திமுக-வில் ஓங்கும் கனிமொழியின் செல்வாக்கு! ஸ்டாலினுக்கு அடுத்த தலைவலி ஆரம்பம்! கலக்கத்தில் மூவர் அணி!

0
32

திமுகவில், மகளிரணி செயலாளர் கனிமொழியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மூத்த நிர்வாகிகள் ஆதரவு தர, மகளிரணியைத் தாண்டி தமக்கான ஆதரவு வட்டம் உருவாவதால் அவர் உற்சாகமாக இருப்பதாக தெரிகிறது.

கருணாநிதி இருந்தவரை ஸ்டாலினுக்கு, மு..அழகிரி எப்படி போட்டியாளராக கருதப்பட்டாரோ, அதேபோல் உதயநிதிக்கு, கனிமொழியை போட்டியாளராக ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் பார்க்கின்றனர். இது பல தருணங்களிலும் வெளிப்பட்டுள்ளது. கனிமொழிக்கு போட்டியாக சாத்தான்குளம் சென்றது, இளைஞரணியிலேயே மகளிர் பிரிவை உருவாக முற்பட்டது, பொதுக்குழுவில் கனிமொழிக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

மாவட்ட செயலாளராக யாரை நியமிக்க வேண்டும் என்பது முதற்கொண்டு, உதயநிதி, சபரீசன், அன்பில் மகேஷ் அடங்கிய மூவர் அணிதான் முடிவு செய்கிறது. இது ஒருபுறமென்றால், பிரசாந்த் கிஷோர் டீம் கட்சியினரிடையே முழுமையாக ஆதிக்கம் செலுத்துவதும், கிச்சன் கேபினெட் ஆதிக்கம் அதிகரித்தும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மூத்த நிர்வாகிகள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள்.

இது எதையும் ஸ்டாலின் கண்டுகொள்வதில்லை என்ற மனக்குறை அவர்களுக்கு அதிகமாகவே இருப்பதாக தெரிகிறது. எனவே, பல மூத்த நிர்வாகிகள், ஸ்டாலினுக்கு மாற்றாக கனிமொழியை பார்க்கத் தொடங்கியுள்ளனர். ஸ்டாலினைப் போலவே, கனிமொழியும் இளமைப் பருவத்தில் இருந்தே கட்சியில் இருந்தவர்தானே என அவர்கள் கேட்கிறார்கள்.

கருணாநிதி சாயலில் இருக்கும் கனிமொழி, அவரைப்போலவே வசவுகளை ஏற்கிறார், சொல்ல வரும் கருத்துகளை, தங்கு தடையின்றி, சமரசமின்றி எடுத்துவைக்கிறார். அவரையும் தலைவராக ஏற்றால் என்ன என கட்சியினர் நினைக்கின்றனர். கட்சியினரிடையே நிலவும் இதைப்போன்றதொரு எண்ண ஓட்டத்தால், மகளிர் அணியைத் தாண்டி கனிமொழிக்கான ஆதரவு வட்டம் உருவாகி வருகிறது.

இதையறிந்துள்ள மூவர் அணி, கனிமொழி மாஸ் லீடராக உருவாவதையும், வெளிப்படையாக செயல்படும் அவரது ஆதரவாளர்களையும், பலவீனப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. டெல்லியில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் மாறன் சகோதரர்களும், இந்த விவகாரத்தில் மூவர் அணியுடன் கைகோர்த்துள்ளனர்.

இதுஒருபுறம் என்றால்,  தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணிக் கட்சிகள் ஸ்டாலினுக்கு நெருக்கடி தரத் தொடங்கியுள்ளன. ஜெயலலிதா போல, கிள்ளிக்கொடுத்து, உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்கலாம் என மூவர் அணி ஐடியா கொடுக்க, வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்டுகள் என அனைவரும் கொந்தளித்து விட்டார்கள். வழக்கம்போல, அதிமுக மீது பழியைப்போட்டு, அந்த விவகாரத்துக்கு ஸ்டாலின் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஆனால், கூட்டணி கட்சிகளிடம் கனிமொழி பேச்சுவார்த்தை நடத்தினால், எந்தவித பிரச்சனையும் இன்றி தொகுதிப் பங்கீடு முடியும் என்று அவரது ஆதரவாளர்கள் உறுதியாக கூறுகிறார்கள். கனிமொழியை வரும் தேர்தலில் முன்னிலைப்படுத்தினால் என்ன என்றும் அவர்கள் கேட்கிறார்கள். வரும் தேர்தலில், திமுக வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டால், கட்சியில், கனிமொழியின் செல்வாக்கு மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry