எல்கேஜி., யுகேஜி சேர்க்கைக்கு மறுப்பு! அரசுப் பள்ளிகளை நாடும் பெற்றோர் ஏமாற்றம்! அதிகாரிகளால் தடுமாறும் கல்வித்துறை!

0
451

தமிழகத்தில் அரசுப் பள்ளி வளாகங்களில் இயங்கும் 2,381 அங்கன்வாடிகளில் கடந்த 2019-ல் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த வகுப்புகளுக்கு பாடம் நடத்த, அரசு தொடக்கப் பள்ளிகளில் உபரியாக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கியதால் பெற்றோரும் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை சேர்த்தனர்.

Also Read: TET தேர்வு சரி; NEET தேர்வு தவறா? டெட் தேர்வுக்கு விலக்கு பெற தமிழக அரசு முயற்சிக்குமா? வேல்ஸ் பார்வை!

ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, அரசுப் பள்ளிகளில் இயங்கிய மழலையர் வகுப்புகள் அங்கன்வாடிகளுக்கு மாற்றப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை சமீபத்தில் அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, ‘மழலையர் வகுப்புகள் அரசுப் பள்ளிகளிலேயே தொடர்ந்து இயங்கும், இதற்கு தகுதியான சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்’ என்று பள்ளிக்கல்விஅமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.

Also Read : LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்! கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய அமைச்சர்!

ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்டு 2 வாரங்கள் ஆகியும், மழலையர் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் சேர்க்கை கோரி வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் அறிவித்து பல நாட்கள் ஆகியும், மழலையர் வகுப்பு சேர்க்கை, ஆசிரியர் நியமனம் குறித்து கல்வித் துறை இன்னும் ஒரு ஆலோசனைக் கூட்டம்கூட நடத்தவில்லை. தனியார் பள்ளிகள் ஒருமாதம் முன்பே சேர்க்கையை முடித்துவிட்டன. அரசுப் பள்ளியில் நிலவும் தாமதத்தால் பெற்றோர் மீண்டும் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளதாக கல்வியாளர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறியபோது, ‘‘அரசுப் பள்ளியிலேயே மழலையர் வகுப்பு தொடங்கப்பட்டது நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் வரப் பிரசாதமாக இருந்தது. அரசுப் பள்ளிகளில் சீருடை, புத்தகம், நோட்டு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுவதால் செலவு பல மடங்கு குறைகிறது.

ஆனால், இந்த ஆண்டில் மழலையர் வகுப்பில் குழந்தைகளை சேர்க்க பள்ளிக்கு சென்றால் ஆசிரியர்கள் முறையாக பதில் அளிப்பதில்லை. ‘சேர்க்கைக்கு அனுமதி தரப்படவில்லை. 2 வாரங்கள் கழித்து வாருங்கள்’என்று கூறி திருப்பி அனுப்புகின்றனர். நர்சரி பள்ளியில் கட்டணம் செலுத்த முடியாததால்தான் அரசுப்பள்ளிகளை நாடி வருகிறோம். எனவே, தமிழக அரசு தலையிட்டு, மழலையர் வகுப்பு சேர்க்கையை விரைந்து நடத்த அறிவுறுத்த வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘மழலையர் வகுப்பு சேர்க்கை தொடங்குவது குறித்து கல்வித் துறையிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல் வழங்கப்படவில்லை. அரசு அனுமதியின்றி குழந்தைகளை சேர்க்க முடியாது. மீறி சேர்க்கை நடத்தினால் குழந்தைகளுக்கு இலவச பாடப் புத்தகம்,சீருடை வழங்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே, சேர்க்கைக்காக வருவோரிடம் விவரங்களை வாங்கி வைத்துக்கொண்டு அனுப்புகிறோம். அரசு அனுமதி கிடைத்தபிறகு அவர்களை தொடர்பு கொண்டு சேர்க்கை வழங்கப்படும்’’ என்றனர்.

Also Read : தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கும், அக்னிபாத்-க்கும் என்ன வித்தியாசம்? சங்கங்கள் கொந்தளிப்பு!

கல்வி ஆர்வலர்களிடம் இதுகுறித்து பேசியபோது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார். அப்படியே அவர் ஏதாவதொரு முடிவெடுத்து சொன்னாலும் கல்வித்துறை உயர் அதிகாரி அதை செயல்படுத்துவது இல்லை. பல விஷயங்களில் அமைச்சர் சொல்வது ஒன்றாகவும், அதிகாரிகள் அதற்கு நேர்மாறாக செய்வதையும் நம்மால் காண முடியும். இதன்தொடர்ச்சிதான் இந்த விவகாரமும். அரசுப் பள்ளிகளிலேயே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இயங்கும், இதற்கு தகுதியான சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் அறிவித்தும், அதற்கு செயல்வடிவம் கொடுக்க கல்வித்துறை உயர் அதிகாரி தயாராக இல்லை. இதேநிலை நீடித்தால் ஆட்சிக்கு மேலும் கெட்டபெயர் ஏற்படுவது உறுதி.” இவ்வாறு அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

With Inputs Hindu Tamil Thisai

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry