CSK டீமை பலிவாங்கிய சீனியர் – ஜுனியர் அரசியல்! தோனியே இப்படிச் செய்யலாமா? மிஸ்ஸான டீம் ஸ்பிரிட்!

0
262
Is this true 'There is no CSK without MS Dhoni? | MS Dhoni & Ruturaj Gaikwad ©Sportzpics

3 Mins Read : நடப்பு ஐபிஎல் தொடரின் முக்கியமான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த பலவீனமும் அம்பலமானது என்றால் மிகையில்லை. முக்கியமான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்து பாதியிலேயே வெளியேறியது, 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியின் மோசமான செயல்பாடாக 2024 ஐபிஎல் சீசன் அமைந்தது. சிஎஸ்கே அணியின் 9 ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ரவீந்திரா ஜடேஜா, மொயின் அலி, மிட்ஷெல் ஆகியோரைத் தவிர வேறு எந்த வீரர்களும் பெரிதாக சர்வதேச அனுபவம் பெற்றிருக்கவில்லை.

2022-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே லீக் சுற்றோடு வெளியேறியது. அப்போது ரவீந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டு, மீண்டும் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் ஏற்பட்ட குழப்பமே தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது. இதே நிலைதான் தற்போதும். ஐபிஎல் சீசன் தொடங்கும்வரை தோனிதான் கேப்டன் என்று எதிர்பார்த்த நிலையில், திடீரென ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது, அதிர்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஒருசேர ஏற்படுத்தியது.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பும் சிஎஸ்கே ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். ஏனென்றால், சில சீசன்களாகவே சிஎஸ்கே அணிக்காகக் சிறப்பாக விளையாடிவரும் ருதுராஜ் கெய்க்வாட், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஆனால் இந்த ஆதங்கத்தை கெய்க்வாட் எந்த ஆட்டத்திலும் வெளிப்படுத்தவில்லை என்றாலும், மனதளவில் அவருக்கு இது தாகத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Chennai Super Kings’ captain Ruturaj Gaikwad (Photo by R.SATISH BABU/AFP via Getty Images)

நடப்பு ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே வீரர்கள் தேர்வே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சிஎஸ்கே அணியில் இதற்கு முன் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பல ஜாம்பவான்கள் இருந்தனர். அவர்கள் ஓய்வு பெற்றபின், அந்த இடத்தை நிரப்ப சரியான வீரர்கள் கொண்டுவரப்படவில்லை. எனவே, வீரர்கள் தேர்விலேயே சிஎஸ்கே நிர்வாகம் கோட்டை விட்டது. சீனியர் வீரர்கள், ஜூனியர் வீரர்கள் என்ற இடைவெளி சிஎஸ்கே ஓய்வறையில் இருந்ததாகப் பல்வேறு செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இதற்கு முன்பு கெய்க்கவாடுக்கு ஆலோசனை கூறுகிறேன் என்று தோனியே பீல்டிங் செட் செய்வது, ஆலோசனைகள் கூறுவது என ‘பேக் சீட் டிரைவராகப்’ பல போட்டிகளில் செயல்பட்டார். இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தபின்புதான், கேப்டன்சி பதவியை மறைமுகமாகச் செய்வதில் இருந்து தோனி விலகினார். அதிலும் குறிப்பாக கேப்டன்சி குறித்து தன்னிடம் ஆலோசனை கேட்கக்கூடாது என்று தோனி, கெய்க்வாடிடம் கூறியதாகத் தகவல்களும் வெளிவந்தன.

MS Dhoni & Ruturaj Gaikwad

சிஎஸ்கே அணியைக் கையாள்வதும், நிர்வகிப்பதும் ஒரு யானையை அடக்குவது போலாகும். இளம் வீரர்களான கே.எல்.ராகுல், சஞ்சு சாம்ஸன், ரிஷப் பந்த் ஆகியோர் கேப்டனாக தனித்துச் செயல்பட்ட அளவுக்கு, ருதுராஜால் கேப்டன்சியில் தனித்தன்மையை வெளிப்படுத்த முடியவில்லை, பெரும்பகுதி தோனியின் சாயலே இருந்தது. கேப்டன் பொறுப்பும் ஏற்று, பேட்டிங்கிலும் சிறப்பாக பங்களிப்பு செய்வது கடினமான பணிதான். ஆனால் அதை கெய்க்வாட் சிறப்பாகவே செய்தார்.

தோனி கேப்டன்சியில் சிஎஸ்கே அணியில் அனைத்து வீரர்களிடமும் கூட்டுழைப்பு, அர்ப்பணிப்பு, உற்சாகம் ஆகியவை இயல்பாகவே இருந்தன. ஆனால், தற்போதைய சிஎஸ்கே அணியில் ‘டீம் ஸ்பிரிட்’, வீரர்ளுக்கான ஆர்வம் குறைவாகவே இருந்தது என்பதுதான் உண்மை. தோனி கேப்டன்சியில் சிஎஸ்கே சறுக்கும்போது, அதைத் தூக்கி நிறுத்த ஏதாவது ஒரு வீரர் விஸ்வரூபமெடுத்து ஆடும் சூழல் இருந்தது. ஆனால், இந்த சீசனில் சிஎஸ்கே வெற்றி பெற்ற 7 போட்டிகளிலும் கெய்க்வாட்டின் பேட்டிங் பங்களிப்பு மட்டுமே பிரதானமாக இருந்தது.

Also Read : சர்க்கரை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா? இதோ உங்களுக்கான பதில்! Vels Exclusive

தோனியால் மட்டும்தான் சிஎஸ்கே அணிக்கு சாம்பியன்ஷிப்பை பெற்றுத்தர முடியும் என்ற பிம்பம் ரசிகர்கள் மனதில் கட்டமைக்கப்பட்டுவிட்டது. தோனி இல்லாத சிஎஸ்கே அணியை ஏற்க ரசிகர்கள் இன்னும் தயாராகவில்லை. ‘தோனி, கேப்டன் பொறுப்பேற்காமல், ப்ளேயிங் லெவனில் இருந்தபோதே சிஎஸ்கே அணி லீக் சுற்றோடு வெளியேறுகிறது. அப்படியிருக்கும்போது தோனி ஓய்வு பெற்று சிஎஸ்கே அணியிலிருந்து சென்றால், அந்த அணியின் நிலையை கற்பனை செய்வது கடினமாகத்தான் இருக்கிறது’ என்கின்றனர் ரசிகர்கள். முன்னாள் வீரர் ஷேவாக், தோனி இல்லாத சிஎஸ்கே அணியை ரசிகர்கள் இப்போதுள்ள அளவு கொண்டாடமாட்டார்கள் என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இந்திய டெஸ்ட் அணிக்கு தோனி கேப்டனாக பொறுப்பேற்று ஆஸ்திரேலியா பயணம் செய்தார். அங்கு ஆஸ்திரேலிய அணியிடம் முதல் டெஸ்டில் தோல்வி அடைந்தவுடன், 2-வது டெஸ்ட் தொடங்கும் முன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி திடீரென அறிவித்தார். இது, இந்திய அணியின் தன்னம்பிக்கையை, மனோபலத்தை குலைத்தது. அதேபோன்ற போக்கை இந்த சீசனில் ஐபிஎல் தொடர் தொடங்கும் சில நாட்களுக்கு முன் சிஎஸ்கேவிலும் தோனி புகுத்தினார்.

Also Read : JEE தேர்வு எழுதாமலேயே சென்னை IITயில் படிக்க வாய்ப்பு! அதுவும் ஆன்லைனில் Data Science டிகிரி! மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!

தோனிதான் கேப்டன் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் ருதுராஜை கேப்டனாக அறிவித்தது பல கேள்விகளை எழுப்பியது. அணி வீரர்களின் தன்னம்பிக்கையை இது அசைத்துப் பார்த்தது. கேப்டனாக இருக்கும்போது தோனி கடந்த சீசன்களில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சீசனில் தோனிக்குக் கேப்டன் என்ற சுமை இல்லை. அப்படி இருக்கும்போது, தோனி தானாக முன்வந்து நடுவரிசை, முன்வரிசையில் களமிறங்கியிருக்கலாம்.

ஆனால், கடைசி லீக்ஆட்டம் வரை தோனி கடைசி வரிசையில்தான் களமிறங்கினார். 14 போட்டிகளில் 161 ரன்கள் மட்டுமே சேர்த்து, 11 ரன்கள் சராசரி வைத்துள்ளார். தோனி நடுவரிசையில், முதல்வரிசையில் களமிறங்கினால் நிச்சயம் சிஎஸ்கே ஸ்கோர் 200 ரன்களுக்கு மேல் செல்லக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் தோனி அதை கடைசி வரை செய்யவே இல்லை. தோனி மிகச்சிறந்த ஃபினிஷர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், சிறந்த ஃபினிஷர் என்பதை நிரூபிப்பதற்காக, அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போதும் கடைசி வரிசையில்தான் களமிறங்குவேன் எனச் செயல்பட்டது சரியானதா என்ற கேள்வி எழுகிறது.

MS Dhoni turned back the clock in Jaipur with an imperious extra cover six ©IPL

மொத்தத்தில், சிஎஸ்கே லீக் சுற்றோடு வெளியேறியிருக்கும் இந்த நிலையில், தோனி இல்லாத சிஎஸ்கே அணியை ஏற்க ரசிகர்களும், வீரர்களும் இன்னும் மனதளில் தயாராகவில்லை. அதை உருவாக்க வேண்டிய கடமை தோனிக்கு இருக்கிறது. 42 வயதான தோனியே எல்லாம் என்ற பிம்பத்தை உடைக்க சிஎஸ்கே அணிக்குச் சில ஆண்டுகள் பிடிக்கலாம். அதற்கு, புதிய கேப்டனை ரசிகர்கள் ஏற்க வேண்டும்.

“ஆண்டு முழுவதும் நான் கிரிக்கெட் விளையாடுவதில்லை. எனவே நான் ஃபிட்டாக இருக்க வேண்டும். நான் இங்கு வந்தவுடன், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் ஃபிட்டான இளைஞர்களுடன் நீங்கள் ஒப்பிடுகிறீர்கள். தொழில்முறை விளையாட்டு எளிதானது அல்ல, வயதுக்கு யாரும் தள்ளுபடி வழங்குவதில்லை” இதைச் சொன்னது வேறுயாருமல்ல, தோனியேதான்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry