சண்டிகரில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்றும், இன்றும் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் ஜிஎஸ்டி வரிவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
வரிவிகிதம் உயர்த்தப்பட்ட பொருட்களின் விவரங்கள்:
எல்இடி பல்புகள், தண்ணீர் இறைக்க பயன்படும் மோட்டார்கள், அச்சிடுதல், எழுதுதல் மற்றும் வரைதல் மை, வரைதல் கருவிகள், கத்தி, பிளேடு, ஸ்பூன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மாவு அரைக்கும் வெட் கிரைண்டர்களுக்கான வரி, அரிசி ஆலையில் பயன்படுத்தப்படும் பல்வேறு இயந்திரங்கள், பெட்ரோல் மற்றும் நிலக்கரியில் இருந்து எடுக்கப்படும் மீத்தேனுக்கான வரி ஆகியவை 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் ஹீட்டர்கள், தோல் பொருட்கள், பெட்ரோல் மற்றும் நிலக்கரியில் இருந்து எடுக்கப்படும் மீத்தேனுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பால், தயிர், பனீர் போன்ற பேக் செய்யப்பட்ட உணவுகள், அரிசி, கோதுமை போன்ற பேக் செய்யப்பட்ட உணவுகள் ஆகியவற்றுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. உலர்ந்த பருப்பு காய்கறிகள் மற்றும் மக்கானா, கோதுமை அல்லது மெஸ்லின் மாவு, வெல்லம், பஃப்டு ரைஸ், ஆர்கானிக் உணவு, உரம் மற்றும் உரம் ஆகியவற்றுக்கும் 5 சதவீத வரி விதிக்கப்படும்.
ஒரு நாளைக்கு ரூ.1,000 அல்லது அதற்கும் குறைவாக வாடகை வசூலிக்கும் ஹோட்டல்கள் மற்றும் 5000 ரூபாய்க்கு மேல் வாடகை வசூலிக்கும் மருத்துவமனை அறைகளுக்கு 12 சதவீத வரி விதிக்கபப்படும். தனியாகவோ அல்லது மொத்தமாகவோ வங்கிகளால் வழங்கப்படும் காசோலைகளுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும், மேப்களுக்கும் இனி 12 சதவீத வரி விதிக்கப்படும். பேக் செய்யப்படாத, லேபிளிடப்படாத மற்றும் முத்திரையிடப்படாத பொருட்களுக்கு தொடர்ந்து ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும். அதுபோல சில மருத்துவ பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்வதற்காக மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை இந்த மாதத்திற்கு மேல் நீட்டிப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் மாநிலங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன.
இது குறித்து பேசிய புதுச்சேரி நிதியமைச்சர் கே.லட்சுமிநாராயணன், அனைத்து மாநிலங்களும் இழப்பீட்டு முறையை நீட்டிக்கக் கோரியதாகவும், ஆனால் இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
ஜூலை 1, 2017 முதல் நாடு தழுவிய சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது, ஜூன் 2022 வரை ஐந்து ஆண்டுகளுக்கு புதிய வரியால் ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடுசெய்ய மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசால் உறுதியளிக்கப்பட்டது. கரோனா தொற்றுநோயால் இரண்டு ஆண்டுகள் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்த நிலையில் இந்த இழப்பீட்டு முறையை நீட்டிக்க பெரும்பாலான மாநிலங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry