முதலியார்பேட்டை தொகுதி! சென்டிமென்ட்டால் துவண்டிருக்கும் எம்.எல்.ஏ. பாஸ்கர்!

0
97

முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.. பாஸ்கர்  மிகவும் திறமையான அரசியல்வாதி என அறியப்படுபவர். புதுச்சேரி மாநில அதிமுகவின் முகமாக கருதப்படும் அன்பழகன் எம்.எல்..வின் சகோதரராக இருந்தாலும், அவருடன் ஒப்பிடும்போது இவரது செயல்பாடு வித்தியாசமாகவே இருக்கும்.

முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் முதலியார்பேட்டை தொகுதியில், அரசியல் ஜாம்பவான்களான சபாபதி, தொழிற்சங்க தலைவர் மஞ்சினி, முன்னாள் அமைச்சர் பா. கண்ணன்(தோல்வி), எம்..எஸ். சுப்பிரமணியன் போன்ற முக்கியஸ்தர்கள் களமாடிய தொகுதியாகும். இங்கு அடுத்தடுத்த இரண்டு முறை எம்.எல்..வாக இருக்கும் பாஸ்கர், தொகுதியில் தனக்கெதிராக, அரசியல் ரீதியில் யாரும் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். எட்டு ஆண்டுகளாக கட்டிக்காத்த அவரது வியூகம், தொகுதி சென்ட்டிமென்ட்டாலோ என்னவோ வழக்கறிஞர் சம்பத்தால் திடீரென கேள்விக்குறியாக்கப்பட்டுவிட்டது.

கடந்த முறை என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போதும் சரி, தற்போது காங்கிரஸ் ஆட்சியிலும் சரி, நினைத்த காரியத்தை எளிதாக முடிக்கும் வல்லமை பெற்றவர் பாஸ்கர். காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இவரது கண்ணசைவுக்கு ஏற்ப செயல்படுவார்கள். அதற்கேற்ப ஆளும்கட்சியின் அனுகூலமும், ஆதரவும் இவருக்கு உண்டு.

எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், பாஸ்கரால் மட்டும் எப்படி காரியம் சாதிக்க முடிகிறது, அந்த ராஜதந்திரம்தான் என்ன என சக அரசியல் தலைவர்களே வியப்பார்கள். அதிமுகவில் நின்று வெற்றிபெற்ற பாஸ்கர், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார். பின்னர் அதிமுகவுக்கு திரும்பினார். தற்போது, ஆளும்கட்சியின் அனுசரணையால், காங்கிரஸ் சார்பாக அவர் போட்டியிடக்கூடும் என பரவலாக பேசப்படுகிறது.

நிறைந்த அமாவாசை தினமான (செவ்வாய்க்கிழமை 18/08/2020) நேற்று  தனது 48-வது பிறந்தநாளை பாஸ்கர் கொண்டாடினார். அதற்கான விளம்பர தட்டிகளிலோ, போஸ்டர்களிலோ, பெரும்பாலும் ஜெயலலிதா புகைப்படம் இடம்பெறவில்லை. . பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி புகைப்படங்களும் இல்லை.

இது அதிமுகவினரை முனுமுனுக்க வைக்க, அதை ஈடுகட்டும் விதமாக, செய்தித்தாள்களுக்கு கொடுத்த பிறந்தநாள் விளம்பரத்தில், ஜெயலலிதா, ஓபிஎஸ், ஈபிஎஸ் படங்களை இடம்பெறவைத்தார்.

இப்படியான தந்திரமான அரசியல்வாதியான பாஸ்கரிடமும் சில பலவீனங்கள் இருக்கத்தான் செய்கிறது. தீவிர இறை நம்பிக்கை கொண்டவரான இவர், வீடு, அலுவலகத்தில் ஞாயிற்றுக் கிழமை ராகுகால பூஜை செய்வார். கொல்லூர் மூகாம்பிகையின் தீவிர பக்தர். கடந்த 24.06.2004 அன்று கடலூர் திருவந்திபுரம் கோயிலுக்கு செல்லும்போது, புதுச்சேரி எல்லைக்கு உட்பட்ட ஒரு இடத்தில் கொலை நடந்தது. அந்த வழியாக சென்றதால், வழக்கில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டது. பின்னர் வழக்கிலிருந்து பாஸ்கர் வெளியே வந்தார். தான் வழக்கில் சிக்க திருவந்திபுரம் கோயில் காரணமாக இருக்குமோ என சென்ட்டிமென்ட்டாக கருதி, இதுவரை அவர் திருவந்திபுரம் கோயிலுக்கு அவர் செல்லவில்லை.

இதுபோன்று சென்டிமென்ட்டில் சிக்கி உழல்பவர்தான் பாஸ்கர். இதில் முதலாவது விஷயம், முதலியார்பேட்டை தொகுதி ராசி. 1980 முதல் பார்த்தால், இந்தத் தொகுதியில் யாருமே இரண்டு முறைக்கு மேல் வெற்றி பெற்றது இல்லை. ஏற்கனவே 2 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த சென்டிமென்ட், பாஸ்கர் மனதை பிசைந்துகொண்டிருக்கிறது.

இரண்டாவதாக, அவர் மனதை மிகவும் நெருடுவது, நேற்றைய லாக்டவுன். நிறைந்த அமாவாசை தினத்தில் தனது பிறந்தநாள் வருவதால், அன்றைய தினம் நலத்திட்ட உதவிகள் வழங்கி தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிவிட வேண்டும் என பாஸ்கர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அரசு அறிவித்த ஊரடங்கு அவரது முயற்சிக்கு தடையாக அமைந்தது

அரசியலில் பாஸ்கருக்கு நேர் எதிரியாக வளர்ந்து வரும் வழக்கறிஞர் சம்பத், இந்தியாவில் ஊரடங்கு அறிவிப்பதற்கு 6 நாள் முன்னதாக தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார். ஆனால், பாஸ்கரின், பிறந்தநாளுக்கு ஆறு நாள் முன்னதாக புதுச்சேரி அரசு அறிவித்த செவ்வாய்க்கிழமை ஊரடங்கு அவரது திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுத்துவிட்டது. இதை அவர் அபசகுனமாகவே நினைக்கிறாராம்.

இப்படி போஸ்டர்களில் உற்சாகம் கொப்பளித்தாலும், மனதளவில் பாஸ்கருக்கு பின்னடைவு ஏற்பட்டதாகவே தெரிகிறது. ஆனாலும், அவரது ஆதரவாளர்களோ எப்போதும்போல உற்சாகத்துடனேயே வலம் வருகின்றனர். தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும், வெற்றி பெறுவது எப்படி என்பது பாஸ்கருக்கு தெரியும், அவரது வெற்றி உறுதி என்றே அவர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். முதலியார்பேட்டை தொகுதியில் எந்தக் கட்சி சார்பில் பாஸ்கர் களமிறங்குவார், தொகுதி சென்டிமென்ட் என்னவாகும் என்பது விரைவில் தெரிந்துவிடும்.