வட கிழக்கு மாநிலமான மணிப்பூர் ஆளுநராக பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசனை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார். எல்லைப் பிரச்சனை பூதாகரமாகி வரும் நிலையில், இந்திய அரசியலின் லைம் லைட்டுக்குள் வருகிறார் இல. கணேசன்.
அரவணைத்து வளர்த்த சகோதரர்கள்
1944 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி தஞ்சாவூரில், அந்தணர் வகுப்பைச் சேர்ந்த பத்திரிகை முகவரான இலட்சுமிராகவன் – அலமேலு தம்பதியின் 5-வது மகனாகப் பிறந்தவர் இல. கணேசன். சேஷன், நாராயணன், கிருஷ்ணமூர்த்தி, கோபாலன் ஆகியோர் இவரது அண்ணன்கள். பட்டாபி என்ற தம்பியும், 2 அக்காக்களும், ஒரு தங்கையும் இவருக்கு உண்டு. இரண்டாவது அண்ணன் நாராயணன் சிறுவயது முதலே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணியாற்றியவர். ஆலய மீட்புக் குழுவின் தலைவராகவும் அவர் செயல்பட்டவர். இவர் மூலமாகத்தான் இல. கணேசனுக்கு ஆர்.எஸ்.எஸ். அறிமுகம் கிடைத்தது.
ஆர்.எஸ்.எஸ்., கட்சிப் பயணம்
தஞ்சை வீரராகவா உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இல கணேசன், பியுசி முடித்துவிட்டு வருவாய்த்துறையில் பணியாற்றினார். 1970-ல் திருச்சியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில், அப்போதைய ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர் ராமகோபாலன் முன்னிலையில், ஆர்.எஸ்.எஸ். இயக்க பணிக்கு வருவதாக அவர் வாக்குக் கொடுத்தார். அதன்படி, தனது பள்ளி ஆசிரியர் ராமரத்தினத்தின் உதவியுடன் 1971-ம் ஆண்டு 27 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு வந்து ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர் ஆனார். ஆசிரியர் ராமரத்தினத்தின் மற்றொரு மாணவர் மேகலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் ஆவார். 76 வயதாகும் இல. கணேசன், திருமணம் செய்துகொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்காகவும், பாஜக–விற்காகவும் உழைத்து வருகிறார். 30 ஆண்டுகளாக கடைசி அண்ணன் கோபாலன் உடன்தான் இல கணேசன் வசித்து வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட பொறுப்பாளராக இருந்தபோது, தமிழ்நாட்டில் மாவட்ட பொறுப்பாளராக இல.கணேசன் பதவி வகித்தார். ஆர்.எஸ்.எஸ்.-ல் இருந்து கட்சிக்கு அனுப்பப்பட்ட இல. கணேசன், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மண்டலப் பொறுப்பாளர், குமரி முதல் திருச்சி வரையிலான மாவட்டங்களின் பொறுப்பாளர், தமிழ்நாடு மாநில இணை அமைப்பாளர் போன்ற பொறுப்புகளை வகித்தார். பின்னர், விரைவிலேயே முக்கியத்துவம் வாய்ந்த மாநில அமைப்புச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. 1991-ம் ஆண்டு முதல் பாஜக செயற்குழு உறுப்பினராக இருந்து வரும் இல.கணேசன், அக்கட்சியின் தேசிய செயலாளராகவும், தேசிய துணைத் தலைவராகவும், 2006-2009 வரை தமிழக தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார்.
பத்திரிகையாளர், இலக்கியவாதி
2009 மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக சார்பாகத் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இருப்பினும், மத்தியப் பிரதேச மாநிலத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக பாஜக இவரை தேர்வு செய்தது. சித்தாந்த ரீதியாக முரண்பட்டாலும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியுடன் இவர் நெருக்கமான நட்பு பாராட்டியவர். இல.கணேசன் பத்திரிகையாளரும்கூட. பாஜகவின் ‘ஒரே நாடு’ பத்திரிகையின் ஆசிரியராக அவர் பணியாற்றியிருக்கிறார். ‘பொற்றாமரை’ என்ற இலக்கிய அமைப்பையும் அவர் நடத்தி வருகிறார்.
ஆளுநராக நியமனம்
இல.கணேசனை மணிப்பூர் மாநிலத்தின் 17-வது ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மணிப்பூர் ஆளுநராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 20ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து, சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத்துக்கு கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. மணிப்பூரின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் இல. கணேசனுக்கு தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நியமனம் மூலம் தனது சேவை அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இல. கணேசன் முன் இருக்கும் சவால்கள்
மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களில், 1,643 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைப் பகுதியை இந்தியா, மியான்மர் நாடுகள் பகிர்ந்துகொள்கின்றன. ஆயுதம் மற்றும் போதை மருந்துக் கடத்தல், கள்ளநோட்டுகள் புழக்கம், தொடர் கிளர்ச்சி என இரு நாடுகளின் எல்லைப் பகுதிகள் சட்ட மீறல்களின் இருப்பிடமாக இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், மியான்மரில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைபவர்களின் வாயிலாக மணிப்பூர் உள்ளது.
மியான்மரில் இருந்து, எல்லைப் பகுதி மாவட்டங்களான Tengnoupal, Kamjong, Ukhrul and Churachandpur-ல் அகதிகளாக நுழைபவர்களை தடுப்பது, மணிப்பூர் அரசு நிர்வாகத்துக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. சட்டவிரோதமாக நுழைபவர்கள் கண்டறியப்பட்டால், மாவட்ட நிர்வாகம் அவர்களை உடனே திருப்பி அனுப்பி வருகிறது. அவர்களை அனுமதித்தால், சட்டவிரோத நடவடிக்கைகளும், சட்டம் ஒழுங்கு கேடும் ஏற்படுவதாக மணிப்பூர் மக்கள் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில், மணிப்பூர் அரசுக்கு இல. கணேசனின் வழிகாட்டுதல் முக்கியமானதாக இருக்கும்.
அதேபோல், வடகிழக்கில், மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சனையும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அசாம், மிசோரம் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. அதேபோல், மணிப்பூர் – நாகாலாந்து இடையேயும் எல்லைப் பிரச்சனை உள்ளது. Dzukou பள்ளத்தாக்குப் பகுதி மற்றும் Tungjoy கிராமம் ஆகியவை சர்ச்சைக்குரிய பகுதிகளாக இருக்கின்றன. மணிப்பூர் வாசிகள் இந்தப் பகுதிக்குச் சென்றால், நாகாலாந்து அரசு அவர்களை கைது செய்கிறது. இந்த விவகாரத்தையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டிய பொறுப்பு இல. கணேசனுக்கு உள்ளது.
பா.ஜ.க. முதலமைச்சர்
மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்கிறது. 2017-ம் ஆண்டு பைரேன் சிங் முதலமைச்சராக பொறுப்பேற்றார். கால்பந்தாட்ட வீரரான இவர், பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். நாட்டுக்கு சிறந்த பங்களிப்பை தந்தமைக்காக 2018-ம் ஆண்டு Champions of Change என்ற விருதைப் பெற்ற இவர், வட கிழக்கு மாநில முதலமைச்சர்களில் முக்கியமானவராக அறியப்படுகிறார். பைரேன் சிங்கும், இல. கணேசனும் சித்தாந்த ரீதியாக ஒரே பாதையில் பயணிப்பவர்கள் என்பதால், மாநில நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பதில் முரண்பாடு ஏற்பட வய்ப்பு இல்லை.
இதையெல்லாம் தாண்டி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம், 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வளர்த்தெடுத்த இல. கணேசன் ஆளுநராக இருப்பது கட்சிக்கு அனுகூலமாக இருக்கும் என பாஜக மேலிடம் நம்புவதாகத் தெரிகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry