3.30 Minute(s) Read : இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு இதை போராகவே பிரகடனம் செய்துள்ளார். இரு தரப்பிலும் 600 பேர் பலியானதாகவும், 2000 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்தச்சூழலில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான மோதலின் பின்னணி, பாலஸ்தீன விடுதலை இயக்கம் மற்றும் ஹமாஸ் இயக்கம் உருவான வரலாறு பற்றி சற்றே சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய யூதர்கள் அனுபவித்த யூத எதிர்ப்பு நடவடிக்கைகளால் உத்வேகம் பெற்று, யூதர்களுக்கு ஐரோப்பாவுக்கு வெளியே ஒரு சொந்த நாடொன்றை நிறுவும் நோக்கில் சையோனிச இயக்கம் உருவானது. அந்தக் காலகட்டத்தில், பாலஸ்தீனப் பிராந்தியம் ஆட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தப் பகுதி முஸ்லீம்கள், யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் என்ற மூன்று மதத்தினராலும் புனிதமான இடமாகக் கருதப்பட்டது.
1920கள், 1940களில் சையோனிச இயக்கம் யூதர்களை பாலஸ்தீனத்துக்குள் பெருமளவு குடிமயர்த்தியது. ஆட்டோமான் பேரரசு முதலாம் உலகப்போரின் முடிவில் வீழ்ந்த நிலையில், பாலஸ்தீனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு பிரிட்டன் வசம் சென்றது. அரபுகளுக்கும், யூதர்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை பிரிட்டன் நிறைவேற்றாத நிலையில், அரபு தேசியவாதிகளுக்கும் சையோனிஸ்டுகளுக்கும் இடையே நடந்த மோதல்கள், யூத மற்றும் அரபு ஆயுதக் குழுக்களுக்கு இடையேயான மோதல்களாக வலுப்பெற்றன.
இரண்டாம் உலகப்போரின் போது நாஜிக்களால் நடத்தப்பட்ட யூத இனப்படுகொலையில் பல லட்சம் ஐரோப்பிய யூதர்கள் மாண்ட பிறகு, யூத நாடு ஒன்றை அங்கீகரிக்க சர்வதேச அழுத்தம் அதிகரித்தது.1947ம் ஆண்டு நவம்பர் 29ம் நாள், ஐநா மன்ற பொதுச்சபை, பாலஸ்தீனத்தைப் பிரிக்கும் ஒரு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.
இது அரபு நாடு, ஒரு யூத நாடு, ஜெருசலேத்துக்கென்று சிறப்பு திட்டம் என்று மூன்று விஷயங்களை பரிந்துரைத்தது. யூதர்கள் இதற்கு ஒப்புக்கொண்டனர். ஆனால் அரேபியர்கள் இது தங்கள் நிலத்தைப் பறிக்கும் ஒரு முயற்சியாகக் கருதி ஏற்க மறுத்ததால், இத்திட்டம் அமல்படுத்தப்படவில்லை.
பாலஸ்தீனர்களும், யூதர்களும் ஜெருசலேத்தை தங்கள் தலைநகர் என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஜெருசலேத்தை பாலஸ்தீனர்கள் தங்கள் வரலாற்று ரீதியான தலைநகராகவும் கருதுகிறார்கள்.
இந்த நிலையில்தான், பிரிட்டிஷ் நிர்வாக ஏற்பாடு முடிவுக்கு வரும் ஒரு நாள் முன்னதாக, 1948ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதியே, யூதர்களை பிரதிநிதித்துவப்படுத்திய சையோனிச அமைப்பு, இஸ்ரேல் என்ற நாடு உருவாகிவிட்டதாக அறிவித்தது. அடுத்த நாள் இஸ்ரேல் என்ற அந்தப் புதிய நாடு, ஐநா மன்ற உறுப்பினராக விண்ணப்பித்தது. இந்த அந்தஸ்தை அடுத்த ஆண்டில் அது பெற்றது.
ஐநா மன்ற உறுப்பினராக விண்ணப்பித்த அன்றே, எகிப்து, ஜோர்டான், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து பிரிட்டிஷாரின் முந்தையக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தாக்குதல் நடத்தின. இது அரபு – இஸ்ரேலிய யுத்தம் உருவாகக் காரணமாக இருந்தது. அப்போது சுமார் 7.5 லட்சம் பாலஸ்தீனர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறிவிட்டனர் அல்லது யூதப் படைகளால் வெளியேற்றப்பட்டனர்.
1967ல் நடந்த ஆறு நாள் போரில், இஸ்ரேல் பெற்ற பெருவெற்றி, காசா நிலப்பரப்பையும். சைனாய் தீபகற்பத்தையும் கைப்பற்ற உதவியது. இவை 1948லிருந்து எகிப்து கட்டுப்பாட்டில் இருந்தன. கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக்கரை ஜோர்டான் கட்டுப்பாட்டில் இருந்தது , கோலான் குன்றுகள் சிரியாவின் கட்டுப்பாட்டில் இருந்தன. இவை அனைத்தையும் இஸ்ரேல் கைப்பற்றிவிட்டது. சுமார் 5 லட்சம் பாலஸ்தீனர்கள் வெளியேறினர்.
1967ம் ஆண்டு போருக்கு சற்று முன்பு, ஃபத்தா போன்ற இயக்கங்கள், பாலஸ்தீன விடுதலை இயக்கம் (P.L.O.) என்ற அமைப்பை உருவாக்கி, இஸ்ரேலைத் தாக்கத் தொடங்கின. முதலில் ஜோர்டானிலிருந்தும் பின்னர் லெபனானிலிருந்தும் இந்தத் தாக்குதல்கள் நடந்தன. இந்தத் தாக்குதல்கள் விமானங்கள், தூதரகங்கள் என பல்வேறு யூத இலக்குகளை குறிவைத்து நடந்தன.
1973ல் ‘யொம் கிப்பூர்’ போர் நடந்தது. இதில் எகிப்தும், சிரியாவும், இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டன. இந்தப் போரில் எகிப்து, சைனாய் தீபகற்பத்தில் ஒரு பகுதியை மீண்டும் கைப்பற்றியது. ஆனால் காசா நிலப்பரப்போ அல்லது சிரியாவின் கோலன் குன்றுகளையோ இஸ்ரேலிடமிருந்து கைப்பற்ற முடியவில்லை.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக இருந்த யாசர் அராஃபத் 1980களில் மென்மையான போக்கை கடைப்பிடிக்க தொடங்கினார். இதனால், அவர் பாலஸ்தீனியர்களுக்கு முழுமையான விடுதலையை பெற்றுத் தர முடியாது என்ற அதிருப்தியில், 1987ன் பிற்பாதியில் ‘ஹமாஸ்’ (HAMAS – Harakat al-Muqawamah al-Islamiyyah) அமைப்பு உருவாக்கப்பட்டது. பாலஸ்தீனத்தின் மிகப்பெரிய இரண்டாவது அரசியல் இயக்கமாக ஹமாஸ் இயங்கி வந்தாலும், இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள், அதை பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளன.
முழுக்க முழுக்க பாலஸ்தீன விடுதலையை முன்வைத்து போராடி வரும் ஹமாஸ் அமைப்பினருக்கு, கத்தார் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆதரவாளர்கள் அதிகம். இஸ்ரேலில் அரபுகள் ஒடுக்கப்படுவதாகக் கூறிவரும் ஹமாஸ், ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வரும் சில ஆயுதம் ஏந்திய போராளி குழுக்களுடன் கை கோர்த்துள்ளது.
பாலஸ்தீன விடுதலை இயக்கமும், இஸ்ரேலும், 1993ல் ஆஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி, பாலஸ்தீன அமைப்பு ‘வன்முறையையும், பயங்கரவாதத்தையும்’ கைவிட்டது. மேலும் இஸ்ரேல் ‘அமைதியுடனும், பாதுகாப்புடனும்’ வாழ அதற்கிருக்கும் உரிமையையும் அது அங்கீகரித்தது. ஆனால் இதை ஹமாஸ் ஏற்கவில்லை.
காசாவில் 2005இல் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப்பெற்ற பிறகு, அந்த பகுதியில் ஹமாஸ் அமைப்பு ஆதிக்கம் செலுத்தியது. காசாவில் பிரதானமாக இயங்கி வரும் ஹமாஸ், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளை அமைத்தாலும், பாலஸ்தீனத்தில் ஒரு பிரிவினர் ஆதரவும், மற்றொரு பிரிவினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத் மறைவுக்குப் பிறகு, 2006ஆம் ஆண்டு காசா பகுதியில் நடந்த தேர்தலில் ஹமாஸ் அமைப்புக்கு அமோக ஆதரவு கிடைத்தது.
2008, 2009, 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே ஆயுத மோதல் தொடர்ந்தது. 2014ல் காசா நிலப்பரப்பில் நடந்த மோதலில் பெரும்பாலும் பாலஸ்தீனர்கள் உட்பட சுமார் 2,000 பேர் வரை கொல்லப்பட்டனர். 2021ஆம் ஆண்டு ஹமாஸ்-இஸ்ரேல் ராணுவம் இடையே நடந்த கடுமையான சண்டை 11 நாட்கள் நீடித்தது. தற்போது ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி, ஹமாஸ் போரை தொடங்கியுள்ளது. இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
மோதலுக்கு எப்போதுதான் முடிவு கிடைக்கும் என பார்த்தால், தற்போது தங்களது கட்டுப்பாட்டிலிருக்கும் நிலப்பரப்பின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்த இஸ்ரேல் விரும்புகிறது. ஆனால் பாலஸ்தீனர்களோ 1967 போருக்கு முன்னர் இருந்த எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு தற்போது எல்லைகள் வகுக்கப்படவேண்டும் என்று கூறுகிறார்கள்.
அதேபோல், பாலஸ்தீனர்களைப் பொறுத்தவரையில், ஹமாஸையும் உள்ளடக்கிய ஒரு இறையாண்மை மிக்க பாலஸ்தீன நாடு உருவாவதை இஸ்ரேல் ஆதரிக்கவேண்டும், காசா நிலப்பரப்பின் மீது அது வைத்திருக்கும் முற்றுகை நிலையை விலக்கிக்கொள்ள வேண்டும், மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேத்தில் நடமாட்டங்கள் மீதான கட்டுப்பாடுகளை விலக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
பாலஸ்தீன நிர்வாகம் மற்றும் ஹமாஸ் குழு ஆகிய இரண்டுமே கிழக்கு ஜெருசலேத்தை தங்களது தலைநகராகக் கோருகின்றன. ஆனால் இஸ்ரேல் இதை 1967லிருந்து ஆக்ரமித்து வைத்திருக்கிறது. எனவே, பேச்சுவார்த்தை மூலம் இருநாடுகளுக்கும் இடையே உடனடியாக நீடித்த அமைதி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படவில்லை.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry