தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்! 2 வாரத் தாக்குதலில் காசாவில் 7000க்கும் அதிகமானோர் பலி!

0
41
Israel-Hamas war rages as Gaza deaths mount

இஸ்ரேல் – காசா போரை நிறுத்த சர்வதேசத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது என அறிவித்த சில மணிநேரங்களில் இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கிப் படை வடக்கு காசாவுக்குள் நுழைந்துள்ளன.

இஸ்ரேலிய ராணுவத்தின் தரைப்படைகள் காசா பகுதிக்குள் பெரிய அளவில் ஊடுருவியுள்ளதாக இஸ்ரேலின் ராணுவ வானொலி அறிவிப்பை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் வானொலியும் தரைவழி ஊடுருவலை உறுதிப்படுத்தியுள்ளது. தரைவழித் தாக்குதல் நடத்தும் நோக்கத்தோடு சில வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையைவிட நேற்றிரவு நடத்தப்பட்ட சோதனை பெரியது என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வடக்கு காசாவுக்குள் தரைவழியாக நுழைந்து ஹமாசின் நிலைகள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாசின் 250 நிலைகளை குறிவைத்து தரைவழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தாக்குதல் நடத்திவிட்டு பீரங்கிகள் மீண்டும் இஸ்ரேல் எல்லைக்குள் திரும்பி விட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்சனையின் பின்னணி! ஹமாஸ் இயக்கம் தோன்றிய வரலாறு! The Israeli-Palestinian conflict!

வடக்கு காசாவுக்குள் இரவில் நுழைந்து டாங்கிகள் மூலம் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல் ‘தரைவழித் தாக்குதலுக்கான ஒத்திகை’ என இஸ்ரேல் பாதுகாப்புப்படை குறிப்பிட்டுள்ளது. இது, “அடுத்த கட்ட போருக்கான ஆயத்தம்” என்றும், சில மணிநேரங்களில் ராணுவ வீரர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி இஸ்ரேலிய பகுதிக்கு திரும்பிவிட்டனர் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “காசா மீதான தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. எப்போது, எப்படி என்பதை நான் விரிவாகக் கூறமாட்டேன். ஆனால், ஹமாஸின் இலக்குகளை அழிக்க, காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்.

எங்களது இறையாண்மையை காக்கவும், எங்களின் இருப்புக்காகவும் போரில் ஈடுபட்டுள்ளோம். இந்தப் போரில் இரண்டு அடிப்படை நோக்கங்களை அமைத்துக் கொண்டுள்ளோம். அவை, ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறனை ஒழிப்பது, பிடிபட்டுள்ள பணயக் கைதிகளை மீண்டும் அழைத்துவருவது. இந்த நோக்கங்களை நிறைவேற்ற தேவையான அனைத்தையும் இஸ்ரேல் செய்யும்” எனத் தெரிவித்தார்.

ஹமாஸ் அமைப்பின் வடக்கு பகுதியின் தளபதி ஹசான் அல் அப்துல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. துல்லியமான வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

Also Read : மருந்துகள், தண்ணீர், உணவுப் பற்றாக்குறையால் தவிக்கும் காசா மக்கள்! கள நிலவரத்தை விளக்கும் விரிவான பதிவு!

போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவுக்கு உடனடி உதவிகள் தேவை என உலக சுகாதார நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. “மருந்துகள், சுகாதார பொருட்கள் இல்லாமல், காசாவின் மருத்துவமனைகள் கற்பனை செய்ய முடியாத மனிதாபிமான பேரழிவின் விளிம்பில் உள்ளன. காசாவுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் தேவை. உதவிகள் கிடைத்தால் மட்டுமே, காசா மீண்டெழ முடியும்” என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவசரமாக தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை காசாவுக்குள் கொண்டு வருவதற்கு இஸ்ரேல் முழு போர் நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும் என பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல்-மலிகி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், “இம்முறை இஸ்ரேல் நடத்தும் போர் வித்தியாசமானது. இது பழிவாங்கும் போர்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமாக மாறியுள்ளதாக துருக்கி அதிபர் எர்டோகன் கூறியுள்ளார். காசாவில் சிந்தப்பட்ட இரத்தம் “முஸ்லிம்களின் இரத்தம்” என்பதால் மேற்கத்திய நாடுகள் சர்வதேச சட்டத்தை கடைபிடிப்பதில்லை என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Also Read : ‘லியோ’ படத்தால் லாபமில்லை! வேதனையில் குமுறும் திரையங்கு உரிமையாளர்கள்! ‘LEO’ Exorbitant Shares Hurt Theater Business!

ஹமாஸ் இயக்கத்தினர், கடந்த 7-ம் தேதி காசா எல்லையை கடந்து இஸ்ரேலில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலியர்கள் 1,400 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. கடந்த 2 வாரங்களாக தாக்குதல் நீடிக்கிறது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இதுவரை, காசாவில் 2,360 குழந்தைகள் உட்பட 7,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் உள்பட மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர துணை தூதர் ரவீந்திரா, இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை மற்றும் பெரிய அளவிலான பொதுமக்கள் உயிர் இழப்புகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. பெருகிவரும் மனிதாபிமான நெருக்கடி மிகவும் ஆபத்தானது. இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வருகிறது.” என்று கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry