வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு ரத்து! அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என ஐகோர்ட் கிளை தீர்ப்பு!

0
196

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டத்தை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.

இடஒதுக்கீடுக்காக நடந்த போராட்டம்

தமிழகத்தில் மொத்த இட ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியின் போது பிப்ரவரி 28-ல் நடைபெற்ற கடைசி நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்கினார். இதைத்தொடர்ந்து ஆட்சி அமைத்த திமுகவும் இந்த இடஒதுக்கீடு முறையை பின்பற்றியது. இதன் அடிப்படையில் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்றது.

இந்நிலையில் அவசரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த பல்வேறு சாதிகள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில்மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பல்வேறு சாதிகள் உள்ளன. முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் ஒரு சாதிக்கு மட்டும் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது சட்டவிரோதம்.

68 சமூகங்களைக் கொண்ட சீர் மரபினருக்கு 7 சதவீதமும், எஞ்சிய 40 சமூகத்தினருக்கு 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற சாதியைச் சேர்ந்த மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாடு அரசு தரப்பில், மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983 ல் நடத்திய கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 13.01 சதவீதம் என்ற 65,04,855 வன்னியர்கள் உள்ளதாக கிடைக்கப்பெற்ற நம்பத்தகுந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.முரளிசங்கர் அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்து நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர். அந்த உத்தரவில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பல்வேறு சாதிகள் உள்ளன. அப்படியிருக்கும்போது முறையாக கணக்கெடுப்பு நடத்தாமல் ஒரு சாதிக்கு மட்டும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இதனால் வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்தை ரத்து செய்கிறோம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry