ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என ஐகோர்ட் அதிரடித் தீர்ப்பு! அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்குத் தடை விதிக்கவும் மறுப்பு!

0
34

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடைவிதிக்க கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, பொதுக்குழுக் கூட்டம் நடத்தலாம் என்று உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவின் அடிப்படையில், அந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

Also Read : கதிரியக்க நீரைக் கடலில் கலக்கவிடும் ஜப்பான்! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கை என கண்டனம்!

2022 ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக்குழுவை நடத்தத் தடையில்லை என்று தீர்ப்பளித்தார். இதனையடுத்து, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்புதல் பெறப்பட்டு 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

AIADMK General Council / 11 July 2022

இதைத்தொடர்ந்து, ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரியும், இந்த பொதுக்குழு சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரியும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

Also Read : காவிரி விவகாரத்தில் தமிழக அரசு பொய் சொல்வதாகப் புகார்! பிரதமரை சந்தித்து முறையிட கர்நாடக அரசு முடிவு!

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பளித்திருந்தது. இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி குமரேஷ்பாபு, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று இடைக்கால உத்தரவிட்டிருந்தார். இந்த இடைக்கால உத்தரவை ரத்து செய்யக் கோரியும், உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும் ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர்.

Also Read : பெரும் வெற்றிபெற்ற மதுரை அதிமுக மாநாடு! சாதித்துக்காட்டிய எடப்பாடி பழனிசாமியின் தளகர்த்தர்கள்!

இந்த மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்குகளின் இறுதி விசாரணை தொடங்கியது. 7 நாட்கள் இருதரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்படன. இதையடுத்து வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.

AIADMK General Council / 11 July 2022

இந்த வழக்கில் இன்று(வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், “அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தலையிட முடியாது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்குத் தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என உத்தரவிட்டனர். அதேபோல், கட்சியிலிருந்து ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரை நீக்கி நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்துக்கு தடை விதிக்கக் கோரிய கோரிக்கையையும் ஏற்க மறுத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நீதி, தர்மம் வென்றுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவை, நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அதிமுக பலமாகத்தான் உள்ளது. நிச்சயமாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும். தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கின்றோம். தமிழகத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கும். அந்தக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்” என்றார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry