தினமும் வீட்டில் விளக்கேற்ற, மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். இதை மனதில் வைத்து புதுச்சேரியில் கலாம் சேவை மையம் சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் வீடுதோறும் அகல் விளக்குகள் வழங்கப்படுகின்றன.
இதுபற்றி, வழக்கறிஞரும், கலாம் சேவை மைய நிறுவனருமான சம்பத்திடம் பேசினோம். “பாரம்பரியமான நம் தமிழின பெருமைகளின் பண்டிகைகளை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் முயற்சிதான் இது. பரபரப்பான வாழ்க்கை முறையால், கலாச்சாரங்கள், பண்டிகைகள், உணவு முறைகளை தொலைத்துவிட்டோம். பணமே பிரதானம் என நம்பி நாம் ஓடிக்கொண்டிருந்த நிலையில், கண்ணுக்குத் தெரியாத கொரோனா பல உண்மைகள் நமக்கு உணர்த்தியுள்ளது. இனி வரும் காலங்களிலாவது, பாரம்பரியா பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காகவே அகல் விளக்கு விநியோகிக்கிறோம்” என்றார்.
குறைந்த செலவில் அகல்விளக்குகளை விநியோகித்து, கலாம் சேவை மையம் பெயரெடுக்க முயற்சிக்கிறது என சிலர் விமர்சிக்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “தற்போது பண்டிகை கொண்டாடப்படும் நாட்கள் சுருங்கி வருகின்றன. கிருத்திகை, அமாவாசை, பவுர்ணமியைக் கூட யாரும் முறையாக அனுசரிப்பதில்லை. 3 நாள் கார்த்திகை தீபத்திருவிழா, தற்போது ஒருநாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது.
தமிழகத்திலிருந்து வேறு நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள், நம்மைவிட, கலாச்சாரத்தை, பண்பாட்டை, இறுக்கமாக பற்றியிருக்கின்றனர். நாம் மறந்துபோன பண்டிகைகள், பாரம்பரிய சடங்குகளை அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். கார்த்திகை தீபத்தை நமது இலக்கியங்கள் போற்றுகின்றன. எனவே, தமிழ்ப் பண்பாட்டின் அசைக்க முடியத வேர்களாக உள்ளவற்றை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும் எங்களது இந்த முயற்சி“ என்று கூறினார்.
திருக்கார்த்திகை தீபத்தை பற்றி விளக்கமளிக்குமாறு கேட்டபோது, “பக்தி சிரத்தையோடு, இறை உணர்வோடு நாம் தீபம் ஏற்றும் போது நமது அறியாமை என்னும் அக இருளும், புற இருளும் நீங்கப் பெறுகின்றது. தீப ஓளி நம் மனதில் தீய சிந்தனைகளை வரவிடாமல் காக்கின்றது. மேலும் தீபத்தில் முப்பெரும்தேவியராகிய லட்சுமி, சரஸ்வதி, பார்வதி உள்ளனர். எனவே தீபம் ஏற்றுவதன் மூலம் முப்பெரும் தேவியரின் அருளைப் பெறலாம். புற இருளை நீக்க, வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி வாழ்வில் வளம் பெறுவோம்“ என்ற வாழ்த்துடன் சம்பத் விளக்கம் கொடுத்தார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry