க. அரவிந்த் குமாரின் ‘காட்டாயி’ சிறுகதைத் தொகுப்பு! சென்னையில் நாளை வெளியிடுகிறார் பாரதிராஜா!

0
78

மூத்த ஊடகவியலாளரும், எழுத்தாளருமான க. அரவிந்த் குமார் ‘காட்டாயி’ என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியிருக்கிறார். உறவுகளை கையாள்வதில் மனிதன் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தான் காட்டாயி சிறுகதை தொகுப்பு. இந்தப் புத்தகத்தை இயக்குநர் பாரதிராஜா வெளியிட, முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பெற்றுக்கொள்கிறார்.

இலக்கியம் மற்றும் எழுத்துகள் மீது தீராத காதல் கொண்ட க. அரவிந்த் குமார், சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். ‘வனம், வானம்,  வாழ்க்கை’ என்ற இவரது கட்டுரைத் தொகுப்பு நக்கீரன் வெளியீடாக 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. ஆனந்தவிகடன், குமுதம் இதழ்களில் தொடர்ச்சியாக கவிதை, சிறுகதைகள், அரசியல் கட்டுரைகள் குறித்து எழுதி வருகிறார் க. அரவிந்த் குமார்.

ஊடகவியலாளர் என்பதைத்தாண்டி, எழுத்தாளராக அறியப்பட வேண்டும் என்பதையே விரும்பும் க. அரவிந்த் குமார், ‘தேசம்மா’ என்ற நூலை எழுதியுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நக்கீரன் ஆசிரியர் கோபால், எழுத்தாளர்கள் ஜோ.டி.குரூஸ், இரா.முருகவேள், ஷாஜி, என்.ஸ்ரீராம் உள்ளிட்டோர் இந்த நூலை வெளியிட்டனர்.

கடல் என்றாலே மணலும் உப்புக்காற்றும்தான் என்பதை மாற்றி, அதன் கரையோரம் எண்ணற்றக் கதைகளும் உள்ளன என்பதை உணர்த்துவதான் தேசம்மா. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட இந்த நூல், ஆடியோ வடிவிலும் கிடைக்கிறது. கடந்த ஆண்டின் சிறந்த சிறுகதை தொகுப்புக்கான தாழ்வாரம் அமைப்பின் விருதை தேசம்மா பெற்றுள்ளது.

இலக்கிய உலகில் தனக்கானதொரு இடத்தை உறுதி செய்துள்ள க. அரவிந்த் குமாரின் அடுத்த படைப்பாக, ‘காட்டாயி’ சிறுகதைத் தொகுப்பு வெளியாகிறது. வடசென்னை கடல் மனிதர்கள் குறித்தும் தான் கடந்து வந்த மனிதர்கள் குறித்தும் அரவிந்த் குமார் எழுதியுள்ளவையே காட்டாயி. குறிப்பாக உறவுகளை கையாள்வதில் மனிதன் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தான் காட்டாயி சிறுகதை தொகுப்பின் முக்கிய பேசுபொருள். இத்தொகுப்பின் சிறப்பம்சமாக, சமணர்களின் 2 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை சற்றே பெரிய சிறுகதையாக வெள்ளை ரத்தம் என்ற பெயரில் க.அரவிந்த் குமார் எழுதியுள்ளார்.

நற்றிணை பதிப்பகம் வாயிலாக வெளியாகும் ”காட்டாயி” சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா, சென்னை அடையாற்றில் உள்ள திருவாவடுதுறை ராஜரத்தினம் கலையரங்கு, முத்தமிழ் பேரவை மன்றத்தில் நாளை (20-02-2021) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இயக்குநர் பாரதிராஜா வெளியிட, முன்னாள் அமைச்சர் முனைவர் வைகைச் செல்வன் நூலை பெற்றுக்கொள்கிறார். எழுத்தாளர்கள் பலரும் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர். புத்தகத்தின் விலை ரூ.200 ஆகும். விழா அரங்கில் 10 சதவிகித கழிவுடன் புத்தகத்தை வாங்கலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry