புதுச்சேரியில் தாமரைக் கொடியை பிடிங்கி எறியும் பாஜக! ரங்கசாமி மீதும் பொதுமக்கள் கடும் அதிருப்தி!

0
192

புதுச்சேரியில், பேரிடர் காலத்தில் மக்கள் நலனை புறந்தள்ளிவிட்டு, அரசியல் சதுரங்கம் விளையாடும் பாஜக மற்றும் என்.ஆர். காங்கிரல் கட்சிகளின் மீது மக்களிடையே கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

5 மாநிலங்களில் கடந்த 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில், அரசுகள் பொறுப்பேற்று, கொரோனா பேரிடரை எதிர்கொள்வதிலும், பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதிலும் தீவிரம் காட்டி வருகின்றன.

புதுச்சேரியில் கடந்த 7-ந் தேதி ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர் கொரோனா பெருந்தொற்றால் அவர் பாதிக்கப்பட்டு, குணமடைந்த நிலையில், கடந்த 26-ந் தேதி, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமன எம்.எல்..க்கள் பொறுப்பேற்றனர். ஆனால், இதுவரையில், அமைச்சர்கள் யார் என்பது இறுதி செய்யப்படாததால், ஆட்சி முழுமையாக அமையவில்லை.

என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் 10 பேர் மற்றும் பாஜக உறுப்பினர்கள் 6  பேர் வெற்றி பெற்றுள்ளனர். ரங்கசாமி சிகிச்சையில் இருந்தபோதே(அவருக்கு தெரிவிக்காமல்?), பாஜகவைச் சேர்ந்த 3 பேர் எம்.எல்..க்களாக நியமனம் செய்யப்பட்டனர். பின்னர் ஏனாம் தொகுதியில் ரங்கசாமியை தோற்கடித்த சுயேட்சை வேட்பாளர் கோலப்பள்ளி ஸ்ரீனிவாசா அசோக்-ஐ இழுத்து, கூட்டணித் தலைவரான ரங்கசாமியை அசிங்கப்படுத்தியது பாஜக. அடுத்து, என்.ஆர். மீதான அதிருப்தியால் சுயேட்சையாக களமிறங்கி வெற்றிபெற்ற அங்களான் மற்றும் உழவர்கரை சிவசங்கரன் ஆகியோரும் பாஜக முகாமுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.  இதன்மூலம், பேரவையில், என்.ஆர். காங்கிரஸ் பலம் 10 ஆகவும், பாஜகவின் பலம் 12 ஆகவும் உள்ளது.

எனவே, ரங்கசாமியை பொம்மை முதலமைச்சராக வைத்துக்கொண்டு, ஆட்சி நிர்வாகத்தை முழுமையாக கையிலெடுக்க பாஜக முழுவீச்சில் தயாராகிவிட்டது. பேரவையில் தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்துடன், துணை முதலமைச்சர் உள்பட அனைத்து முக்கிய இலாகாக்கள், வாரியத் தலைவர்கள் பொறுப்புகளை கையிலெடுப்பதற்கான பின்னணி வேலைகள் நடந்து வருகின்றன. இதனை ஏற்றாக வேண்டும் என ரங்கசாமிக்கு, பாஜகவிடம் இருந்து கடுமையான நெருக்கடி கொடுக்கப்படுவதாகவே தெரிகிறது

இப்படி ஒரு காய் நகர்த்தல்களை பாஜக செய்துவரும் நிலையில், ரங்கசாமி இதை ஏற்றாக வேண்டும். இல்லையென்றால், பாஜகவை கழட்டிவிட்டு, 6 எம்.எல்..க்களை கொண்ட திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டும். ஆனால், எந்தவொரு முடிவை எடுக்காமலும், முதலமைச்சர் என்ற பொறுப்பை உணராமலும், மூன்று வாரங்களாக  ரங்கசாமி அமைதியாகவே இருப்பது மாநில நலனுக்குக் கேடு என பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவரிடம் பேசியபோது, சொந்த செல்வாக்கில் 6 பேர் வெற்றி பெற்றவுடன், புதுச்சேரியே தன் வசம் வந்துவிட்டதாக பாஜக நினைக்கிறது. தென் மாநில மக்கள், பாஜகவை சற்று தள்ளிவைத்துதான் பார்க்கின்றனர். வெற்றி பெற்ற 6 பேரை வைத்து கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, அமைச்சரவையை இறுதி செய்து முழுமையாக ஆட்சி அமைக்க விடாமல், குழப்பத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்துவது, மக்கள் மத்தியில் பாஜக மீதான வெறுப்பை அதிகப்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு பாஜகவே காரணம் என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் ஒரு நாளைக்கு 1,500-க்கும் மேற்பட்டோர் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். 20 முதல் 30 பேர் வரை உயிரிழக்க நேரிடுகிறது. சுகாதாரத்துறை செயலாளர் மட்டுமே பேரிடர் சூழலை எதிர்கொண்டு வருகிறார்.

மக்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல், பேரிடர் காலத்தில் முழுமையாக ஆட்சி அமையவிடாமல் தடுத்து, அரசு எந்திரத்தை முடக்குவது, என்னவிதமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை டெல்லி தலைமையிடம், புதுச்சேரி பாஜகவினர் எடுத்துச்சொல்கிறார்களா? என தெரியவில்லை. துணை முதலமைச்சர் என்ற இல்லாததொரு பதவியை உருவாக்கத் துடிக்கும் பாஜக, மாநில அந்தஸ்து, மாநில அரசின் எட்டாயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி, புதுச்சேரி செலவினங்களுக்கான மத்திய அரசு நிதி மானியம் 100% வழங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துமா? அதுபற்றி பேசாமல், அதிகாரத்தை ருசிப்பதில் மட்டுமே அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். புதுச்சேரியில் கட்சியை வளர விடாமல் பாஜக-வினரே தடுக்கின்றனர்.

அமைச்சரவையை இறுதி செய்து, குழப்பங்களுக்கு உடனடியாக விடை தேடி, பெருந்தொற்று பரவாமலும், உயிரிழப்பு ஏற்படாமலும் தடுக்கும் நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால், ரங்கசாமியும், பாஜகவும் மக்கள் மன்றத்தில் பதில் சொல்லும் நிலை விரைவில் ஏற்படும். புதுச்சேரியில் தாமரை மலர்ந்தும், மக்கள் மகிழவில்லை” என்றார். ஆட்சி அதிகாரம் மட்டுமே முக்கியம் எனக் கருதும்,  என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜகவின் இந்த அரசியல் சதுரங்க விளையாட்டு, அக்கட்சிகளின் உண்மை முகத்தை தோலுரிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry