இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் பயணத்திற்கு முதல் தேர்வாக இருப்பது இரயில் போக்குவரத்து தான். ஏனெனில், மற்ற போக்குவரத்துகளை விடவும் இரயிலில் பயணக் கட்டணம் குறைவு. இந்தியாவிற்குள் எங்கு செல்ல வேண்டும் என நினைத்தாலும், அதற்கு இரயில் பயணம் பெரும்பாலும் பாதுகாப்பானதாகவும், நமது பட்ஜெட்டிற்கு ஏற்றதாகவும் இருக்கிறது.
ஆனால், அவ்வப்போது இரயில் விபத்துகள் நேரிடுகின்றன. இதனால் இரயில் பயணம் ஆபத்தானதா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுகிறது. என்றாலும், அனைத்து விதமான போக்குவரத்திலும் விபத்துகள் நடக்கத் தான் செய்கின்றன. இது மாதிரியான விபத்துகளில் இருந்து மீண்டு வர நமக்கு உதவுவது காப்பீடு மட்டுமே.
நோய்களும், விபத்துகளும் அதிகரித்துள்ள இன்றைய நிலையில் காப்பீடு ஒன்றே நமது குடும்பத்துக்கான பாதுகாப்பாக இருக்கிறது. இரயில் விபத்துகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், மத்திய அரசு நிவாரணம் வழங்குகின்றது. இதுதவிர நாம் இரயில் பயணக் காப்பீடை எடுத்தால் ரூ.10 இலட்சம் வரை இழப்பீடு கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த காப்பீடு எடுக்க நாம் செலவழிக்க வேண்டியது வெறும் 35 பைசா தான். நீங்கள் இந்த பயணக் காப்பீட்டை வாங்கினால், புறப்படும் இடத்திலிருந்து சேருமிடம் வரையிலான உங்கள் பயணத்துக்கு 35 பைசாவுக்கே காப்பீடு கிடைக்கும்.
இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தில் (IRCTC) இரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, பலரும் காப்பீடு பற்றி சிந்திப்பதில்லை. ஏனெனில் இதுபற்றிய விழிப்புணர்வு இன்னும் மக்களைச் சென்றடையவில்லை. ஒவ்வொரு முறையும் டிக்கெட் முன்பதிவின் போது காப்பீடைத் தேர்வு செய்து, 35 பைசாவை மட்டும் செலுத்தினால் போதுமானது.
Also Read : தினசரி எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? உங்களுக்கான ஸ்லீப்பிங் கால்குலேட்டர்!
ஐ.ஆர்.சி.டி.சியின் அதிகாரப்பூர்வ இணையதள போர்ட்டல் அல்லது மொபைல் ஆப்பிலிருந்து ரயில் டிக்கெட்டுகளை வாங்கினால் மட்டுமே பயணக் காப்பீடு கிடைக்கும். உங்கள் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தும் நேரத்தில், காப்பீட்டை வாங்குவதற்கான பயண காப்பீட்டு பெட்டியை நீங்கள் டிக் செய்ய வேண்டும்.
நீங்கள் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து டிக்கெட்டை வாங்கியவுடன் உங்கள் தொலைபேசி மற்றும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிகளில் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள். காப்பீட்டு வழங்குநர் வாடிக்கையாளர்கள் தங்கள் நியமனத் தகவலை சமர்ப்பிக்க ஒரு இணைப்பையும் வழங்குவார். காப்பீட்டுப் பெட்டியை டிக் செய்தால், அதே பி.என்.ஆரில் வாங்கிய ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் அதன் தனிப்பட்ட பயணக் காப்பீடு இருக்கும்.
நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேருடன் பயணம் செய்தால், அவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே பிஎன்ஆரில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், ஒவ்வொரு பாலிசிக்கும் 35 பைசா செலுத்தி அவர்கள் ஒவ்வொருவருக்கும் பயண காப்பீட்டை வாங்க வேண்டும். ஐ.ஆர்.சி.டி.சி தளத்திலிருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்த பயணக் காப்பீட்டை வாங்கலாம். இருப்பினும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, வெளிநாட்டினருக்கு காப்பீடு கிடைக்காது.
Also Read : கூகுள் மேப்ஸ்-ல் அட்டகாசமான அப்டேட்! ஒத்தையடி பாதை, ஃப்ளைஓவர் பிரச்சனைகளுக்குத் தீர்வு!
நீங்கள் காப்பீட்டுப் பெட்டியை டிக் செய்து ஆன்லைனில் பணம் செலுத்தியவுடன், நீங்கள் பாலிசி ஆவணங்களை காப்பீட்டாளரிடமிருந்து நேரடியாக மின்னஞ்சல் மூலம் பெறுவீர்கள். இந்தக் காப்பீட்டின் மூலம் பயணிகளுக்கு ரூ.10 இலட்சம் வரையிலான காப்பீடு உறுதியாகிறது. இரயில் பயணிகள் தங்கள் பயணத்தின் போது, மதிப்புமிக்க பொருள்கள் தொலைந்தால் கூட இந்தக் காப்பீட்டின் மூலம் இழப்பீடு கிடைக்கும்.
பயணத்தில் ஏதேனும் விபத்துகள் நிகழ்ந்தால் சிகிச்சைக்கான செலவை IRCTC இழப்பீடாக அளிக்கும். ஒருவேளை பயணத்தின் போது விபத்து ஏற்பட்டு நிரந்தரமாக ஊனமுற்றால் ரூ.10 இலட்சமும், சிறிய அளவில் ஊனமுற்றால் ரூ.7.5 இலட்சமும், பலத்த காயம் உண்டானால் ரூ.2 இலட்சமும், சிறிய அளவிலான காயம் எனில் ரூ.10,000 என காயத்தின் அளவிற்கேற்ப இழப்பீடு கிடைக்கும்.
விபத்தில் சிக்கிய 4 மாதங்களுக்குள் பயணிகள் காப்பீட்டைக் கோரி விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முதலில் காப்பீட்டு நிறுவனத்திற்குச் சென்று காப்பீட்டுக்கான கோரிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். அப்போது தவறாமல் நாமினியின் பெயரைக் குறிப்பிட வேண்டும். ஏனெனில் விபத்தில் பயணி உயிரிழக்கும் பட்சத்தில் ரூ.10 இலட்சம் காப்பீட்டுத் தொகை நாமினிக்குச் செல்லும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry