மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை, திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பதாக முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் வேளாண் மசோதாக்கள் உள்ளன. இந்த மசோதாவால், விவசாயி, கொள்முதல் செய்வோர் என இருவர் நலனும் பாதுகாக்கப்படும். கிராமப்புறங்களில் உணவு பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் பெருகி வேலைவாய்ப்பு பெருகும். தமிழகத்தில் கரும்பு, கோகோ சாகுபடி, கோழிப்பண்ணை போன்றவற்றில் ஒப்பந்த முறை இருக்கிறது.
இந்த மசோதா விளைபொருட்களுக்கு போட்டி முறையில், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வழி செய்கிறது. விளைபொருள் கொள்முதலில் விவசாயிக்கு பான் எண் தேவையில்லை. வணிகர்களுக்கு இருந்தால் போதுமானது. விவசாயிகளை கட்டாயபடுத்தவோ, பாதிக்கும் வகையில் எந்த ஷரத்துகளும் இல்லை. இந்த மசோதாவை அரசியல் காரணங்களுக்காக ஸ்டாலின் எதிர்க்கிறார். அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, இதுபோன்ற சட்டத்தை இயற்றிய போது ஸ்டாலின் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
சட்டத்தின்படி விவசாயி கொள்முதல் நபர் இடையே வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். கொள்முதல் செய்வோர் நலன், விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும். தமிழகத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் நெல் கொள்முதல் தொடரும். விளைபொருட்களின் கொள்முதல் தொடரும் எனபதால் விவசாயிகளை பாதிக்காது. குறைந்தபட்ச ஆதாரவிலை அடிப்படையில் நடந்து வரும் நெல்கொள்முதல் பாதிக்காது. உணவு பொருட்களை பதுக்கப்படுவதை தடை செய்கிறது.
வேளாண் மசோதா மூலம் விவசாயிகள் மற்றும் கொள்முதல் செய்வோர் நலன் பாதுகாக்கப்படும். விவசாயி ஆகிய நான் உணர்ந்ததால், வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உள்ள நிலை தமிழகத்திற்கு பொருந்தாது. ஒரு முறை அல்ல ஓராயிரம் முறை விவசாயி என சொல்வதில் பெருமைப்படுகிறேன். விவசாயிகளின் நலனை காக்க அனைத்து உறுதியான நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுக்கும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry