ஓபிஎஸ் பொருளாளர் பதவியும் பறிபோகிறது! துரோகத்தின் அடையாளம் என ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

0
376

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்றது. பின்னர் நிலையில் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்ட நிலையில், அவைத் தலைவர் தலைமையில் இன்றைய கூட்டம் நடைபெற்றது” என்றார்.

மேலும் பேசிய அவர், “74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர். உடல்நலக்குறைவால் சிலர் முன்னரே தெரிவித்துவிட்டு கலந்துகொள்ளவில்லை. ஜூலை 11-ஆம் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.

பல முக்கிய முடிவுகள் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. 11-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு அழைப்பிதழ் அனுப்புவது பற்றி ஆலோசித்தோம். கூட்டத்தை நடத்த தலைமை நிலையச் செயலாளருக்கு அதிகாரமுண்டு. ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடிப்படை தெரியவில்லை. அதிமுக-வுக்கு பல துரோகங்களை செய்தவர் அவர். ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளம்.

கூட்டத்தில் எடுத்த முடிவுகள் அனைத்தையும் இப்போது கூற இயலாது. எதைச் சொல்லவேண்டுமோ அதை சொல்லிவிடுகிறேன். எதை சொல்லக்கூடாதோ அதை சொல்ல மாட்டேன். பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவாரா என்பது பொதுக்குழு தான் முடிவு செய்யும்” என்று கூறினார்.

இந்நிலையில், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, அலுவலக வளாகத்தில் உள்ள பேனரில் ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படம் கிழிக்கப்பட்டது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry