கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத் திருவிழா! வரும் 29-ந் தேதி மகா தீபம்! பக்தர்களுக்குத் தடை!

0
89

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் வரும் 29-ம் தேதி மாலை, தீப மலையின் மீது ஏற்றப்படுகிறது.

மலையையே சிவபெருமானாக வணங்கக்குடிய ஸ்தலம் தான் திருவண்ணாமலை. இங்கு கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்து வரக்கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது மிகவும் விசேஷம்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், தீபத்திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி கொடியேற்றத்திற்கு 3 நாட்களுக்கு முன் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி முதல்நாள் துர்க்கையம்மன், 2-ம்நாள் பிடாரியம்மன் பவனி நடந்தது. 3ம்- நாளான நேற்று, விநாயகர் உற்சவம் நடைபெற்றது.இதையொட்டி, அண்ணாமலையார் கோயில் 5-ம் பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர் பவனி வந்து அருள்பாலித்தார்.

இந்நிலையில் தீபத்திருவிழாவுக்காக இன்று காலை கொடியேற்றப்பட்டது. அதிகாலை 5.30 மணி முதல் காலை 7 மணி வரை 3-ம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்கியது.

முதல் நாளான இன்று காலை 11 மணி அளவில் கோயிலின் 5-வது பிரகாரத்தில் விநாயகர், சந்திரசேகர் பவனி நடைபெற்றது. இரவு உற்சவத்தில் பஞ்சமூர்த்தி பவனி நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, வரும் 29ம்தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு, நான்கு மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பத்து நாட்கள் காலையும், மாலையும் கோவிலில் உள்ள ஐந்தாம் பிரகாரத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கார்த்திகை மகா தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் ஒன்று திரள்வார்கள். இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பரணி தீபம் மற்றும் மகாதீப விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 3-ந் தேதி அருள்மிகு சண்டிகேஸ்வரர் உற்சவத்தோடு தீபத்திருவிழா முடிவடைகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry