நால்வர் இல்லையென்றால் தமிழ் இல்லை! நான்கூட பூசாரி எனச் சொன்னார் கருணாநிதி! VHP வேதாந்தம் சுவாரஸ்ய பேச்சு!

0
368

இந்து மதத்துக்கு சவால்கள் புதிதல்ல என்று தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் தெய்வீக கைங்கர்யப் பேரவை நிறுவனர் வேதாந்தம் கூறியுள்ளார். சிதறுண்டு கிடக்கும் இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தெய்வீக கைங்கர்யப் பேரவையின் 2-வது ஆலோசனைக் கூட்டம் வேதாந்தம் தலைமையில், பேரவைத் தலைவர்தினமலர்கோபால்ஜி முன்னிலையில் சென்னையில் தி. நகரில் நடைபெற்றது. வரவேற்புரை ஆற்றிய திருநள்ளாறு ராஜாசாமிநாத சிவாச்சாரியார், “ஒரே குரலாக அரசுக்கு கோரிக்கை வைக்க, நலத்திட்டங்களை பெற தற்போது வாய்ப்பு குறைவாக உள்ளது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக, பேரவையின் தலைவர்தினமலர்கோபால்ஜி நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார். அதேபோல், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியையே ஹிந்து கூட்டத்துக்கு வரவழைத்த பெருமைக்கு உரியவர் பேரவையின் நிறுவனர் வேதாந்தம்.

தெய்வீக கைங்கர்யப் பேரவை என்ற அமைப்பின்கீழ் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சிவாச்சாரியார்கள்தான் ஆதி தமிழ்க் குடிகள் அதாவது ஆதி சைவர்கள். அவர்கள் வந்தேறிகள் அல்ல. குலப்பெருமையை, பாரம்பரியத்தை சிதைக்க அரசு முயற்சிக்கிறது. கோயில், ஆகமம், ஆன்மிகத்தை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறதுஎன்றார்.

நிகழ்ச்சியில் பேசிய மதுரை திருப்பரங்குன்றம் ராஜா பட்டர்(ஸ்கந்த குரு பாடசாலை), “சைவத்தை நிலைநாட்டிய ஸ்தலம் மதுரை. மதுரை கோயில் சிவாச்சாரியார்களுக்கு சொந்தமானதாக இருந்தது. ஆலயப் பிரவேசத்தின்போதுதான், அரசு கைப்பற்றியது. கோயிலில் இருந்த கல்வெட்டுகளும் அகற்றப்பட்டது. பொதுவாக கோயில்களில் உற்சவங்களின்போது, வேளாளர்கள், முதலியார், செட்டியார், பிள்ளைமார், ஆதி தமிழர்கள் என அனைத்து சமூகத்தினருக்கும் உரிய மரியாதை கொடுக்கப்பட்டுத்தான் வருகிறது. நாம் சமத்துவத்தை கடைப்பிடித்துத்தான் வருகிறோம். எந்தச் சூழலிலும் ஆச்சார அனுஷ்டானங்களை விடக்கூடாது. வேதாந்தமும், கோபால்ஜியும் சிறப்பாக நம்மை வழிநடத்துவார்கள்.” என்று கூறினார்.

நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய நிறுவனர் வேதாந்தம், “இந்து மதத்துக்கு சவால்கள் புதிதல்ல. 3 ஆயிரம் ஆண்டுகளாக பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. இறைவனுக்கு தொண்டு செய்பவர்கள் ஒன்றாக இணைவது காலத்தின் கட்டாயம். தற்போது நாம் சிதறுண்டு கிடக்கிறோம். RSS இயக்கத்தில் இருப்பதுபோன்று, தெய்வீக கைங்கர்ய பேரவையிலும் ஒழுக்கமும், கட்டுப்பாடும் இருக்க வேண்டும். 10 பேர் ஒரு இடத்தில் கூடும்போது, பல விதமான கருத்துகள் வெளிப்படும். அவற்றை பேசி, வழிகாட்டுதல் குழு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். எனவே நமக்குள் ஒற்றுமை அவசியம்

கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை மாநாட்டுக்கு முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே வந்திருக்கிறார்கள். கருணாநிதியை அழைக்கச் செல்லும்போது, ‘என்ன துணிச்சல் இருந்தால் என்னைப் பார்க்க வருவாய்எனக் கேட்டார். அதற்கு, திமுக தலைவரை பார்க்க வரவில்லை, முதலமைச்சரை பார்க்க வந்தேன் என நான் பதிலளித்தேன். அழைப்பை ஏற்று மதுரையில் நடந்த பூஜாரிகள் மாநாட்டுக்கு வந்த கருணாநிதி, சமயப் பெரியவர்களுடன் 3 மணி நேரம் இருந்தார். அப்போதுநான் கூட பூசாரிதான், திருக்குவளையில் மருளாளர்கள் சாமி வந்து ஆடுவார்கள், அதில் என் அப்பாவும் ஒருவர்என்று கருணாநிதி கூறினார்.

தெய்வீக கைங்கர்யப் பேரவை என்பது குறிப்பிட்ட சாதியை மட்டும் காப்பாற்றும் அமைப்பு அல்ல. சைவ சிந்தாந்தம், ஆகமம் என்பது அறிவியல். ஈர்ப்பு சக்தி, வானியல், ஆகமம், சிற்ப சாஸ்திரம் இப்படி பலவற்றை கொண்டதுதான் கோயில். முறைப்படி படிக்காதவர்களை கோயில்களில் நியமிப்பது நியாயமில்லை. மன்னர்கள் கோயில்களை கட்டி சிவாச்சாரியார்களிடம்தான் ஒப்படைத்தார்கள். நால்வர் இல்லை என்றால் தமிழ் இல்லை. இந்துக்களை இந்துக்களாக மதம் மாற்றுவதுதான் எங்கள் வேலை.

3 ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் மிக்க சனாதனத்தின் முதுகெலும்புதான் கோயில். சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் இல்லை என்றால் கோயில் ஏது? அசுரர்கள் பிராமணர்களை அழித்தனர், அதுதான் இப்போதும் நடக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்து ராணுவ கட்டுக்கோப்புடன் செயல்பட வேண்டும். சர்ச்சுகளிலும், மசூதிகளிலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். இந்துக் கோயில்களில் அதுபோன்று நடக்கிறதா? சிவாச்சாரியார்களும், பட்டாச்சாரியார்களும் இதைச் செய்ய வேண்டும்.

அடுத்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் யார் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும். ஹிந்துக்களுக்கு எதிரான போக்கை கொண்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். எல்லோரும் பிறக்கும்போது ஹிந்துக்கள்தான். மதச்சின்னங்களை தரிக்க, மத அடையாளங்களை வெளிக்காட்ட தயங்கக் கூடாது. தெய்வீக கைங்கர்யப் பேரவையை மகத்தான இயக்கமாக கொண்டு வர வேண்டும்.” என்று கூறினார்.

தமிழ்நாடு வி.ஹெச்.பி. மாநில செயல் தலைவர் செல்லமுத்து ஐ.ஏ.எஸ்(ஓய்வு), அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கம் கீர்த்திவாச சிவாச்சாரியார், முத்துசாமி சிவாச்சாரியார், காளிகாம்பாள் கோயில் காளிதாஸ் சிவாச்சாரியார், தமிழ்நாடு அர்ச்சகர்கள் சங்கம் பாலசுப்ரமணிய சிவாச்சாரியார், தமிழ்நாடு சிவாச்சாரியார்கள் நலச்சங்க தலைவர் திருவையாறு சுரேஷ் சிவாச்சாரியார், அர்ச்சகர் சாகர சங்கம் ராஜா குருக்கள், தமிழ்நாடு அர்ச்சகர் சமூக நலச்சங்கம் புலவர் பாலசடாட்சரம், ஆகம வல்லுநர் குழு பழனி பாலசுப்ரமணி சிவாச்சாரியார் உள்ளிட்ட பலர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry