முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு! ஐந்து பேர் யார், யார்? அவர்களது பின்னணி என்ன?

0
38

தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனைகள் வழங்குவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐந்து பொருளாதார நிபுணர்கள் பற்றி பார்க்கலாம்.

தமிழக சட்டசபையின்  16-வது கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக கலைவாணர் அரங்கின் மூன்றாம் தளத்தில் கூட்டம் நடக்கிறதுஇதில் ஆளுநர் உரை நிகழ்த்தினார். அப்போது, “வரும் சில ஆண்டுகளுக்கு மட்டும் கிடைக்கக்கூடிய மனித வளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி, விரைவான பொருளாதார வளர்ச்சி பெற முற்படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதலமைச்சருக்கு  ஆலோசனை கூற, பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சிபெறச் செய்து பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செய்யும்என அறிவித்தார்.

1. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்  ரகுராம் ராஜன்,

2. நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டப்ளோ,

3. மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்,

4. ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ்,

5. மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயண் ஆகிய ஐவர் இந்தக் குழுவில் அங்கம் வகிப்பர். இவர்கள் பணிப் பொருளாதார நிலையை ஆராய்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சருக்கு  ஆலோசனைகளை அளிப்பார்கள் என்றும் ஆளுநர் கூறினார். இவர்களைப் பற்றி பார்க்கலாம்.

டாக்டர் ரகுராம் ராஜன்

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் ரகுராம் ராஜன், டெல்லியில் பட்டப்படிப்பும், அகமதாபாத்தில் உள்ள ஐ..எம்மில் எம்.பி.வும் படித்தவர். உலக வங்கியின் மூத்த அதிகாரியாகப் பதவி வகித்தவர். 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி வரப்போகிறது என்பதை முன்பே கண்டறிந்து சொன்னவர். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, பிரதமரின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இவர் நியமிக்கப்பட்டார். அதன்பின் ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அதிகரித்து வந்த வங்கிகளின் வாராக் கடனைக் கட்டுப்படுத்த பல முக்கியமான நடவடிக்கைகள் எடுத்தார்.

2014-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, நரேந்திர மோடி பிரதமராக வந்தபின், இவருக்கும் ஆட்சியாளர்களுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. 2016-ல் பணமதிப்பு நடவடிக்கையை மோடி எடுக்க நினைத்தபோது, அதற்கு ரகுராம் ராஜன் ஆட்சேபம் தெரிவித்தார். சுப்பிரமணியம் சுவாமியும், பா..க அமைச்சர்களும் தொடர்ந்து தந்த நெருக்குதல் காரணமாக, பதவிக் காலம் முடிந்தவுடன் ரகுராம் ராஜன் மீண்டும் அமெரிக்காவுக்கே சென்றுவிட்டார்.

டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன்

இவரும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்தான். உலக வங்கியில் முக்கியமான பதவியை வகித்தார். உலகின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் குறித்து சொல்லித் தருபவர். வளரும் நாடுகளின் பொருளாதாரம் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருபவர். ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கியின் கவர்னராகத் தேர்வான பின்பு, மன்மோகன் சிங்குக்கு முதன்மைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

மூன்று ஆண்டுக் காலத்துக்கு அந்தப் பணியை சிறப்பாகச் செய்து முடித்தார். பதவிக்காலம் முடிந்தபின்னும் அவரைத் தொடர்ந்து இருக்குமாறு பாஜக அரசு வற்புறுத்தியது. ஆனால், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சமீபத்தில் பஞ்சாப்பில் உள்ள பல்கலைக்கழகத்தின் உயர் பதவியை அவர் ஏற்றுக்கொண்டார். அந்தப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பிரதாப் பானு மேத்தா மத்திய அரசை விமர்சித்ததன் விளைவாகப் பதவியைத் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு ஆதரவாகத் தனது பதவியையும் டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா செய்தார்.

எஸ்தர் டஃபலோ

பிரான்ஸைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்தர் டஃப்லோ, அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (MIT) பொருளாதாரப் பேராசிரியராக இருக்கிறார். வறுமை ஒழிப்பு குறித்து இந்தியாவிலும் உலகின் வேறு நாடுகளில் மிக முக்கியமான ஆய்வுகளை நடத்தி இருக்கிறார். இவரும் இவர் கணவர் அபிஜித் பேனர்ஜியும் இணைந்து வறுமை ஒழிப்பு தொடர்பாகச் செய்த ஆய்வுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஜீன் டிரெஸ்

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜீன் டிரெஸ், இங்கிலாந்தில் உள்ள எஸ்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இந்தியாவில் உள்ள ஸ்டாட்டிஸ்ட்டிக்கல் இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். வளர்ச்சிப் பொருளாதாரம் குறித்த துறையில் ஆர்வத்துடன் செயல்படுபவரான ஜீன் டிரெஸ், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்திய சென்னுடன் இணைந்து, வறுமை ஒழிப்பு குறித்து புத்தகம் எழுதியவர். டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, பொருளாதார ஆய்வுக் குழு உறுப்பினராக இருந்தார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கொண்டுவந்து, கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கக் காரணமாக இருந்தவர் இவர்தான்.

டாக்டர் எஸ் நாராயண்

சென்னையை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் எஸ் நாராயண், 1965 முதல் 2004-ம் ஆண்டு வரை மாநில அளவிலும், மத்திய அரசிலும் பல்வேறு துறைகளில் உயர்பதவி வகித்தவர். நிதி, தொழில் மற்றும் வர்த்தகத்துறை, எரிபொருள், விவசாயம், கப்பல் போக்குவரத்து, சாலைவசதி போன்ற பல்வேறு துறைகளில் தலைமை வகித்தவர். பல்வேறு அமைச்சரவையில் பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்து தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகராக இருந்தவர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry