கிறிஸ்தவர்களுக்கு இடையே நிலவும் தீண்டாமை! உண்மையை உரைக்கும் சிறப்புக் கட்டுரை!

0
172

கிறித்தவ மதத்துக்கு உள்ளேயே நிலவும் தீண்டாமைக் கொடுமை தற்போது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இந்து ஆதிக்க சாதியினர் மட்டுமே தீண்டாமையை கடைப்பிடிப்பதாக பிரச்சாரம் செய்யப்படும் நிலையில், கிறிஸ்தவர்களின் இந்தப் போக்கு அதிர்ச்சி தருவதாக பலரும் கூறுகின்றனர்.

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் இருந்து கன்னூர் மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்தவர் 70 வயதான ஜயன் ஜோசஃப். தினக் கூலியான இவர், இளம்பருவத்திலேயே கிறித்தவ மதத்துக்கு மாறி, கத்தோலிக்க பிரிவில் இணைந்தார். பட்டியலின சமூகத்தவரான இவருக்கு வேலை செய்யும் இடத்தில், உணவு வெளியேதான் தரப்படும். மற்ற கிறித்தவ குழந்தைகளுடன், அதவாது கேரளாவின் பாரம்பரிய Syria கிறித்தவ குழந்தைகளுடன், இவரது குழந்தைகள் விளையாட அனுமதி கிடையாது. சர்ச்சில் எல்லோரும் கூடும்போது, இவர் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார். இவரைப் போன்றவர்களுக்கு புது கிறித்தவர்கள் என்ற அடைமொழி உள்ளது.

மற்றொரு பெண்மணிக்கும் இதேபோன்ற பிரச்னைதான். அவர் பாரம்பரிய கிறித்தவ குடும்பம். பட்டியலினத்தைச் சேர்ந்த, கிறித்தவ மதத்துக்கு மாறிய ஒருவரை 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள். ஆனால் பட்டியலினத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அவரது பெற்றோர், இதுவரை அவர்களை ஏற்கவில்லை.

கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் கெவின் ஜோசஃப் என்ற தலித் கிறித்தவ இளைஞர், Syria கிறித்தவரான அவரது காதல் மனைவியின் பெற்றோரால் ஆணவக் கொலை செய்யப்பட்டார்.  இதேபோல் பட்டியலினத்தவர்களான புலாயா சாதியைச் சேர்ந்த ஒருவர் கிறித்துவ மதத்துக்கு மாறிவிட்டார். ஆனாலும், இன்னமும் தான் பட்டியலினத்தை சேர்ந்தவராக நடத்தப்படுவதாகவும், கிறித்தவ ஆதிக்க சக்திகளால் துன்புறுத்தப்படுவதாகவும் அவர் வேதனையுடன் கூறுகிறார். தங்களுக்கு எதிரான தாக்குதல்களை யாரும் தட்டிக்கேட்காத நிலையில், போலீஸாரும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க மறுப்பதாக இவரைப் போன்ற தலித் கிறித்துவர்கள் கூறுகின்றனர்.

இது அண்டை மாநிலமான கேரளாவுக்கானது மட்டுமல்ல. தமிழகத்திலும், ஏன், இன்னபிற மாநிலங்களிலும் இதே பாகுபாடு, தீண்டாமை நிலவுகிறது. தமிழகத்தில் கிறித்தவ மதத்தைத் தழுவிய பட்டியல் இனத்தவர் ஒருவரின் இறப்புக்குப் பின், பொதுக் கல்லறையில் அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை.

தமிழகத்தில் உயர் சாதி கிறித்தவர்கள் உள்ள கிராமங்களில் தலித் பாதியார்களின் நிலைமை மோசமாக உள்ளது. வேளாங்கண்ணி போன்ற புகழ்பெற்ற தேவாலயங்களில் ஒரு பட்டியலினத்தவரை பாதிரியாராக நியமிப்பது இல்லை என தெரியவருகிறது. வேளாங்கண்ணி திருவிழாவின் போது தலித்துகளுக்கு என்று தனியாக ஒருநாள் ஒதுக்கப்படுவதாகவும், அந்த நாள் விழாவில்தான் தலித்துகள் கலந்துகொள்ள முடியும் எனத் தெரிகிறது. குமரி மாவட்டத்தில் தலித் கிறித்தவர்களுக்கான சர்ச்சுகளுக்கு, உயர் சாதி கிறித்தவர்கள் செல்ல மாட்டார்கள். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

கிறித்துவ மதத்தில் சாதி பேதம் இருப்பதை பல்வேறு தலித் கிறித்தவ அமைப்புகள் ஏற்கின்றன. கிறித்தவ மதத்துக்கு மாறிய பட்டியலினத்தவர்களுக்கு, மதம் மாறுவதற்கு முன் இருந்த அரசு சலுகையை கொடுக்க வேண்டும் என அவை கோரிக்கை வைக்கின்றன. தலித் கிறித்தவர்களுக்கு எதிரான பாகுபாடு ஒருபுறமிருக்க, தங்களுக்கு சட்டப்பாதுகாப்பும் இல்லை என இந்திய சர்ச்சுகளுக்கான தேசிய கவுன்சிலில் பணியாற்றும் ஷிபி பீட்டர் கூறுகிறார்.

கிறித்தவ மதத்துக்கு மாறிய தலித்துகளுக்கான சலுகைகளை தொடர்ந்து வழங்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, கிறித்தவமும்,  இஸ்லாமும் சமத்துவத்தை போதிக்கிறது, அவர்கள் சாதிய வழியை பின்பற்றுவதில்லை என கூறியது. குறிப்பிட்ட அந்த 2 மதங்களிலும் பாகுபாடு, தீண்டாமை நிலவுவதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் மத்திய அரசு தெரிவித்தது.

கிறித்தவர்கள் மத்தியிலும் சாதி பாகுபாடு, தீண்டாமை தலைவிரித்தாடுவதை இந்த வழக்கின் மூலமே உணரமுடியும். இதேபோன்ற நிலை தலித் முஸ்லிம்கள் மத்தியிலும் நிலவுவதாக கூறப்படுகிறது. கிறித்தவ மதத்திற்கு மாறினால் சாதி ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்று சொல்லித்தான் பட்டியலின மக்கள் மதம் மாற்றப்படுகிறார்கள். ஆனால், கிறித்தவ மிஷினரிகள் நடத்தும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு கிடையாது.

1969-ல் தாக்கல் செய்யப்பட்ட இளையபெருமாள் கமிட்டி அறிக்கை, 1981-ல் தாக்கல் செய்யப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கை போன்ற அனைத்துமே, ஒருவருடைய சமூக பொருளாதார நிலையானது, மதம் மாறுவதால் மேம்படாது என தெளிவாகக் கூறியிருக்கிறது. மதம் மாறுபவர்கள் இதை உணர வேண்டும். இதில் மாற்றுக் கருத்து இருப்பவர்கள் உரிய தரவுகளுடன் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தால், அதை வெளியிடவும் வேல்ஸ் மீடியா தயாராக இருக்கிறது