வீடுகளில் எளிதாக வளர்க்கக்கூடிய அவசியமான மூலிகைகள்! மருத்துவ பயன்களுடன் ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!

0
570

நகரங்கள் கான்கிரீட் காடுகளாக மாறிவரும் சூழலில், வீடுகளில் என்னென்ன மூலிகைகளை வளர்க்கலாம், அவற்றின் மருத்துவப் பயன்கள் என்ன? கை வைத்தியம் அல்லவது பாட்டி வைத்தியத்துக்கு, அவை எவ்வாறு உதவும் என்பதை சுருக்கமாகப் பார்க்கலாம்.

சென்னை போன்ற நெருக்கடியான நகரங்களில் வசிப்பவர்கள், இயன்ற இடத்தில் தொட்டிகளில் மூலிகை செடிகளை வளர்க்கலாம். ஃபிளாட் சிஸ்டத்தில் இருப்பவர்கள், வீட்டின் முன்புறமோ அல்லது ஃபிளாட் அசோசியேஷன் மூலம் மாடித்தோட்டமாகவோ மூலிகைச் செடிகளை வளர்க்கலாம்.

செம்பருத்தி

உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் ரத்த ஓட்டம் தடையின்றி நடைபெற செம்பருத்திப் பூ உதவுகிறது. செம்பருத்தி பூக்கள் ஐந்தை எடுத்து, அதை சுத்தமான 200 மில்லி லிட்டர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை நான்கில் ஒரு பங்காக சுண்டச் செய்து, காலை, மாலை அருந்தி வர ரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.

அதேபோல், செம்பருத்தி பூக்கள் ஐந்தை 50 மில்லி தேங்காய் எண்ணெயில் ஊற வைக்கவும். பின்னர் அந்த எண்ணெயை நன்றாக சூடு செய்து தினமும் தலையில் தேய்த்துவர, தலைமுடி கறுகறுவென அடர்த்தியாக வளரும். இதுபோன்று ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியதுதான் செம்பருத்தி.    

கீழாநெல்லி

மஞ்சள் காமாலை நோயை முற்றிலும் குணப்படுத்தும் அரிய மூலிகையாக சித்த மருத்துவம் கீழா நெல்லியை பரிந்துரைக்கிறது. இதன் வேரை நன்றாக அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து, நெல்லிக்காய் அளவு மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர மஞ்சள் காமாலை நோய் குணமாகும். இதேபோல் கீழா நெல்லி இலையை சுத்தமான பசும்பாலுடன் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டால் பித்தம் நீங்கும்.

கற்பூரவள்ளி

வீடுகளில் சின்ன தொட்டிகளில் வளர்க்க ஏதுவான மூலிகை இது. இவற்றின் இலைகளை நீராவியில் வேகவைத்து, அதிலிருந்து வெளிவரும் சாற்றை 5 மில்லி அளவுக்கு அருந்தி வர, சுவாசக் கோளாறை உண்டுபண்ணும் மார்புச்சளி நீங்கும். மூச்சுவிட சிரமப்படும் குழந்தைகளில் மார்பில் கற்பூரவள்ளி இலைகளின் சாற்றை தடவினால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

கற்றாழை

கண் திருஷ்டிக்காக கற்றாழையை வீடுகளில் வளர்ப்பார்கள். உங்கள் வீட்டில் வளர்த்தால் கொசுக்கள் வராமல் இருக்க இது உதவுகிறது. மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டது என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாமலே இருக்கிறது. உடல் சூட்டைக் குறைத்து, தூக்கமின்மையை சரி செய்யும் வல்லமை கற்றாழைக்கு உள்ளது. இதன் சதைப் பகுதியை 10 கிராம் அளவு எடுத்து நன்றாக சுத்தம் செய்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.

சரும நலன், கூந்தல் ஆரோக்கியத்துக்கும் கற்றாழை பயன்படுகிறது. ஆண்களின் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும் குணமும் இதற்கு உண்டு. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நமது உடம்பு வயதாகுவதை தடுக்கிறது. நீங்கள் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருந்தால் கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அடிபட்ட மற்றும் வெட்டப்பட்ட காயங்கள் மற்றும் தீ காயங்கள் போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாக இது பயன்படுகிறது.

தூதுவளை

எல்லா இடங்களில் எளிதாக பயிராகும் மூலிகைகளில் இதுவும் ஒன்று. தூதுவளை இலையுடன் சிறிதளவு நெய் சேர்த்து வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், நெஞ்சில் கட்டியிருக்கும் கோழை வெளியேறும். மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் திறன் கொண்ட இந்த தூதுவளை இலையை, துவையலாகவும், குழம்பாகவும் சமைத்து உண்ணலாம். தூதுவளை, நுண் கிருமிகளை எதிர்ப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது அறிவியல்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நொச்சி

கொசுவை பக்கத்தில் அண்டவிடாத செடி நொச்சி. கொசுக்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள வீடுகளில் அவசியம் வளர்க்க வேண்டிய மூலிகை செடி இதுவாகும். சுவாசம் தொடர்பான பல நோய்களுக்கு இது நிவாரணம் தருகிறது. நொச்சி இலைகளை தலை அடியில் வைத்து உறங்கினால் தலைவலி குணமாகும். நொச்சி இலைகளை, ஆமணக்கு நெய் ஊற்றி வதக்கி, வலிக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும்.

ஆடாதொடை

ஆடு தின்னாத இலை, ஆடு தொடாத இலை போன்றவையே இதற்கான பெயர்க்காரணம். வேலியோரங்களில் சாதாரணமாகக் காணப்படும். இலை, வேர், பூ, பட்டை என இச்செடியின் ஒவ்வொரு பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டது. 2 இலைகளை 4 மிளகுடன் சேர்த்து மென்றால் குரல் கமறல் சரியாகும். இனிய குரல் வளத்துக்கு இது பெருமளவு கைகொடுக்கும். ஆடாதொடை இலைச்சாற்றை தினமும் 5 மில்லி என்ற அளவில் 6 நாள் குடித்தால் ரத்த தட்டணுக்கள் அதிகரிக்கும். டெங்கு காய்ச்சலுக்கு இது முக்கிய மருந்து என்பதால், இதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. நுரையீரல் தொற்றை சரிசெய்து சுவாசத்துக்கும் இது உதவுகிறது.

கரிசலாங்கண்ணி

கரிசாலையில் வெள்ளை, மஞ்சள் என இரு வகைகள் உள்ளன. மஞ்சள் கரிசலாங்கண்ணியில் சத்துக்கள் அதிகம். இதன் இலையை சாறு எடுத்து, நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூச முடி கறுகறுவென நன்றாக வளரும். தெளிவான பார்வைக்கும், கல்லீரல் நலன் காக்கவும், சுவாச ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் கரிசலாங்கண்ணி பயன்படுகிறது. வள்ளலார் அருளிய காயகல்ப சூரணத்தில் வெள்ளை கரிசலாங்கண்ணி சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கருந்துளசி

மூலிகை செடிகளின் ராணி என துளசி போற்றப்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்கு பெரும் சவாலாக இருப்பது சளி, மூக்கடைப்பு மற்றும் தலைவலி என்றால் அது மிகையல்ல. கருந்துளசி இவை அனைத்தையும் சரி செய்கிறது. இதன் இலைகளை நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து, நீராவியில் வேக வைக்க வேண்டும். அதில் இருந்து வெளியேறும் சாற்றை 10 மில்லி அளவு அருந்திவர நெஞ்சில் உள்ள கோழை வெளியேறிவிடும். சீரண பிரச்சினை, காலரா, இன்ஸோமினியா, ஹிஸ்ட்ரியா போன்றவற்றை எதிர்த்தும் துளசி செயல்படுகிறது

ஆவாரை

ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டாஎன்பது பிரபலமான பழமொழி. நீரிழிவு நோயை எதிர்க்கும் மகத்தான வல்லமை கொண்ட ஆவாரம் பூவின் தேவை மிகவும் அதிகரித்து வருகிறது. ஆவாரம் பூக்களை நிழலில் காய வைத்து, அரைத்து, காலை மாலை என வெறும் வயிற்றில் 2 கிராம் சாப்பிட்டு வந்தால் பெப்டிக் அல்சர் குணமாகும்.

பிரண்டை

பிரண்டையின் மருத்துவ குணம் அறிந்து, நமது முன்னோர் அதை சட்னியாக செய்து சாப்பிடும் வழக்கம் வைத்திருந்தனர். கிராமப்புறங்களில் இப்போதும் இந்த வழக்கம் காணப்படுகிறது. பிரண்டையின் தோலைச் சீவி உள்ளே காணப்படும் சதைப்பகுதியுடன் தேவையான புளி சேர்த்து வேக வைக்க வேண்டும். இந்தக் கலவையை வாரத்தில் 2 நாட்கள் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமை பெறும். நாக்கின் சுவையின்மை நீங்கும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்யும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது நிவாரணம் தரும்.

பவழமல்லி

இரவில் மலர்ந்து மனம் பரப்பும் தன்மை கொண்டதுதான் இந்த பவழமல்லி. குளிர்காலத்தில் இந்தப் பூக்கள் அதிகம் பூக்கும். தேவலோகத்தில் இருந்து இந்த மலர் கிருஷ்ணரால் வரவழைக்கப்பட்டது என்பது ஐதீகம். இதன் இலையைச் சாறாகப் பிழிந்து 5 மில்லி என்ற அளவில், காலை, முற்பகல், மதியம், பிற்பகல், மாலை, இரவு என 6 வேளை அருந்தி வந்தால், ரத்த தட்டணுக்கள் குறைபாடு நீங்கும். வைரஸ் காய்ச்சலால் அவதிப்படுவோருக்கு 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கொடுத்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

நிலவேம்பு

அலோபதி மருந்துகளுக்கு சவால்விட்டு, டெங்கு, பன்றிக்காய்ச்சல் எனப் பல காய்ச்சல்கள் வந்தபோது நிலவேம்புதான் மக்களை காப்பாற்றியது. இப்போதும், டெங்கு, கொரோனா போன்ற தொற்றுகளால் ஏற்படும் காய்ச்சல்களுக்கு நிலவேம்பு கஷாயம் கைகொடுக்கிறது. இதன் இலைகளை நிழலில் உலர்த்தி, வெந்நீரில் ஊற வைத்து தினமும் 2 கிராம் அளவுக்கு காலை மற்றும் மாலை உண்டு வந்தால், உடல் வலி குணமாகும். கொசுக்களால் புதிய காய்ச்சல்கள் அதிகரித்து வரும் சூழலில், ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மூலிகை நிலவேம்பு

இந்த மூலிகை செடிகள் எல்லாம் பாட்டி வைத்தியத்துக்கு பயன்படுத்தி அதன் மூலம் முன்னோர்கள் பயன் அடைந்துள்ளனர். இந்த மூலிகைகளை வீட்டு வைத்தியங்களுக்கு பயன்படுத்தலாம். ஆனால், மருத்துவர் ஆலோசனையுடன் பயன்படுத்த வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry