‘அண்ணாத்த’ படத்துக்கு கூட்டம் கூடினால் கொரோனா வராது! சூரசம்ஹாரத்துக்கு பக்தர்கள் வந்தால் தொற்று பரவுமா?

0
60

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரத்தை ஒட்டி பக்தர்களுக்கு தடை போடப்பட்டுள்ளது. தியேட்டர்களை 100 சதவிகிதம் இயக்க அனுமதிக்கும் தமிழக அரசு, சூரசம்ஹாரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது சரியா? என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

File Image

திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் நடக்கும் சூரசம்ஹார விழா, உலக பிரசித்தி பெற்றது. இந்தாண்டு சஷ்டி திருவிழா, வரும் 4ம் தேதி துவங்கி 15ல் நிறைவடைகிறது. வரும் 9ம் தேதி சூரசம்ஹாரமும், அடுத்த நாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க, பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபற்றி தூத்துக்குடியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற பக்தர் கூறுகையில், “திருமணமான பெண்கள், குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக, திருச்செந்தூர் முருகனை நினைத்து, ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி திதியில் துவங்கி, ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டி திதி வரை விரதமிருப்பர். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்த உடன் விரதத்தை முடித்தால், நிச்சயம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த வேண்டுதலை நிறைவேற்ற, ஒவ்வொரு ஆண்டும் இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும், திருச்செந்தூருக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர்.

இது, ஒரு மதத்துக்கான நிகழ்ச்சி அல்ல; உணர்வபுப்பூர்வமான நிகழ்ச்சி. இப்படிப்பட்ட நிகழ்ச்சியை கொரோனாவை காரணம் காட்டி, கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பக்தர்களுக்கு தடை போடுவது சரியல்ல. 4ம் தேதி முதல் 8ம் தேதி வரையும் மற்றும் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரையும், தினமும் காலை 5:00 முதல் இரவு 8:00 வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் பெருமளவில் திரளமாட்டார்களா?

திமுக அரசின் மத துவேஷம்!

ஹிந்து கோவில் திருவிழாக்களுக்கு மக்கள் கூடி விட்டால், கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று, அரசு கூறுகிறது. ஆனால், தீபாவளியை ஒட்டி, நடிகர் ரஜினியின், ‘அண்ணாத்தபடம் ஆயிரத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீசாகிறது. இதற்காவே தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை நிரப்ப அனுமதி அளித்துள்ளனர். ரசிகர்கள் படம் பார்க்க ஒட்டுமொத்தமாக கிளம்பி வந்து, ஒரே இடத்தில் கூடும்போது பரவாத கொரோனா, கோவில் திருவிழாக்களுக்கு, பக்தர்கள் கூடினால் மட்டும் பரவி விடுமாம். ஏசி தியேட்டரில் அனைத்து இருக்கைகளிலும் ரசிகர்கள் அமர்ந்து படம் பார்க்கும்போது கொரோனா தொற்றாதா? இதை மத துவேஷம் என்று சொல்வதில் என்ன தவறு?

வேண்டுதலுக்காக இரண்டு, மூன்று ஆண்டுகள் தாடியும், தலை முடியும் வளர்த்து விட்டு, கந்த சஷ்டி விழாவின் போது, திருச்செந்தூருக்கு வந்து முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு கூட, கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. பக்தர்கள் வேதனையோடு, திருச்செந்தூரில் இருக்கும் சலூன்களில் தாடியை மழித்தும், மொட்டை அடித்தும் செல்லும் காட்சியைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. ஆறு நாட்களுக்கு, கோவிலுக்குள்ளேயே முழுமையான விரதம் இருந்து, ஆறாம் நாளில் சூரசம்ஹாரம் நடந்ததும், விரதத்தை முடிக்கும் பக்தர்கள், இந்த ஆண்டும் வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றனர். இது, முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதா என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மாவட்ட உயர் அதிகாரி ஒருவர், “யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கோடு, அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. தசரா மற்றும் திருச்செந்தூர் சூரசம்ஹார திருவிழா நிகழ்ச்சிகளை பொறுத்தவரை, ஆயிரக்கணக்கில் அல்ல, லட்சக்கணக்கில் மக்கள் கூடுவர். அதை அனுமதித்தால், மிகுந்த சிரத்தை எடுத்து குறைக்கப்பட்ட கொரோனா பரவல், ஒரே நாளில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அந்த எச்சரிக்கை உணர்வோடு தான், கோவில் திருவிழாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மற்றபடி, பக்தர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், அரசோ, மாவட்ட நிர்வாகமோ நடப்பதாக யாரும் எண்ண வேண்டாம்என்று கூறினார்.

Inputs from Dinamalar

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry