யோகா தின உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய மோடி! எம்-யோகா செயலி பற்றியும் விளக்கம்!

0
8

7-வது சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்துக்கான கருப்பொருள் “நல்வாழ்வுக்கான யோகா” என்பதாகும்.

யோகா பயிற்சி குறித்து உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று சர்வதேச அளவில் யோகா தினத்தை கொண்டாடுகிறது. யோகா என்பது இந்தியாவில் தோன்றிய ஒரு பண்டைய, உடல், மன மற்றும் ஆன்மீக பயிற்சியாகும். ‘யோகா’ என்ற சொல் சமஸ்கிருதத்திலிருந்து உருவானது.

ஏழாவது சர்வதேச யோகா தினமான இன்று காலை 6.30 மணிக்கு யோகாவால் ஏற்படும் நன்மைகள் குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது “ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கின்றேன். கொரோனா பெருந்தொற்று காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது. யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இன்னும் குறையவில்லை” என்றார்.

‘நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’

எனும் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், “உலக சுகாதார அமைப்புடன் இணைந்து, இந்தியா மற்றொரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இப்போது எம்-யோகா என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு வெவ்வேறு மொழிகளில் யோகா பயிற்சி வீடியோக்களைக் கொண்டிருக்கும். இது நமது ‘ஒரே உலகம், ஒரே ஆரோக்கியம்’ என்ற குறிக்கோளுக்கு உதவும்.

நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் யோகாவை கவசமாக பயன்படுத்தினர். அனுலோம், விலோம், பிரயாமா போன்ற சுவாச பயிற்சிகளை செய்கிறார்கள். இந்த பயிற்சிகள் சுவாச அமைப்பை பலப்படுத்துகின்றன என்று சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்று மருத்துவ விஞ்ஞானம் கூட மருத்துவ சிகிச்சையைத் தவிர்த்து, குணப்படுத்தும் செயல்முறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. குணப்படுத்தும் செயல்முறைக்கு யோகா உதவுகிறது” என்று பிரதமர் மோடி கூறினார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய அமைச்சர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் வீடுகளியே யோகா பயிற்சி மேற்கொண்டனர். இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு வீரர்கள் லடாக்கில் யோகப் பயிற்சி செய்தனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry