தமிழகத்தில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக, தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அண்மையில் உத்தரவிட்டது. அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள இந்த 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில் ஓராண்டுக்குள் நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12,000 என மிகக் குறைந்த ஊதியமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள், ஆசிரியர் சங்கங்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
Also Read : தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கும், அக்னிபாத்-க்கும் என்ன வித்தியாசம்? சங்கங்கள் கொந்தளிப்பு!
இந்த நிலையில், தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘ தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது. முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது. தற்காலிக ஆசிரியர் நியமன முறையில், தகுதியற்றவர்களை, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியில் அமர்த்த நேரிடும். மனு குறித்து அரசு தரப்பில் விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும். வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்படுகிறது,’என்றார்.
முன்னதாக இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் சிறப்பு பணி அலுவலர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “பள்ளி மேலாண்மை குழு வழியாக தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதி தேர்வு பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்க அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னுரிமைகள் எதனையும் பின்பற்றாமல் தங்களது விருப்பப்படி ஆசிரியர் நியமனம் செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன. ஆசிரியர் தகுதித் தேர்வு தகுதி பெற்ற நபர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விரிவான தெளிவுரைகள் வழங்கப்படும் வரை தற்காலிக ஆசிரியர் பணியிடத்தை நிரப்பக் கூடாது.
இதுகுறித்த தெளிவுரைகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. அதற்குப் பிறகு உரிய முன்னுரிமைகளை பின்பற்றி தகுதியுள்ள அனைவருக்கும் வாய்ப்பளித்து தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதனை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உத்தரவு பிறப்பித்தது பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார். ஆனால், நியமனத்தை தற்காலிகமாக நிறுத்தச் சொல்லி சுற்றறிக்கை அனுப்பியிருப்பது இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் சிறப்பு பணி அலுவலர். இவருக்கு இந்த அளவுக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், 13,331 தற்காலிக ஆசிரியர் பணியை வாபஸ் பெற்று, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தரப்பணி வழங்க வேண்டும் என்று சென்னை DPI வளாகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நூற்றுக்கணக்கான தேர்வர்கள் டிபிஐ வளாகத்தில் மொட்டை அடித்து அரை நிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry