குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி! தகுதி நிர்ணயித்து அரசு சற்றறிக்கை!

0
104

ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி தரப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுபற்றி கூட்டுறவு சங்க பதிவாளர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.

கூட்டுறவு  வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.. ஸ்டாலின் கடந்த 13-ந் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதேவேளையில், ஏழைகள் மட்டுமே பயனடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு  பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில் தகுதியான பயனாளிகளைக் கண்டறிய, குடும்பத்தில் பெறப்பட்ட அனைத்து நகைக்கடன்கள் தொடர்பான பெயர், சங்கங்களின் விவரம், பெற்ற நாள், தொகை, கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு, கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின் இறுதிகாலத்தில் அவசர அவசரமாக கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியானது. இதை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்தியோஜனா திட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கியில் கிலோ கணக்கில் நகைகள் அடமானம் வைத்து முறைகேடு நடைபெற்றுள்ளது. நகைக்கடன் தள்ளுபடியில் மோசடி செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குரும்பூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 247 நகை பொட்டலங்கள் இல்லை. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களிடம் எப்படி கிலோ கணக்கில் தங்கம் இருந்திருக்கும்.

மதுரை மாவட்டத்திலுள்ள பாப்பையாபுரம் என்ற சொசைட்டியில் மூக்கையா என்பவர் மட்டும் 300 நகைக்கடன் பெற்று உள்ளார. இதுபோல் ஒரு சில நபர்கள் 100, 200, 300, 600 என மொத்தமாக நகைக்கடன் பெற்றுள்ளார்கள். கவரிங் நகைக்கு கடன் வழங்கி உள்ளார்கள். கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் கடன் பெற்றவர்களுக்கும் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள அலுவலர்களுக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒரே நபர் பல சங்கங்களில் லட்சக்கணக்கில் நகை கடன்களை பெற்றிருப்பது, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு சங்கங்களில் பல நகை கடன்களின் மூலம் லட்சக்கணக்கிலான ரூபாய் கடன் பெற்றிருந்தது என பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. தனியார் நகை அடகுக்கடை நடத்தக் கூடியவர்கள் தங்களிடம் அடமானத்திற்கு வரக்கூடிய நகைகளை, கூட்டுறவு கடன் சங்கத்தில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர்என்றார்.

இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், தனது துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டுமே, 5 சவரனுக்கு உள்பட்ட நகைக் கடன் தள்ளுபடி பெற தகுதியுடையவர் என்பதை தெளிவுபடுத்தி உள்ளார்.

மேலும், ”குடும்ப உறுப்பினர்கள் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கு எந்த தடையும் இல்லை. அடமானம் வைத்த நகைகளுக்கான நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். ஒரே குடும்பத்தினர் பெயரில் 5 பவுனுக்கு மேல் பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு வங்கிகளில் பெறப்பட்ட கடன்களை வசூலிக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் தொடங்க வேண்டும்என்றும் சண்முக சுந்தரம் சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

இதனிடையே, கூட்டுறவு சங்கங்களில் நகை அடமானம் வைத்திருப்போர் வருமானவரி கட்டுபவராகவோ, அரசு ஊழியராகவோ இருந்தால் தள்ளுபடி கிடைக்காது. அதேபோல், பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றிருந்தாலும் நகைக்கடன் தள்ளுபடி கிடைக்காது

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry