அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை! ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

0
22

ஊழல் வழக்கில், திமுக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இந்திரகுமாரி, அவரது கணவர் பாபுவுக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

1991 – 1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த புலவர் இந்திரகுமாரி, தன்னுடைய கணவர் பாபு நடத்தி வந்த, மெர்சி மதர் இந்தியா மற்றும் பரணி சுவாதி கல்வி அறக்கட்டளைகள் சார்பில், வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளையும் தொடங்குவதாகக் கூறி, சமூக நலத்துறை சார்பில் 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.

ஆனால், இந்த நிதியின் மூலம் எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என்று, சமூக நலத்துறையின் அப்போதைய செயலாளர் லட்சுமி பிரானேஷ், 1997 ஆம் ஆண்டு புகார் அளித்தார். அதன் அடிப்படையில்இந்திரகுமாரி, சமூக நலத்துறையின் முன்னாள் செயலாளர் கிருபாகரன் ஐ..எஸ்., ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகம் ஐ..எஸ்., இந்திரகுமாரியின் கணவரும் வழக்கறிஞருமான பாபு, இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கட கிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.பி., எம்.எல்..க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது.  விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதி அலிசியா, முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு மற்றும் சண்முகம் ஆகியோரை குற்றவாளிகள் என அறிவித்தார்.  இந்திரகுமாரி மற்றும் அவரது கணவர் பாபுவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்குவதாகவும், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிருபாகரன் இறந்து விட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட நீதிபதி, வெங்கடகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி அவரை விடுதலை செய்தார். தீர்ப்பு வெளியானதும் அதிர்ச்சியடைந்த இந்திரகுமாரிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.

3 ஆண்டுகளுக்கு கீழேயுள்ள தண்டனை என்றால், தீர்ப்பை நிறுத்தி வைத்து மேல்முறையீடு செய்ய முடியும். ஆனால் இவர்களுக்கு 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திரகுமாரி மற்றும் அவரது கணவர் பாபு சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். ஒருவேளை மேல்முறையீடு செய்து அங்கே இந்த தீர்ப்பு நிறுத்தி வைக்கும் வரை இந்திரகுமாரிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க நேர்ந்தால், அவர் சிறை செல்லாமலே விசாரணையை எதிர்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. புலவர் இந்திரகுமாரி தற்போது திமுகவில் இலக்கிய அணி செயலாளராக உள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry