று முன்னாள் பேராசிரியர் குமார் சுப்பு கூறியுள்ளார். இதேபோல், ரியல் அனாலிசிஸில் ஏப்ரல் / மே 2023 தாளில் தோல்வியுற்ற முதுகலை கணிதம் முதலாம் ஆண்டு மாணவர்கள், நவம்பர் / டிசம்பர் 2023இல் தங்கள் நிலுவைத் தேர்வுகளை எழுதியபோது, அதே வினாத்தாள் வழங்கப்பட்டதைக் கண்டறிந்தனர்.

Also Read : இந்தியா உலகக்கோப்பையை வெல்ல முடியாததன் பின்னணி! பிட்ச் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக மாறியது எப்படி?

2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதுகலை கணித மாணவர்களுக்கான செயல்பாட்டு ஆராய்ச்சி (Operational Research – OR) தாளுக்காக 2021 பாடத்திட்டம் மாற்றப்பட்டிருந்தாலும், நவம்பர் 11 அன்று தேர்வு எழுதிய மாணவர்கள் 5 அலகுகளில், 2 அலகுகளில் புதிய பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் இருந்ததையும், மீதமுள்ள மூன்று அலகுகளில் பழைய பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் இருப்பதையும் கண்டறிந்தனர். இதன் காரணமாக மாணவர்களால் பெரும்பாலான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியவில்லை.

பழைய பாடத்திட்ட கேள்விகள் மொத்தம் 57 மதிப்பெண்களை உள்ளடக்கியது. எனவே வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி, ‘பாடத்திட்டத்திற்கு வெளியே’ கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பல்கலைக்கழகம் முழு மதிப்பெண்களை வழங்கினால், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள் என்று பேராசிரியர் ஒருவர் கூறினார். செமஸ்டர் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் இதை எவ்வாறு எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளது என்பது, வினாத்தாள் மதிப்பீடு தொடங்கும்போது தான் தெரியும் என்று பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry