பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய்யை விற்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. கலப்படத்தை தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருள்நிதி பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “முந்திரி தோலில் தயாரித்த எண்ணெய்யை, சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்கின்றனர். இது ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கலப்படத்தால் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
சட்டப்படி எண்ணெய்யை சில்லறை விற்பனை செய்யக்கூடாது. பேக்கிங் செய்துதான் விற்பனை செய்ய வேண்டும். ஆகவே, கலப்பட எண்ணெய் விற்பனை செய்வதை எவ்வகையிலும் அனுமதிக்கக்கூடாது என சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் தரமான சமையல் எண்ணெய்களே விற்பனை செய்யப்படுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு தனது உத்தரவில், “சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யை, பேக்கிங் செய்யாமல் சில்லறை விற்பனை செய்ய இடைக்கால தடை விதிகப்படுகிறது. எண்ணெய்யை பாக்கெட்டில் அடைக்காமல் விற்கக் கூடாது என்று 2011ம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டம் கூறுகிறது.
சட்டப்படி தடை இருந்தும் சில்லறையில் எண்ணெய்யை விற்க அனுமதித்தது ஏன்? எண்ணெய்யில் கலப்படம் செய்வோர்கள் மீது ஏன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கூடாது? சமையல் எண்ணெயின் தரத்தை ஆய்வு செய்வதற்காக எத்தனை ஆய்வகங்கள் உள்ளன, கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இதில் விதிகளை மீறியதாக எத்தனை வழக்குகள் உள்ளன என்ற விவரங்களை மாவட்ட வாரியாக தாக்கல் செய்ய வேண்டும். ஜனவரி 18ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry