விபூதியை எப்படிப் பூச வேண்டும்? விபூதி தயாரிப்பது எப்படி? குடும்பம், தொழில் பிரச்னைகளை தீர்க்கும் சித்தர்களின் ஜீவ பஸ்ப விபூதி!

0
322

முடிவில் யாவரும் ஒருபிடிச் சாம்பல் ஆவர்என்பதை உணர்த்தும் திருநீறு அல்லது விபூதியை சைவ மதத்தினர் அனைவரும் தரிக்க வேண்டும். விபூதி என்றால் ஐஸ்வர்யம், மகிமை என்று பொருள். வடக்கு அல்லது கிழக்கு திசையில் நின்று, பூமியில் சிந்தாதபடி விபூதியை எடுத்து அண்ணாந்து பஞ்சாட்சர மந்திரம் ஜபித்து பூசிக்கொள்ள வேண்டும்.

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு

செந்துவர்வாயுமைபங்கன்திருஆலவாயான்திருநீறே

என்ற திருநீற்றுப் பதிகத்தை திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். விபூதி நோய்களை நீக்கும் அருமருந்தாகவும், சிவத்தொண்டிற்கு வழிகாட்டியாகவும், சிவசிந்தனை மேலிடுவதற்கு உதவும் சாதனமாகவும் இருக்கிறது. இத்தகைய சிறப்புமிக்க விபூதியைப் பற்றியும், அதைத் தயாரிக்கும் முறைகளைப் பற்றியும் பார்க்கலாம்.

4 வகை விபூதி

நான்கு வகைகளில் விபூதி தயாரிக்கப்படுகிறது. இவைகளில் கல்பம் என்று சொல்லப்படும் விபூதி மிகச்சிறப்பான அருள் சாதனமாக கருதப்படுகிறது. கல்பம் என்பது, கன்றுடன் கூடிய  பசுவின் சாணத்தை, பூமியின் விழும் முன் பாகல தாமரை இலையில் பிடித்து, உருண்டையாக்கி, பஞ்ச பிரம்ம மந்திரங்களால், சிவாக்கினியில் எரித்து எடுப்பதாகும். இதனைகல்பத் திருநீறுஎன்பார்கள்.

இரண்டாவது, காடுகளில் கிடைக்கும் பசுஞ் சாணங்களைக் கொண்டு, முறைப்படி தயாரிக்கப்படுவதுஅணுகல்பத் திருநீறுஎனப்படும். மூன்றாவது, மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தை, காட்டிலேயே தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவதுஉபகல்பத் திருநீறுஆகும். நான்காவது, அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தை, சுள்ளிகளால் எரித்து எடுப்பதற்குஅகல்பத் திருநீறுஎன்று பெயர்.

விபூதி தயாரிக்கும் முறை

விபூதிக்கான பலனைப் பெற, அதை முறைப்படி தயார் செய்வது அவசியம். விபூதி தயாரிக்கும் முறையை தெரிந்துகொள்ளலாம்.  திருநீற்றுப் பச்சிலைகளையும், வில்வப்பழ ஓட்டையும் நன்கு அரைத்து, அதனை பசுஞ்சாணத்துடன்  கலக்க வேண்டும்.  இந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும். நன்றாகக் காய்ந்ததும், அவற்றை ஒன்றாக அடுக்கிவைத்து, நெல் உமியால் மூடி, நெருப்பில் புடம் போடவேண்டும். தீ தணிந்த பிறகு, இந்த சாண உருண்டைகள் வெண்மையானதாகிவிடும். நன்கு வெந்த இந்த சாண உருண்டைகளை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். தேவையானபோது ஒரு உருண்டையை எடுத்து தூளாகச் செய்து, அந்தத் தூளை மெல்லிய துணியில் சலித்தால் மிகவும் மென்மையான திருநீறு கிடைத்துவிடும்.

அடுத்ததாக காராம்பசுவின் சாணத்தை நிலத்தில் விழும் முன் பிடித்து, அதன் கோமியத்தால் ஈரமாக்கி, உருண்டைகள் பிடித்து காய வைக்க வேண்டும். அதை, திரிபுர ஸம்ஹார காலம் என்று வர்ணிக்கக் கூடிய கார்த்திகை மாத பெளர்ணமியும், கிருத்திகை நக்ஷத்திரமும் இணைந்த கார்த்திகை தீபத் திருநாளில், எரியூட்ட வேண்டும்.

அது திறந்த வெளியில் தானாகவே ஆறவேண்டும். மார்கழி மாதம் முழுவதும் பனி பொழிந்து, அந்த சாணச் சாம்பல் சற்றே நிறம் மாறிக்கொண்டிருக்கும். தை மாதம் முழுவதும் அச்சாம்பலை கிளறிக்கொண்டேயிருக்க வேண்டும். பனி பெய்ய பெய்ய சாம்பலின் கரிய நிறம் மாறி வெளிறும்.

மாசி மாத மஹா சிவராத்திரியின் காலை நேரத்தில் அச்சாம்பலை எடுத்து, வஸ்திரகாயம் செய்ய வேண்டும். (வஸ்திரகாயம்ஒரு பானையின் வாயில் தூய்மையான துணியைக் கட்டி, சாம்பலை எடுத்து, துணியின் மேல் கையால் தேய்க்க தேய்க்க, மென்மையான துகள்கள் பூசிக்கொள்ளத் தகுந்த விபூதியாக பானையினுள் சேரும்).

அதை, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பிறகு, சிவபக்தர்கள் தரிக்க வேண்டும். இவைகளைத் தாண்டி சாந்திகபஸ்மம், காமதபஸ்மம், பெளஷ்டிகபஸ்மம் போன்ற முறைகளிலும் விபூதி தயார் செய்யப்படுகிறது. அடுத்ததாக சித்தர்கள் அருளிச் சென்ற, சிறப்புமிக்க ஜீவ பஸ்ப விபூதி தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.

சித்தர்களின் ஜீவ பஸ்ப விபூதி

1. சுத்தமான பசுஞ் சாண விபூதி – 2 கிலோ

2. படிகார பஸ்பம் – 10 கிராம்

3. கல் நார் பஸ்பம் – 10 கிராம்

4. குங்கிலிய பஸ்பம் – 10 கிராம்

5. நண்டுக்கல் பஸ்பம் – 10 கிராம்

6. ஆமை ஓடு பஸ்பம் – 10 கிராம்

7. பவள பஸ்பம் – 10 கிராம்

8. சங்கு பஸ்பம் – 10 கிராம் 

9. சிலா சத்து பஸ்பம் – 10 கிராம் 

10. சிருங்கி பஸ்பம் – 10 கிராம்

11. முத்துச் சிப்பி பஸ்பம் – 10 கிராம்

12. நத்தை ஓடு பஸ்பம் – 10 கிராம்

இவைகள் அனைத்தையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நன்றாக கலந்து ஒரு செம்பு பாத்திரத்தில் அல்லது ஸ்டீல் பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கவும். பசுஞ்சாணத்தோடு, பல ஜீவராசிகளின் உயிர் பஸ்பங்களை முறைப்படி அளவோடு கலந்து தயாரிக்கப்படுவதால், இதற்கு ஜீவ பஸ்ப விபூதி என்று பெயர். இதனை நீரில் குழைத்து இடும்போது ஒருவித கதிர்வீச்சு வெளிப்படும். இதுவே மிகப்பெரிய சக்தி யாகும். மந்திரங்கள் ஜபித்து இந்த விபூதியை இடும்போது தொழில் பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் தீரும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதனைப் பயன்படுதத

வேண்டும். இதனை நமது நெற்றியிலும், தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம் உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் பூசி வந்தால், அந்த மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீரை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும்.

விபூதியின் சிறப்பு என்னவென்றால், பரமசிவனின் ஐந்து முகங்களிலிருந்தும் தோன்றிய நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களின் தன்மையை விபூதி கொண்டிருக்கின்றது. நமது உடல் பல துர்க்கந்தங்களை உடையது. இந்த உடலைச் சுத்தப்படுத்தி, இதனுள் உள்ள ஆத்மாவையும் பரிசுத்தப்படுத்த வல்லதுதான் பஸ்மமாகிய திருநீறு. தாங்காத வயிற்று வலியால் துடிதுடித்த அப்பர் சுவாமிகள், தனது தமக்கையார் கையால் விபூதி பெற்றவுடன், வலி நீங்கப் பெற்று சைவத்திற்கு பெரும் தொண்டாற்றினார் என்பது வரலாறு.

ஆண்கள், பெண்கள் விபூதி இடுவது எப்படி?

விபூதியை அணிவதற்கும் சில விதிமுறைகள் அனுஷ்டானங்கள் விதிக்கப்பட்டுள்ளன. விபூதியை தரித்துக்கொள்ளும்போது, கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு திசை பார்த்தோதான் அணிந்துகொள்ளவேண்டும். வலக் கையின் நடுவில் உள்ள மூன்று விரல்களால் விபூதியை எடுத்து தலையை நிமிர்த்தி அணிந்துகொள்ளவேண்டும். விபூதியை எடுக்கும்போது, ‘திருச்சிற்றம்பலம்என்றும், விபூதியை தரிக்கும்போது பஞ்சாட்சர மந்திரத்தையும் ஜபிக்கவேண்டும்

விபூதியை அனைத்து நிலையிலிருப்பவரும் (பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாசம்) பூசிக்கொள்ளலாம் என்று ஸூதஸம்ஹிதா வலியுறுத்துகின்றது.  சிவாலயங்களில், விபூதியை பிரஸாதமாக வலது உள்ளங்கையில் மட்டுமேதான் வாங்க வேண்டும். ஆண்கள் விபூதியை திரிபுண்டரமாகவும் (விபூதியைத் தண்ணீரில் குழைத்து நெற்றியில் மூன்று கிடைக்கோடுகளாகவும்), உத்தூளனமாகவும் (தண்ணீரில்லாமல் வெறும் விபூதியை) அணிந்து கொள்ளலாம்.

விபூதியை தண்ணீரில் குழைத்து, ஆட்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல் கொண்டு மூன்று கிடைக்கோடுகளாக, உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை, உச்சந்தலை; நெற்றி; மார்புப் பகுதி; தொப்புளுக்கு சற்று மேல்; இடது தோள்பட்டை; வலது தோள்பட்டை; இடது கை மற்றும் வலது கையின் நடுவில்; இடது மற்றும் வலது மணிக்கட்டில்; இடது மற்றும் வலது இடுப்புப் பகுதியில்; இடது மற்றும் வலது கால் நடுவில்; முதுகுக்குக் கீழ் பகுதி; கழுத்து முழுவதும்; இரண்டு காதுகளின் பின்புறம் உள்ள குழியில். காலையிலும் மாலையிலும், கோயிலுக்குச் செல்லும்போதும், இரவு படுக்கப்போகும் முன்பும் விபூதி தரித்துக்கொள்ளலாம். பூஜை காலங்களிலும் நிச்சயமாக விபூதி தரிக்க வேண்டும்.

பெண்கள் தண்ணீரில் குழைக்காமல் விபூதியை இட்டுக்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. ஆட்காட்டி விரல் அல்லது மோதிர விரலால் விபூதியை எடுத்து, நெற்றியில் ஒற்றைக் கோடாக மட்டுமே பெண்கள் தரிக்க வேண்டும். (சிவ தீட்சை பெற்ற பெண் அடிகள் மூன்று கோடுகளாக அணியலாம்) விபூதிப் பூசிக்கொள்ளும் போது, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தையோ அல்லது சிவசிவ என்றோ சொல்லிக்கொண்டுதான் தரிக்க வேண்டும்.

விபூதி பூசுவதின் பலன்கள்

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை

மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்

தங்கா வினைகளும் சாரும் சிவகதி

சிங்கார மான திருவடி சேர்வரே!

என்கிறார் திருமூலர். விபூதி தரிப்பதால் மனதில் இறைபக்தி மேலோங்கி, நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்களை விலக்கும். நல்ல எண்ணங்கள் தோன்றும். நிலையான செல்வமும், நல்ல குடும்பம், நல்ல நண்பர்களின் சேர்க்கை என்று அளவற்ற நற்பலன்களைப் பெறலாம். உடல் ஆரோக்கியம் சிறக்கும். தகாத செயல்களைச் செய்வதில் இருந்து மனம் விலகிச் செல்லும். எந்த விதத்திலும் தொல்லைகள் நம்மை அணுகாமல் பாதுகாக்கும் கவசமாகத் திகழும்.அனைத்துப் பேறுகளையும் அளிப்பதுடன், பிறவாப் பேரின்ப நிலையையும் அருளும்.

பஸ்மாபிஷேகம் – அதாவது, குளிக்கும் நீரில் விபூதியைத் தூவி விட்டு, தலை முழுக அனைத்து விதமான தீட்டுக்களும் அகன்றுவிடும். இது இருபாலருக்கும் பொருந்தும். விபூதி தரிப்பவர்கள் சிவ அம்சமாகவே கருதப்படுவார்கள். சைவர்களின் பெருஞ் செல்வம் திருநீறு என்று சொன்னால் மிகையில்லை. நீரில்லா நெற்றி பாழ் என்று சொல்வதுண்டு, எனவே, திருநீறு பூசுவமோம் என்று உறுதியேற்போம்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry