2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை திமுக தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்டிருந்தது. அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில், பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் (டிபிஐ) டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் மாதக் கடைசியில் இருந்து 10 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.
Also Read : புறா இவ்ளோ டேஞ்சரா? புறா எச்சத்தால் வரும் 60க்கும் மேற்பட்ட நோய்கள்! Pigeon droppings causes 60 diseases!
போராட்டத்தில் ஈடுபட்ட சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பலகட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னர் ஒவ்வொரு சங்கங்களாக போராட்டத்தை வாபஸ் பெற்றன.
இதேபோல் கடந்த 13ம் தேதி டிட்டோஜாக் அமைப்பின் சார்பில் டிபிஐ வளாகத்தில் உள்ள SCERT அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்கும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 12ம் தேதி மாலையில் டிட்டோஜாக் கூட்டமைப்பின் 11 தலைவர்களும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து 12 கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் போராட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது, என்று கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்தனர்.
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ப.குமார், இரா.இளங்கோவன், அ.சங்கர் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில், ஆசிரியர் – அரசு ஊழியர் கோரிக்கைகள் மற்றும் அரசின் வாக்குறுதிகள் சார்ந்த அரசின் இன்றைய நிலைப்பாடு குறித்த விரிவான விவாதங்கள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி நான்குகட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- நவம்பர் 1ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
- நவம்பர் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆசிரியர்- அரசு ஊழியர்- அரசுப் பணியாளர் சந்திப்பு, போராட்ட பிரச்சார இயக்கம்.
- நவம்பர் 25 ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம்.
- டிசம்பர் 28 ம் தேதி சென்னையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் கோட்டை முற்றுகைப் போராட்டம்.
3 சங்கங்கள் மற்றும் ஜாக்டீ அமைப்பின் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்தை அறிவித்திருப்பது தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry