அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது! ஐகோர்ட் உத்தரவால் ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு!

0
253

ஜூலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு  தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய உத்தரவில், ‘‘அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். ஆனால், மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்டுள்ள 23 தீர்மானங்களை மட்டுமே ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். இருப்பினும் மற்ற புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் அதுகுறித்த எந்த முடிவையும் எடுக்கக் கூடாது’’ என தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த 23ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானமும் நிராகரிக்கப்பட்டதால் கூட்டத்தின் பாதியிலேயே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர். இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வு பிறப்பித்த உத்தரவை மீறி பொதுக்குழுவில் புதிய தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதாக கூறி பொதுக்குழு உறுப்பினரும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான சண்முகம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களை நிராகரித்து விட்டனர். பின்னர், கட்சியின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நிரந்தரமாக நியமிப்பதாக எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றுவதாக பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் அறிவித்தனர். அவைத் தலைவரை நியமிக்கும் இந்த தீர்மானம், ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களில் இடம் பெறவில்லை. நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை மீறி இவர்கள் செயல்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பும் சட்டவிரோதமாக வெளியிட்டனர்.

எனவே, கட்சியின் நிரந்தர அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனை நியமித்து இயற்றப்பட்ட தீர்மானத்துக்கும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று சட்டவிரோதமாக வெளியிடப்பட்ட அறிவிப்புக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் விதமாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர் சண்முகம் தரப்பில் முறையீடு ஒன்று முன்வைக்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் ஜூலை 11ல் நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரியதையும் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ஜூலை 11ல் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டார். மேலும் சண்முகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாகவும் நீதிபதி துரைசாமி அமர்வு தெரிவித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry