கொடிமரத்தைத் தாண்டி அரசு கோயிலுக்கு உள்ளே வரக்கூடாது! IAS போன்று TAS படிப்பும் அவசியம்! ‘தினமலர்’ கோபால்ஜி ஆவேசம்!

0
72

கோயில் கொடிமரத்தைத் தாண்டி அரசு உள்ளே வரக்கூடாது என்று கூறியுள்ள தெய்வீக கைங்கர்யப் பேரவைத் தலைவர் R.R. கோபால்ஜி, IAS போன்று TAS என்ற படிப்பை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ஒரு அங்கமான, தெய்வீக கைங்கர்யப் பேரவையின் 2-வது ஆலோசனைக் கூட்டம், சென்னையில், தியாகராய நகரில் நடைபெற்றது. தமிழ்நாடு விஹெச்பி நிறுவனர் வேதாந்தம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய கோபால்ஜி, “சனாதன தர்மத்தை வேரறுக்க நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன. அதில், 10 ஆயிரம் கோயில்கள் பாழடைந்து விட்டன. பல கோயில்களில் பூஜைகளே நடப்பதில்லை.

400 கோயில்கள் மட்டுமே சொல்லிக்கொள்ளும் படியாக இருக்கிறது, அதில் 50 கோயில்களில் மட்டுமே, பக்தர்களின் பெரு வருகையால் வருமானம் அதிகம் கிடைக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கோயில் என்று ஆவணங்களில் உள்ள இடத்தில், கடைகள் இருக்கின்றன. இதுபோன்ற அவலங்களுக்கு இந்து சமய அறிநிலையத்துறை அதிகாரிகளே காரணம்.

கோயில்கள் எந்த ஆகமத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளதோ, அந்த ஆகமத்தின் கீழ்தான் பூஜைகள் நடக்க வேண்டும் என்பது நியதி. இதை மாற்ற அதிகாரிகளுக்கோ, திமுகவுக்கோ உரிமை இல்லை. வேண்டுமானால், திமுக சொந்தமாக கோயில் கட்டி, அவர்கள் விருப்பப்படி செய்து கொள்ளட்டும்.

கடவுள் நம்பிக்கையை தண்ணீர் ஊற்றி வளர்ப்பவர்கள் அர்ச்சகர்கள்தான். கோயில் என்றாலே, பிராமணர்கள் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. கோயில்களின் அன்றாட நியமங்களில் எல்லா சமுதாய மக்களுக்கும் பங்கு இருக்கிறது. கோயில் சம்பிரதாயங்களில் அரசு தலையிடக் கூடாது. கோயில் கொடி மரத்தைத் தாண்டி அரசு உள்ளே வரக்கூடாது. கிறிஸ்தவ மதத்தில் சம உரிமை கோரி தலித் கிறிஸ்தவர்கள் போராடுகின்றனர். அரசு அதில் தலையிடுவதில்லை. ஆனால், இந்து சம்பிரதாயங்களில் தலையிடுகிறார்கள்.

இஸ்லாமியர்கள், தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், குடும்பத்துடன் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். அதேபோல், இந்துக்களும் உரிமைக்காக குடும்பத்துடன் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கோயில் பிரச்சனை என்றால், அது அர்ச்சகர்களுக்கானது, பிராமணர்களுக்கானது என்ற பார்வையே மக்களிடம் இருக்கிறது. அது தவறு, பல சமுதாயத்தினரும் கோயிலின் ஒரு அங்கம்தான் என்பதை உணர வேண்டும்.” என்றார்.

மேலும் பேசிய அவர், “சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், கோயில் பூஜை செய்வோர், ஓதுவார்கள், இசைஞர்கள், மடப்பள்ளி பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஸ்ரீபாதம், பிரபந்தம் வாசிப்பவர்கள், பரம்பரை அறங்காவலர்கள், இசைக்கலைஞர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட அமைப்புகளை தெய்வீக கைங்கர்யப் பேரவையின் கீழ் ஒருங்கிணைக்க உள்ளோம். கோயில் சார்ந்தோருக்கான உரிமைகளை அரசிடம் கேட்டுப்பெற இது பேருதவியாக இருக்கும். தமிழ்நாட்டில், கோயில் உள்துறையைப் பொறுத்தவரை சுமார் 5 லட்சம் பேருக்கு மேல் இருப்பார்கள். பிரிந்துகிடப்பவர்கள் ஒன்றிணைய வேண்டும். முதல்கட்டமாக பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக மணலூர்ப்பேட்டை கே. கோபிநாத், சோமசுந்தரம் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

லட்சியமே லட்சம்தான்(பணம் அல்ல) என்ற அடிப்படையில்தான் பேரவை செயல்பாடுகள் இருக்கும். அதாவது, மற்றவர்கள் திரும்பிப் பார்க்கும் வகையில், குறைந்தது ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் மாநில மாநாட்டை தை மாதத்துக்குப் பிறகு கூட்டுவோம். அதில், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றலாம். IAS போன்று Temple Administration Service (TAS) என்ற படிப்பை தொடங்க வேண்டும். இதை முடித்தவர்கள் மட்டுமே, இந்து சமய அறநிலையத்துறை JC, AC-க்களாக நியமிக்கப்பட வேண்டும்

தெய்வீக கைங்கர்யப் பேரவையின் அங்கமாக உள்ள பாடசாலைகளில் இருந்து சான்றிதழ் பெற்றவர்களை மட்டுமே அரசு அர்ச்சகர்களை தேர்வு செய்ய வேண்டும். அர்ச்சகர்களுக்கு அரசு மிகவும் குறைவான அளவிலேயே கைங்கர்ய தட்சணை (ஊதியம்) கொடுக்கிறது. நடப்பு சூழலுக்கு ஏற்ப இதை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கையால், சிவாச்சாரியார்கள்பக்தர்கள் இடையே இடைவெளி அதிகமாகிவிட்டது. ஒருக்காலும் நாம் நமது உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது. அனைத்து ஊர்களில் பக்தர்கள் பேரவையை தொடங்கி, அதை தெய்வீக கைங்கர்யப் பேரவையோடு இணைக்கலாம். சமய வகுப்புகளை தொடங்குவதுடன், தாய் மதம் திரும்புதல் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். சிவாச்சாரியார், பட்டாச்சாரியார் தொடங்கி கோயில் ஊழியர்கள் அனைவரும் அரசின் உரிய அங்கீகாரத்துடன் செயல்பட தெய்வீக கைங்கர்யப் பேரவை நடவடிக்கை எடுக்கும்.” என்று தெரிவித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry