ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் நேற்றிலிருந்து வெளியேற்றுகிறது. ஜப்பானின் இந்த நடவடிக்கைக்கு சீனா, வடகொரியா, தென்கொரியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 20,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் ஃபுகுஷிமா அணுமின் நிலையமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அணு உலை ஆபத்தான பகுதியாக மாறியதால், அதை முழுமையாகச் செயலிழக்க வைக்கும் முடிவை ஜப்பான் அரசு எடுத்தது. அதன்படி அணு உலையில் இருக்கும் கழிவுகளை அகற்றிவிட்டு, அதை செயலிழக்க வைக்கும் பணியை டெப்கோ நிறுவனம் மேற்கொண்டது.
சுமார் 10 லட்சம் மெட்ரிக் டன் எடை கொண்ட அணுக் கழிவுகள் நிறைந்த நீரை, ஆயிரக்கணக்கான தொட்டிகளில் சேகரித்து வைத்துள்ள ஜப்பான் அரசு, அவற்றை பாதுகாப்பாகச் சுத்திகரிக்கும் பணியிலும் ஈடுபட்டது. இப்படி 12 ஆண்டுகளாக சேகரித்து வைக்கப்பட்டு இருக்கும் அணு உலை கழிவுநீரை அப்புறப்படுத்த நினைத்த ஜப்பான் அரசு, அதைக் கடலில் வெளியேற்ற நீண்ட காலமாக முயன்று வருகிறது. 2021ம் ஆண்டு அணுக் கழிவு நீர் பசுபிக் கடலில் வெளியேற்றப்படும் என ஜப்பான் அறிவித்திருந்தது.
இந்த விபரீத முடிவுக்கு அண்டை நாடான சீனாவும், உள்ளூர் மீனவர்களும், கொரிய தீபகற்பமும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அணுக் கழிவுநீரை கடலில் வெளியேற்றினால் ஜப்பான் உடனான உணவு இறக்குமதியை தடை செய்வோம் என ஐரோப்பிய நாடுகளும், சீனாவும் கடுமையாக எச்சரித்து இருந்தன. அணுக் கழிவுநீரை கடலில் கலந்தால் மீன்வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்று உள்ளூர் மீனவர்களும் எச்சரித்தனர்.
ஆனாலும், அணு உலைக் கழிவுநீரை கடலில் விடும் திட்டத்தில் தீவிரம் காட்டிய ஜப்பான் அரசு, இதற்கான ஒப்புதலை ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக் குழுவிடம் இருந்து கடந்த மாதம் பெற்றது. அணுக் கழிவுநீரை வெளியேற்றுவதால், அருகில் உள்ள சீனா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு ஏற்படும் அணுக் கதிர்வீச்சு பாதிப்பு தொடர்பான ஆய்வையும் ஜப்பான் அரசு மேற்கொண்டது.
இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு பூமிக்குள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குச் சுரங்கம் அமைத்து, அதன் மூலம் அணு உலைக் கழிவு நீரை பசுபிக் கடலில் சேர்க்கும் பணியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மெட்ரிக் டன் கணக்கில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் கழிவுநீரை கடலில் கலக்க பல மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீரைக் கடலில் திறந்துவிட்டால், கடலின் தன்மையும், கடல் உணவும் பாதிக்கப்படும் என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றன. கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் பாதுகாப்பு குறித்து அண்டை நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. பசுபிக் கடலை ஒட்டிய சீனா மற்றும் கொரிய நாடுகளின் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், கடல் மீன்கள் மற்றும் மனிதர்களுக்கு கதிரியக்கப் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
ஜப்பானின் தற்போதைய முடிவால் எழுந்திருக்கும் நீர் பாதுகாப்பு பற்றிய அச்சங்கள், தொழில்துறையில் உள்ள நல்ல பெயரை கெடுத்துவிடும் என்று ஜப்பானிய மீன்பிடி குழுக்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகியவை ஜப்பானிய கடல் உணவு இறக்குமதியை தடை செய்வதால், ஜப்பானின் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானின் நடவடிக்கைக்கு முதல் நாடாக சீனா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலர் வாங்க்வென்பின், ஜப்பானை கடுமையாகச் சாடியுள்ளார். “பசிபிக் கடல் பகுதியில் அணுக் கழிவுநீர் திறப்பது பொறுப்பற்ற செயல். ஜப்பானின் சுயநலம். கழிவுநீர் எந்த அளவிற்கு சுத்திகரிக்கப்பட்டுள்ளது என்பதில் பெருத்த சந்தேகம் உள்ளது. கதிரியக்க மாசு ஏற்படும். கடல் என்பது சர்வதேச அளவில் மனிதகுலத்திற்குப் பொதுவான சொத்து. ஒரு இயற்கை அழிவுக்குச் செல்வதை அனுமதிக்கக்கூடாது. ஜப்பான் கடல்வகை உணவு வகைகளுக்கு இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளோம்.” என கூறியுள்ளார்.
மேலும், ஜப்பானில் இருந்து வரும் அனைத்து நீர்வாழ் பொருட்களுக்கும் தடை விதிப்பதாக சீன சுங்கத்துறை அறிவித்துள்ளது. “ஜப்பானின் உணவு மற்றும் விவசாயப் பொருட்களில் கதிரியக்க மாசுபாட்டின் அபாயம் குறித்து சீனா மிகவும் கவலை கொண்டுள்ளது” என்று சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் நடவடிக்கைக்கு எதிராக கொரிய தீபகற்பத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜப்பானில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருப்பதை அறிந்த தென்கொரிய அரசு, ஜப்பானில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவித்துள்ளது.
கடலில் கதிரியக்க நீரை வெளியேற்றுவதை ஜப்பான் உடனடியாக நிறுத்த வேண்டும் என வட கொரியா கேட்டுக்கொண்டுள்ளது. வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த நீர் வெளியேற்றம் என்பது, “மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்” என்று கூறியுள்ளது. “மனிதகுலத்தின் உயிர்கள், பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தைக் கடுமையாக அச்சுறுத்தும் கதிரியக்கக் கழிவுநீரின் அபாயகரமான வெளியீட்டை ஜப்பான் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry