
குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்விக்குக் காரணமான சில விஷயங்களைப் பார்ப்போம்.

அகமதாபாத் ஆடுகளம், எதிர்பார்த்ததை விட மெதுவாகவும், வறண்டதாகவும் இருந்தது. குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் பிட்ச் நிலைமைகள் மாறியபோது, அந்த மெதுவான தன்மையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தத் தவறியதால், இந்தியாவின் வியூகம் எடுபடவில்லை. அதேநேரம், ஆஸ்திரேலிய அணியின் திட்டமிடல் மற்றும் செயல்திறன் சிறப்பாக இருந்தது. இந்திய அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியபோதும் நிதானத்தை கடைபிடித்தனர். ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், பந்துவீச்சாளர்களை குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றி பவுலிங் செய்ய வைத்து இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுக்குள் வைத்திருந்தார்.
அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டிக்கான பிட்ச் மெதுவான தன்மை கொண்டதாக இருந்ததால் இந்தியாவுக்கு சாதகமாக இல்லை. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வுசெய்ததது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பிட்ச்சின் தன்மையைக் கணித்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அதற்கேற்ப நேரம் செல்லச் செல்ல, குறிப்பாக 2-வது இன்னிங்சில் பிட்ச் பேட்டிங்குக்கு சாதமாக மாறியது.
பனி காரணமாக இந்திய சுழற்பந்து வீச்சாளர்களால் முழுத்திறனுடன் பந்துவீச முடியவில்லை. பந்து ஈரமாகி Turn ஆகாததால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள், குறிப்பாக டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷேன் ஆகியோரால் கணிசமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடிந்தது. இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மாவின் வியூகமும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. முக்கியமான கட்டங்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்லிப்பில் ஃபீல்டிங் நிறுத்தாததால், முக்கியமான ஆஸ்திரேலிய பார்ட்னர்ஷிப்களை உடைக்க முடியவில்லை.
மெதுவான ஆடுகளத்தில் பேட்டிங் செய்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் கில், ’ஸ்ட்ரோக் மேக்கிங்’ செய்வதில் சிரமத்தை எதிர்கொண்டார். ரோஹித் சர்மா ஒரு முனையில் எளிதாக பேட்டிங் செய்தார். ஆனால் ஷுப்மன் கில் இந்தியாவுக்கு வலுவான தொடக்கத்தை வழங்க முடியவில்லை. இந்திய அணியின் முந்தைய 10 ஆட்டங்களின் தொடர் வெற்றிக்கு வலுவான தொடக்கமே முக்கியக் காரணமாக அமைந்தது.
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் நிலைமைகளை நன்கு புரிந்துகொண்டு, குறைவான வேகத்தில் பந்துகளை வீசி இந்திய பேட்ஸ்மேன்களால் ஷாட்களை விளையாட விடாமல் தடுத்தனர். கில் தொடக்கத்திலேயே வெளியேறி ஸ்கோர் போர்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினார். ரோஹித் சர்மா இன்னிங்ஸின் ஆரம்ப கட்டத்தில், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரது பந்துவீச்சை அடித்து ஆடினாலும், கிளென் மேக்ஸ்வெல்லால் ஆட்டமிழந்தார்.
Also Read : சட்டவிரோத மணல் கொள்ளை! 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்! நெருக்கடியில் ஆட்சியாளர்கள்!
ஐந்தாவது ஓவரில் சுப்மன் கில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 31 பந்துகளில் 47 ரன்கள் குவித்து 10-வது ஓவரில் ஆட்டமிழந்தார். கேப்டன் வெளியேறிய போதிலும், இந்திய அணி 80/2 என்ற நல்ல நிலையில் இருந்தது. ஆனால், பின்னர் வந்த ஓவர்களில் இந்திய அணி தடுமாறியது. ஸ்ரேயாஸ் ஐயர் (4) ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, 11வது ஓவரில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது.
விராட் கோலியும், கே.எல்.ராகுலும் இந்திய இன்னிங்ஸை சமன் செய்தனர். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தது. ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை ரன் எடுக்கவிடாமல் கட்டுப்படுத்தினர். இந்திய ஜோடி குறைந்த ரிஸ்க் எடுத்து ஆஸ்திரேலிய வீரர்களை தடுமாறச் செய்யத் தவறினர். 11 முதல் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் மட்டுமே எடுத்தது. 21 முதல் 30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஒட்டுமொத்தமாக இந்திய அணி 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை மட்டுமே அடித்தது.
மெதுவான ஆடுகளத்தில் ஸ்கோர் செய்ய போராடிய இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்திருந்தனர். விராட் கோலி 63 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுலுடன் சூர்யகுமார் யாதவ் இணைவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஆச்சரியமளிக்கும் வகையில், ரவீந்திர ஜடேஜா களத்தில் இறங்கினார். ஆல்-ரவுண்டர் இந்தியாவின் ரன் ரேட்டை அதிகரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ஜடேஜாவால் பெவிலியன் திரும்புவதற்கு முன்பு 22 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
சூர்யகுமார் யாதவை வழக்கமான பேட்டிங் ஆர்டரில் அனுப்பாமல் இந்தியா ஒரு வாய்ப்பை தவறவிட்டதாக தெரிகிறது. அதிரடி ஆட்டத்திறனுக்கு பெயர் போன மும்பை பேட்ஸ்மேன் முன்னதாகவே வந்து தனது தனித்துவமான பாணியில் விளையாடியிருந்தால், இந்தியா இன்னும் வலுவான ஸ்கோரை எட்டியிருக்கும்.

10 போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற போது, பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் வேகப்பந்து வீச்சு கூட்டணி, அணிக்கு ஆரம்பகட்ட திருப்புமுனைகளை வழங்குவதில் பயனுள்ளதாக இருந்தது. இருப்பினும், முக்கியமான இறுதிப்போட்டியில் பும்ரா மற்றும் முகமது ஷமியுடன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார் ரோஹித் சர்மா. இந்த முடிவு தொடக்கத்தில் நம்பிக்கையை தந்தது. ஆஸ்திரேலியா 47/3 ஆக கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும், முகமது சிராஜிடம் புதிய பந்தை ஒப்படைக்காதது இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது. சிராஜ் மூன்றாவது பவுலராக களமிறக்கப்பட்டபோது, குறிப்பாக மிடில் ஓவர்களில் சற்று பழைய பந்துடன் பந்துவீசினார்.
ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோரின் ஆரம்ப கட்ட பந்துவீச்சால் சூழல் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாகவே தெரிந்தது. ஆனால், இந்தச் சாதகமான சூழ்நிலையை இந்திய அணியால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இந்திய வீரர்கள் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கத் தவறினர்.
டிராவிஸ் ஹெட் (137), மார்னஸ் லபுஷேன் (58) ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 192 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவை ஆபத்திலிருந்து மீட்டு வரலாற்று சிறப்புமிக்க ஆறாவது உலகக் கோப்பையை வென்று கொடுத்தது. ஆஸ்திரேலியாவின் மோசமான தொடக்கத்தை இந்தியா தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், இறுதிப் போட்டியின் முடிவு ரோஹித் சர்மா அண்ட் கோவுக்கு சாதகமாகவே இருந்திருக்கும்.

ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் பிற அணிகள் வெல்லும் பரிசுத் தொகை எவ்வளவு?
போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலரும் (சுமார் ரூ.33 கோடி), இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணிக்கு 2 மில்லியன் டாலரும் (சுமார் ரூ.16 கோடி) பரிசுத்தொகையாக கிடைத்திருக்கும்.
அரையிறுதியில் தோற்ற நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு தலா 800,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.6.5 கோடி) வழங்கப்படும்.
நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறத் தவறும் அணிகளுக்கு தலா 100,000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.83 லட்சம்), ஒவ்வொரு குழு நிலைப் போட்டியிலும் வெற்றி பெறுபவர்களுக்கு 40,000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.33 லட்சம்) ஊக்கத்தொகை கொடுக்கப்பட்டிருக்கும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry