ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான் ஆதரவு! இந்தியா புறக்கணிப்பு!

0
34

ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் பிரிட்டன், கனடா உள்ளிட்ட 6 நாடுகள் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஆனால் இந்தியா உட்பட 14 நாடுகள் இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டன என்று கூறி, அவற்றின் மீதான விசாரணை கோரும் தீர்மானம் ஒன்றை, ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் சென்ற பிப்ரவரியில் பிரிட்டன் கொண்டு வந்தது.

தீர்மானம் மீதான இறுதி வாதத்தின்போது பேசிய இலங்கைப் பிரதிநிதி, ஏற்கெனவே இலங்கை அரசு ஒரு நடவடிக்கையை எடுத்து மனித உரிமைகளை பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில், இதுபோன்ற தீர்மானம், இலங்கையின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும். இலங்கையைப் போன்று இந்தத் தீர்மானத்தை மற்ற நாடுகளும் நிராகரிக்க வேண்டும் என்றார்

இதைத்தொடர்ந்து பேசிய இந்திய பிரதிநிதி, “மனித உரிமைகளைக் காப்பதில் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு பொறுப்பு இருக்கிறது. அண்டை நாடு எனும் அடிப்படையில் இறுதிப்போருக்கு பின்னர் மீள் கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது. சர்வதேச நாடுகள் வலியுறுத்துவதைப் போல, 13வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் இலங்கையின் அனைத்து மாகாண சபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்என்று அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிராக ஐ.நா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகள்களும், எதிராக சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் புறக்கணித்துவிட்டன. இந்த தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் நிறைவேற்றப்படுவது இலங்கை அரசுக்கு ஒருவித சர்வதேச அழுத்தத்தை கொடுக்கும் முயற்சியாக பார்க்கப்பட்டது. அதே வேளை, இதை அப்படியே செயல்படுத்த வேண்டிய கட்டாயம் அந்நாட்டுக்கு இல்லை.

இந்தியா புறக்கணித்தது ஏன்?

இலங்கையின் பிரதான துறைமுகமாக இருக்கும் கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்த இந்தியாவுடன் இலங்கை ஏற்கனவே ஓர் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அதை இலங்கை துறைமுகங்கள் ஆணையமே மேம்படுத்தும் என்று கூறிய இலங்கை அரசு, இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் இருந்து பிப்ரவரி தொடக்கத்தில் பின்வாங்கியது. இந்த ஒப்பந்தத்தை மீண்டும் தொடர்வதற்கு இந்தியா முயற்சி செய்து கொண்டுள்ளது. எனவே இலங்கைக்கு எதிராக இந்திய அரசு வாக்களித்தால் இந்த துறைமுகத் திட்டத்தில் பின்னடைவு ஏற்படுவதுடன், இருநாட்டு வெளியுறவுத் தொடர்புகளிலும் பாதிப்பு ஏற்படும் என்று இந்திய அரசு கருதுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry