மாநில பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீசன் என்ற மாணவர் மூன்று முறை நீட் தேர்வு எழுதியும், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது.
அந்த மாணவர் சைதன்யா பள்ளியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 424 (500க்கு) மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வில் முதல் மற்றும் 2வது முயற்சியில் 100 மதிப்பெண்களுக்கு குறைவாகவே பெற்றதாகவும், மூன்றாவது முயற்சியில் 300 மதிப்பெண்களுக்கு குறைவாகவே எடுத்ததாகவும் மாணவனின் தந்தை கூறியது குறிப்பிடத்தக்கது.
அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டதாக மாணவனின் தந்தை நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு இல்லாதிருந்தாலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 424 மதிப்பெண்களுக்கு எந்த ஒரு அரசுக் கல்லூரியிலும் அனுமதி கிடைத்திருக்காது என்பதும், மாநில பாடத்திட்டத்தில் படித்திருந்தாலும் கூட கவுன்சிலிங்கில் இடம் கிடைத்திருக்காது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
அதே போல நீட் தேர்வில் முதல் இரண்டு முயற்சிகளில் 100 மதிப்பெண்களுக்கு குறைவாகவும், மூன்றாவது முயற்சியில் 300 மதிப்பெண்களுக்கு குறைவாகவும் எடுத்துள்ளார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வுக்கான இந்த ஆண்டுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் பின்வருமாறு.
OC-606, BC-560, MBC -532, SC-452, SCA -383, BCM – 542, ST-355.
ஆகவே, அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்திருந்தாலும், நீட் தேர்வு இருந்திருந்தாலும், இல்லாதிருந்தாலும் மருத்துவ படிப்புக்கு அரசு கல்லூரிகளில் அனுமதி கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை.
NEET – திமுகவின் கபடவேடம் கலைகிறது.
அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீசனின் தந்தை செல்வசேகர் சொல்வதைக் கேளுங்கள். மகனை இழந்த துக்கம் தாளாமல் இவரும் உயிரை மாய்த்துக்கொண்டது பெரும் சோகம்.@EPSTamilNadu pic.twitter.com/SXc70BCC6W
— ADMK TODAY (@AdmkToday) August 14, 2023
நீட் தேர்வே இருந்திருக்கவில்லையென்றால் கூட மூன்று வருடங்களுக்கு முன்பு 424 மதிப்பெண்கள், அதிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பெற்ற அந்த மாணவன், உறுதியாக அரசுக் கல்லூரியில் இணைந்திருக்க வாய்ப்பேயில்லை. நீட் தேர்வு என்ற திட்டம் இருந்ததாலேயே அவருக்கு மேலும் மூன்று ஆண்டுகள் மருத்துவப் படிப்புக்கு முயற்சி செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு வேளை, அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் நீட் தேர்வின் மூலம் மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்திருக்கும்.
ஆனால், நேற்றிலிருந்து தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் தமிழக ஊடகங்கள், ஏதோ, நீட் தேர்வினால் தான் அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது முறையல்ல. தி.மு.க. போன்ற கட்சிகள் இது போன்ற மலிவு அரசியலை செய்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், தமிழக ஊடகங்கள் தொடர்ந்து பதட்டத்தை ஏற்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது.
Also Read : அரசு உதவிபெறும் பள்ளி மீது மதமாற்றப் புகார்! டி.சி. வாங்கிய 150க்கும் மேற்பட்ட மாணவர்கள்!
தற்கொலை செய்து கொண்ட இருவரின் இழப்பும் தாங்க முடியாதது தான், வருத்தம் தான் என்றாலும், சில அரசியல்வாதிகளும், ஒரு சில ஊடகங்களும், உண்மை நிலையினை உலகுக்கு சொல்லாமல், உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு பதற்றத்தை உருவாக்குவது பொறுப்பற்ற செயல்.
நீட் தேர்வு என்ற ஒன்று இல்லாமலேயிருந்திருந்தால் கூட, 5000 இடங்களை மட்டுமே கொண்டுள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 424/500 என்ற மதிப்பெண்ணுக்கு, அதிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில், மூன்று வருடங்களுக்கு முன்னர் அரசு மருத்துவ கல்லூரியில் பயின்றிருக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
இரு உயிர்களை இழந்துள்ளது ஈடு செய்யமுடியாதது தான். ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக மரணங்களில் அரசியல் செய்வதை கைவிட்டு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் நலன் கருதி செயல்படும் மலிவு அரசியலை கைவிட்டு, உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவு செய்வது நியாயமற்ற, பொறுப்பற்ற, அராஜக செயல்.” இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
கடுமையான மன அழுத்தத்தில் இருப்பவர்கள், தற்கொலை எண்ணம் ஏற்படுவோர், SNEHA தற்கொலை தடுப்பு மையம் – 044 2464000, மாநில தற்கொலைத் தடுப்பு மையம் – 104ஐ தொடர்பு கொள்ளவும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry