ஜோதிடப்படி யாருக்கு ஹார்ட் அட்டாக் மரணம் வரும்..? நடிகர் மாரிமுத்து மரணமும், சோஷியல் மீடியா வதந்தியும்!

0
81
Is Actor Marimuthu Death due to Astrology?

சோஷியல் மீடியா முழுவதும் நடிகர் மாரிமுத்துவின் மரணம்தான் பேசும் பொருளாகியுள்ளது. எத்தனையோ பிரபலங்களின் மரணத்தை பார்த்திருந்தாலும், நடிகர்கள் விவேக், மயில்சாமியின் திடீர் மரணம் திரையுலகினரை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் திடீர் மரணம் வருத்தம் தரும் அதேநேரம், சோஷியல் மீடியாக்களில் பரப்பப்படும் வதந்திகள் கவலையளிக்கின்றன.

ஜோக்கர்களால் கேலிக்குள்ளாகும் ஜோதிடம்

அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மாரிமுத்து பங்கேற்று ஜோதிடர்களை வெளுத்து வாங்கியிருந்ததுதான் ஒட்டுமொத்த வதந்திகளுக்கும் காரணம். “இந்த நாடு நாசமா போறதுக்கு காரணமே ஜோதிடமும், ஜோதிடர்களும் தான்” என்று நடிகர் மாரிமுத்து பேசியிருந்த நிலையில், அவர் இறப்புக்கு ஜோதிடர்கள் விட்ட சாபம் என்று வதந்தியைப் பரப்பிவருகின்றனர்.

நவீன ஜோதிட பரிகாரங்கள் என்ற பெயரில் அந்த நிகழ்ச்சியில் பல காமெடிக்கள் அரங்கேறின. சந்திராஷ்டம பாதிப்பை குறைக்க செல்ஃபி எடுத்து டெலிட் செய்ய சொன்னது, கன்னியாகுமரியில் நின்று கொண்டு கடலை முறைத்து பார்த்தால் பிரச்னைகள் போய்விடும் என்பது போன்ற அபத்தமான விஷயங்களை கேட்கும்போது சிரிப்பு மட்டுமல்ல ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையும் போகத்தான் செய்யும். ஜோதிடத்தை பழித்ததால் இறந்தாரா? ஜோதிடர்கள் விட்ட சாபம் தான் நடிகர் மாரிமுத்துவின் மரணத்திற்கு காரணமா? போன்ற வதந்திகளையும், கட்டுக்கதைகளையும் நம்ப வேண்டாம்.

ஹார்ட் அட்டாக் யாருக்கு வரும்?

30 ஆண்டுகளுக்கு முன்பு 60 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்படும் என்ற நிலை மாறி, தற்போது 20 வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. ஒருகாலத்தில் பணக்கார வியாதியாக இருந்த சர்க்கரை நோய் தற்போது ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரையும் பாடாய்படுத்துகிறது.

இளம் தலைமுறையினர் மாரடைப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளாவதற்கு இன்றைய உணவுப் பழக்க வழக்கம்தான் காரணம் என்று கடந்து செல்வார்கள். நடிகர் மாரிமுத்துவின் மரணம் இயற்கையானது என்றாலும், மாரடைப்பு ஏற்படுவதற்கென சில கிரக அமைப்புகள் உள்ளன.

Also Read : உங்கள் லக்னத்துக்கு ஏற்ற லக்கி கடவுள் யார்? இந்த நிற உடை அணிந்து வழிபட்டால் கைமேல் பலன்!

நவக்கிரகங்களில் இதயத்திற்கான காரககிரகம் என்றால் அது சூரியன். மருத்துவ ஜோதிடத்தில் கடகமும், சிம்மமும் இதயத்தை குறிக்கும் ராசிகள். இதேபோல், ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு 4, 5ஆம் இடங்களும், ராசிக்கு 4, 5ஆம் இடங்களும் இதயத்தை குறிக்கும். ஜாதகத்தில் சூரியன் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், லக்னம், ராசிக்கு 4, 5ஆம் இடங்களில் ராகு, கேது, செவ்வாய், சனிபகவான் போன்ற பாவ கிரகங்கள் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் (இதற்கு விதிவிலக்கு குரு மற்றும் பெளர்ணமி சந்திரன் பார்வை).

ஜாதகத்தில் லக்னம், ராசிக்கு 4, 5 மற்றும் கடகம், சிம்மத்தில் பாவ கிரகங்கள் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. அடிக்கடி மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதும், உடற்பயிற்சி, உணவுப் பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்துவதும் முக்கியம். வதந்திகளை பரப்பாதீர்கள்..! வதந்திகளை நம்பாதீர்கள்..!

கட்டுரையாளர் : ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர். தொடர்புக்கு:- ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை. astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry