புதுச்சேரியில், காங்கிரஸ் – திமுக கூட்டணி உடைகிறது! ராஜ்பவன் தொகுதியில் எஸ்.பி. சிவக்குமார் போட்டி!

0
13

புதுச்சேரியைப் பொறுத்தவரை தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க திமுக தயாராகிவிட்டது. தனித்துக் களம் காண வேண்டும் என்பதில் மாநில அமைப்பாளர்கள் சிவா, எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் உறுதியாக உள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திமுகவின் பெரும்பாலான நிர்வாகிகள், காங்கிரஸை ஒரு சுமையாகவே கருதுகிறார்கள். இந்த நிலை புதுச்சேரியில் இல்லை. ஏனெனில், காங்கிரஸ் ஆட்சி அமைக்க திமுகவின் தயவு தேவைப்படுகிறது. ஆனால், தங்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படுவதில்லை என்பது புதுச்சேரி திமுக நிர்வாகிகளின் மனக்குமுறலாகவே இருந்து வருகிறது.

அதற்கு தீர்வு காணும் விதமாகவே காங்கிரஸை கழட்டிவிட திமுக தீர்மானித்திருக்கிறது. இதை உறுதிபடுத்தும் விதமாக மாநில திமுக (வடக்கு) அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் ராஜ்பவன் தொகுதியை குறிவைத்து வேலைகளை தொடங்கிவிட்டார். இந்தத் தொகுதியில் கடந்த 2 முறையாக காங்கிரஸ் கட்சியின் லட்சுமி நாராயணன் எம்.எல்..வாக இருக்கிறார். எனவே காங்கிரஸ் கோட்டை என்றே  இந்தத் தொகுதியை அக்கட்சியினர் கூறுகின்றனர்.

ஆனால், 1990, 1996, 2001, 2006 என நான்கு முறை இதே ராஜ்பவன் தொகுதியில் எஸ்.பி. சிவக்குமார் எம்.எல்..வாக இருந்திருக்கிறார். 1996-ல் ஜானகிராமன் முதலமைச்சராக இருந்தபோது, இவர் கல்வித்துறை அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். 2016-ல் தான் தொகுதி மாறி முத்தியால்பேட்டை சென்று வெற்றி வாய்ப்பை இழந்தார். நான்கு முறை தொகுதியில் பணியாற்றிய அனுபவம், மக்களுடனான நெருக்கம் ஆகியவற்றை மனதில் வைத்து ராஜ்பவன் தொகுதியில் தேர்தல் வேலைகளை எஸ்.பி. சிவக்குமார் தொடங்கிவிட்டார்.

கூட்டணி நீடிக்க வேண்டும் என்று கருதினால், காங்கிரஸ் வசம் உள்ள தொகுதியை சிவக்குமார் குறிவைத்திருக்க மாட்டார். வெற்றி உறுதி என்ற திடமான நம்பிக்கையுடன் அவர் தேர்தல் வேலைகளை தொடங்கியிருப்பது காங்கிரஸ் முகாமை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கட்சி ரீதியாக சிவக்குமார் பொறுப்பில் 12 தொகுதிகள் உள்ளன. ஏற்கனவே தட்டாஞ்சாவடி ஃபார்முலா கொடுத்த உற்சாகத்தில், வெயிட்டான வேட்பாளர்களை களமிறக்கி, குறைந்தது 8 தொகுதிகளிலாவது வென்றுவிட வேண்டும் என சிவக்குமார் கணக்கு போடுகிறார்.

இவரைப்போலவே, மற்றொரு மாநில அமைப்பாளரான சிவாவும், வழக்கறிஞர் சம்பத் போன்ற வெற்றி வாய்ப்புள்ள சில வேட்பாளர்களை அடையாளம் கண்டுவிட்ட நிலையில், மற்ற தொகுதிகளில் வெயிட்டான வேட்பாளர்களை களமிறக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இவர்களது கணக்கு சரியானால், புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதுதான் காங்கிரஸை பழிதீர்க்க சரியான தருணம் என திமுக நிர்வாகிகள் ஜரூராக களமிறங்கியிருப்பது, புதுச்சேரி பிராந்திய திமுக தொண்டர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது